ஒற்றை பறவை

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

– ஸ்ரீனி.


வயல்களில் மறையும் சூரியன்.
எங்கோ கேட்கும் பாடல்.
பிரம்மாண்டத்தில் உறைய வைக்கும்
உயர்ந்த மலைத்தொடர்.
அதன் உச்சியை பிடிக்க பறக்கும்
பறவைக்கூட்டம்.
நலிந்த வயல்மேட்டின்மேல்
நடந்து செல்லும்
ஊன்றுகோல் தாங்கிய ஒற்றை அவ்வை.
இருட்டுவதற்குள் கடல் வீட்டை
சென்றடைய தலைதெறிக்க ஓடும் அருவிகள்.
நெடுந்துயர்ந்த பாறைகளின் நடுவே ஓடும்
ஆற்றுநீரின் தாலாட்டில்
லாந்தரில் நெருப்பு உறங்க
ஆடிச்செல்லும் ஒற்றை பரிசல்.
ஓரிடத்தில் நின்று களைப்படைந்த மேகங்கள்.
அவற்றின் அருகாமயில் குளிர் தாங்காமல்
என்றும் பச்சை போர்வை போர்த்தியிருக்கும்
மலைகளிடம் தேனீர் பருக எண்ணி
நெறுங்கி பேசும் மேகங்கள்.
உயர்ந்து நிற்கும் கோபுரத்தின்
உடைந்த பகுதிகளிலிருந்து
மணி ஓசையில் பறந்து செல்லும்
புறாக்கூட்டங்கள்.
பாதங்களில் புது உணர்வை கொடுக்கும்
கழுவிவிடப்பெற்ற தாழ்வாரங்கள்.
கதிரவனின் வருகையால்
புதுநாளை உணர்ந்து
தலையில் படர்ந்த பனியை
நீராக்கி குளிக்கும் பச்சைப் புல்வெளிகள்.

நினைக்க நினைக்க வளரும் நினைவுகள்
கவலை நேரங்களில் கண் மூடினால்
தேக்கம் இல்லாமல் வந்து
ஏக்கம் கொள்ளச் செய்யும்.
ஆனால், நிஜத்தின் சாயல் நினைவில் ஒன்றுமட்டும்
– ஒன்றிலும் நிலையாக உட்காராமல்
பறந்துகொண்டே இருக்கும் ஒற்றை பறவையாய்
என் மனம்.

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி