கவிதைகள்

This entry is part of 18 in the series 20010812_Issue

நீ, நான், அவர்களின் தேசம்…. {}குருட்டு மனசு…{}ஒற்றைக்காலில் ஒரு தவம்…{}நேரம் இருக்கிறதா ? {} சேவியர்நீ, நான், அவர்களின் தேசம்….

மீன் கொத்திகளின்
அலகுகளுக்கிடையே
மூர்க்கத்தனமான மூக்கணாங்கயிறுகள்.

மீன்களுக்கு நேரம் தவறாமல் உணவு
தூண்டில்களில்.

நண்டுகளின் விரல்கள் சேர்த்து
அறையப்பட்ட ஆணிகள்,
வளைகளின் வாசல்களிலேயே
வரவேற்கும் சிலுவைகள்.

பாடித்திாியும் வயல்காற்றுக்கு
தீ சுட்ட வடுக்கள்,
பாறைகளில் மோதி மோதி
நதிகளின் முகத்தில் இரத்தக்காயங்கள்.

ஒவ்வோர் சாலைகளின் முடிவிலும்
ஒவ்வோர் பொறி,
ஒவ்வோர் சந்திப்புகளின் கீழும்
சதுப்புநிலப் புதைகுழிகள்.

விருந்துக்காய் வளர்க்கப்படுகின்றன
வெள்ளை உடை ஆட்டுக்குட்டிகள்,
கல்லறைகளின் மேல்
தொடர்கின்றன எங்கள் கட்டுமானப்பணிகள்…

தாலியைக் காப்பாற்றும் கவனத்தில்
கணவனை மறந்தவர்களாய்,
தேசியக்கொடியை நாட்டும் வேகத்தில்
தேசத்தை புதைத்தவர்கள் நாங்கள்.

எல்லாக் கதவுகளும்
இறுக்கமாய்த் தாழிடப்பட்ட பின்னும்,
மிட்டாய்களோடு மட்டும்
இன்னும் தொடர்கிறது
எங்கள் சுதந்திர தின விழாக்கள்


குருட்டு மனசு…

கட்டுக்கட்டாய் திணிக்கப்பட்ட அறிவு
மூளையின் மூலைகளிலும் குடைவிாிக்கும்..
இரத்தப் பாசனம் மட்டுமே செய்யும்
இடப்பக்கம் இருக்கும் இதயப்பை…
கணக்குகள் போட்டு காலண்டர் கிழிக்கும்
சுருக்குப் பையாய் மரங்கொத்தி மனசு.

அறிவு இன்னும் வேண்டுமென்று
ஒவ்வோர் செல்களுக்குள்ளும்
தேனீக்களின் குடைச்சல்.

சேமிப்புக்கள் இல்லையேல்
நாளைய வாழ்க்கை வழியோரத்தில் சிந்தக்கூடும்…
எனவே
உண்டியல்களை உதாசீனம் செய்யாதீர்கள்.
தெருமுனையெங்கும்
வருங்காலத்துக்காய் வாி வாியாய் வழிமுறைகள்.

குழாய்த் தண்ணீர், மனைவியின் கண்ணீர் எனும்
அன்றாடப் பிரச்சினைகளுக்கு
காலத்தை முழுசாய்
உயிலெழுதி முடித்த மனித உணர்வுகள்…

இப்படியே தொடரும் எங்கள் வாழ்க்கை…
எப்போதேனும்
தோல்விகள் முன்வாசலில் தாழிட்டால்,
முழங்கால்கள் முன்வந்து
அர்ச்சனைத் தட்டு முன் மண்டியிட்டும்…
கர்ப்பக்கிரகங்கள் முன்
கன்னங்கள் நேர்ச்சையிடும்.

சோி கடக்கையில் மனசு சொல்லும்..
‘நல்லவேளை.. அவனைப்போல் நானில்லை ‘…
எப்போதேனும்
பாவம் என்னைப்போல் அவனில்லையே
என்று
மெதுவாய் எழும் கேள்விகளை
மென்று விழுங்கி மனசு வெற்றிடமாகும்.


நேரம் இருக்கிறதா ?

வாருங்கள்
என் தோழர்களே…

கருப்பு அங்கி அணிந்து
கிள்ளி வரப்பட்ட புள்ளிவிவரங்களும்,
கட்டம் போட்ட அட்டவணைகளும்,
அணைத்து வாதிடப்போக
உங்களை நான் அழைக்கவில்லை…

நாடித்துடிப்பு பிடித்தெடுத்து,
இரத்த வகைகளை நறுக்கி
மாத்திரைப் பெயர்களைக் கிறுக்கும்
மருத்துவர் வேலைக்கும்
உங்களை அழைக்கவில்லை…

பாறைகளைப் புரட்டி,
மலைகளைக்குடையும்
மந்திரவாதி வேலைக்கும் அல்ல
நான் உங்களை அழைப்பது…
அது எனக்கும் வசதிப்படாது.

அறிவுகளை அடுக்கடுக்காய்
அடுக்கி வைத்தவர் வேலைக்கு
உங்களை அழைக்கமாட்டேன்…

தினவெடுத்த தோள்களின் வேலைக்கும்
நான் உங்களை அழைக்கவில்லை…

எனக்குத் தேவை மனசு…
கல்வியின் கரையான் கூட்டில் நாம்
மறந்து விட்டுப் போன மனசு…
பண்டமாற்றுப் பண்டங்களுக்காய்
நாம் விற்றுத் தீர்த்த மனசு…

நான் உங்களை அழைத்தது
நம் தேவைகளின் தேசத்துக்கல்ல…
சேவைகளின் தேசத்துக்கு
அசோகச் சக்கரத்துக்கு அவசரத்தேவை
மனிதாபிமானம் எனும் அச்சாணியாம்.


ஒற்றைக்காலில் ஒரு தவம்…

அந்த
பருத்தி வண்ண பட்டுக் கொக்கு
ஓடையில் மெல்ல ஒற்றைக் காலூன்றி,
வயிற்றுத் தவம் இருக்கிறது…

நீளமான அலகுகளை
அவ்வப்போது நீாில் அலசி,
கண்கள் இரண்டை தண்ணீாில் நீந்தவிட்டு
நல்ல மீன் நடந்து வரட்டுமென்று
நாக்கை ஈரப்படுத்தி காத்திருக்கிறது.

வெள்ளிச் சிமிழ்களை விளக்கி விட்டது போல்
சின்னச் சின்ன மீன்கள் மெல்ல
கொக்கின் கால்களைக்
கொத்திக் கொத்தி கடந்து போனது.

கிளிகள் அமர்ந்த
கிளைகள் மகிழ்ச்சியில்
கிள்ளி விட்ட சில வெள்ளைப்பூக்கள்
ஓடை நீாின் முதுகில் அமர்ந்து
குதிரைச் சவாாி செய்து வந்தது.

பழுத்த ஓர் மஞ்சள் மாவிலை
சிவப்பு எறும்பிற்குத் தோணியாய் மாறி
சுய துடுப்பு செலுத்தி
தாண்டிப்போனது.

வெண்கல நிறத்தில் சில
விரால் மீன்கள்
நீர்மூழ்கிக் கப்பல்களாய்
நகர்ந்து மறைந்தன.

மெல்ல மெல்ல சிறகு நனைத்து
அருவியோடு கதைபேசிக் கதைபேசி,
கால் மாற்றிக் கால் மாற்றி
வந்த வேலையை மறந்து
இன்னும்
ரசனை கொத்திக்கொண்டிருக்கிறது கொக்கு.

Series Navigation