விடிவெள்ளி

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

— ஸ்ரீனி.


என்னை சுற்றி அதிர்வுகள்
என்ன நடக்கிறது இங்கே ?
கேள்விக்கணைகள் என்னுள்,
யாரோ கொடுத்த காபியை
மெதுவாகப் பருகினேன்.
அதிர்வுகள் பெரிதாகி,
சுற்றிலும் நடமாட்டங்கள்.

‘ஏனோஇந்த அவசரம் ? ‘
பதில் வரவில்லை
கேட்டது மனதிற்குள்.

புதிதல்ல எனக்கு..
வாசமில்லாமல் பூத்த பூ நான்
கருவூலத்தின் இருட்டை
இன்று வரை என் கண்கள் சுமக்கின்றன.
ரோஜாவின் இதழ்களாய் என் அவையங்களின்
செயல்பாடுகள் உதிர்ந்தன.
ஒரு சமயம் பூத்து குலுங்கிய நான்
இன்று வெறும் காம்பாக அமர்ந்திருக்கிறேன்
என் சக்கர நாற்காலியில்.

அதிர்வுகளே என் பாஷையாக
இது நாள் வரை கடத்தி விட்டேன்
இன்று
நான் உணர்ந்திராத அதிர்வுகள் !
ஏனோ என்னை சுற்றிலும்
ஏதோ நடக்கிறது
தலையை சுற்றுகிறது
உணராத நிகழ்வுகளின் உச்சகட்டமாய்
உள் செல்கிறேன்

என்றும் இல்லாமல் இன்று
‘காப்பாற்றுங்கள்.. ‘ என்று கதற நினைக்கிறேன்,
வெளிவந்தது என்ன வென்று கேட்கவில்லை
உட்கார்ந்த நிலையில் கீழே செல்கிறேன்,
ஓர் வெளிச்சப்புள்ளி என்னுள்
சிறிதாகி சிறிதாகி
இறுதியில்
மரைந்தே விட்டது..

மனித இனத்தோடு
தொடர்பை மொத்தமாய் இழந்தும்
என்னை போன்ற சிலரை
மேலும் மேலும் துரத்தும்
இதன் பெயர் தான் விதியா ?

பதிலை என் கல்லரையில் விட்டு செல்லுங்கள்,
பூக்களை கொன்று பிணங்களுக்கு
அஞ்சலி செய்வதை விட்டு
வாழும் வழியினை இனியேனும்
கண்டுபிடிப்போம்,
நான் உறங்க வேண்டும்
இப்பொழுதாவது..
விடிவெள்ளி வரும் முன்னர்.

நியூயார்க்.
என்றுமே தூங்காததால்.
இந்த நகரம்
களைப்படைந்தது இன்று.
ஷ்ஷ்..
சத்தம் வேண்டாம்
சற்றே அது உறங்க
அமைதி காப்போம்,
சொல்லிலும்
செயலிலும்.

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>

ஸ்ரீனி

ஸ்ரீனி