டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (2)

This entry is part of 18 in the series 20010812_Issue

ருத்ரா.


‘ என் கண்களைக்

கண்டு அஞ்சுகிறேன்.

மூடிக்கொண்டே

அவை ஏற்படுத்தும் கனவுகளின்

வலி தாங்கமுடியவில்லை.

இதற்கெல்லாம் தீர்வு

இறப்புகளின்

அந்த சாம்ராஜ்யம் தானா ? ‘

‘ஆனால் அங்கோ

கண்களும் இல்லை.

காட்சிகளும் இல்லை.

இடிந்த தூண்களின்

சிதிலங்களில்

நசுங்கிக்கிடக்கும்

சூாியஒளியில்

சூனியத்தின் விழிகள்.

மரங்களின் இலைக்கூந்தல்

இங்கும் அங்குமாய்

ஆடும் ஊஞ்சல் ஆட்டங்களில்

பேயோட்டும் சூறாவளிகள்.

கானம் முழக்கும்

காற்றுக்குள்

ஏதேதோ குரல்கள்…

எங்கிருந்தோ..எதிலிருந்தோ

கனத்த அமைதியின்

அடிவயிற்றுக்குள்ளிருந்து…

அந்த குரல்கள்…

ஆனால்

அவை யாவும்

உதிர்ந்து கரைந்து

தொலைந்து போகும்

தொலைதூரத்து

விண்மீன்களைப்போல…. ‘

‘அந்த மரண ராஜ்யத்தின்

கனவு பள்ளங்களுக்கு

மண்வெட்டி பிடிக்கும் தூரத்துக்கு

இன்னும்

சமீபிக்கவில்லை நான்.

நானும் இங்கு

முகங்களுக்கு மேல்

முகங்களாய்

வர்ண வர்ண

முகமூடிகள்

மாட்டிக்கொண்டுவிட்டேன்.

எலித்தோல் உடுத்தினேன்.

காக்கை உடம்புக்குள்

கூடு பாய்ந்தேன்.

வயல்வெளியில்

வைக்கோல் பொம்மையாய்

மரச்சிம்புகளில் பின்னப்பட்ட

உருவங்களாய்…

காற்றின் அசைவு

நட்டுவாங்கம் செய்ய

நர்த்தனம் ஆடுகின்றேன்.

இருப்பினும்

நெருங்கவில்லை நான்…

அந்த இறுதி சந்திப்பை நோக்கி.

அந்திவான ராஜ்யம்

அழைக்கிறது…

இன்னும் நான் நெருங்கவில்லை… ‘

‘ இந்த பக்கமா ?

அந்த பக்கமா ?

எந்த பக்கம் நான் ?

ஜனனத்துக்கும்

மரணத்துக்கும்

நடுவே

ஒரு ‘சவ்வூடு பரவல் ‘ இது.

கனவு கசிந்து

நனவுக்குள் நுழைகிறது.

நனவுச்சல்லடையின்

ஆயிரம் கண்களில்

கனவு வடிகின்றது.

துன்பங்களுக்குள்

இன்பம் பூக்கிறது… ‘

* * * * * * * *

மரணத்தை முன்வைத்து

ஒரு ‘மாயா வாதத்தை ‘

இங்கு

பூச்சாண்டி காட்டவில்லை

டி.எஸ்.எலியட்.

சுழலும் கடிகாரமுட்களில்

மண்டிக்கிடக்கும்

அந்த ‘கள்ளி முட்களை ‘

அப்புறப்படுத்துவதற்கே

இந்த அழுகைப்பாட்டு.

ஆனாலும் அங்கொரு பொந்திடை

‘அக்கினிக்குஞ்சொன்று ‘

புதைத்து வைத்தார்.

வெந்து தணியட்டும் காடு.

அப்போது புாியும்

அந்த சூடு

காதலின் சூடு என்று.

அப்போது புாியும்

அந்த வெப்பம்

உலகத்து எாிமலைகளையெல்லாம்

குத்தகைக்கு எடுத்துக்கொண்ட

காதலின் வெப்பம் என்று.

ஏனெனில்

வாழ்வதற்கு ஒரு தாகம் வேண்டும்.

காதல் எனும்

அந்த கானல் நீரை

பருகுவதற்கு ஓடுங்கள்.

அப்போது புாியும்

இந்த சப்பாத்திப்பூக்கள் கூட

உங்கள்

சட்டைப்பையில்

பூக்கும் ரோஜாக்கள் என்று.

மரண சாம்ராஜ்யம் என்று

ஒரு பரமண்டலத்தை

அவர் சுட்டிக்காட்டவில்லை.

நம் முதுகுக்குப் பின்னே

ஒட்டிக்கொண்டு

கூர்தீட்டும் பயங்களின்

அந்த அம்புக்கூட்டை

கழற்றி எறியவே

அந்த கற்பனை தந்தார்.

அன்பே..

எனக்கொரு கேடயம் நீ.

யுத்தமும் நீ.

ஒரு சோளத்தட்டைப்பொம்மையாய்

வாழ்க்கையை

வாழமுடியாத

ஒரு சொக்கப்பனைக்குள்

எாிந்துபோக

நான் பிறக்கவில்லை.

அன்றொரு நாள்

நீ சிந்திய

ஒரு சிாிப்பின் திவலைக்குள்

சமுத்திரங்களை

நிரப்பிக்கொண்டிருப்பவன் நான்.

உன் மின்னல்

சுவாசங்களைக்கொண்டு

இந்த வெறுங்கூட்டை

நிரப்பிக்கொள்கிறேன்.

எலியட்டின்

எழுத்துக்குள்ளிருந்து

எந்திரத்துப்பாக்கி ஒன்று

எழுந்து வந்து

உங்களை மிரட்டுகின்றதா ?

இந்த சாவுக்குருவிக்குள்ளும்

காதலின்

ஒரு குயில் பாட்டு

கேட்கவில்லையா உங்களுக்கு ?

உங்கள் சவங்களை

நீங்களே

எப்பொதும்

சுமந்து கொண்டிருக்கவேண்டும்

என்றா இத்தனை வழிபாடுகள் ?

அவலங்களை

அசைபோடும்

மாடுகள் அல்ல நீங்கள்.

அந்த வசந்த தீவுகளிலிருந்து

என் காதலியின் புன்னகை

என் மனத்துக்குள்

மகரயாழ் மீட்டுகிறது.

மரணத்தையே வாழ்க்கையென

வாழ்ந்து வாழ்ந்து

மரத்துப்போனவர்களே!

உங்கள் மறுபக்கமே

அந்த ‘சாம் ராஜ்யம் ‘.

குவிந்துகிடக்கும்

அந்த கபாலங்களிலிருந்து

உங்கள் மதுக்கோப்பைகளை

தேடி எடுத்துக்கொள்ளுங்கள்.

பழைய ஏற்பாடானாலும் சாி.

அதன் முதுகு மீது

சவாாி செய்ய வந்த

புதிய ஏற்பாடானாலும் சாி.

கடவுளை சைத்தானும்

சைத்தானை கடவுளும்

‘கார்ட்டூன் வரைந்து ‘

விளையாடிக்கெண்டிருக்கிறார்கள்.

இந்த விளையாட்டுக்கு

நீங்களும்

உங்கள் தூாிகைகளைக்

கொண்டு வாருங்கள்.

கணிப்பொறிக்குள்ளும் கூட

ஈடன் தோட்டத்து

‘எலிப் ‘பொறி

இன்னும் புதைந்து கிடக்கிறது.

உள்ளீடு அற்ற மனிதர்களே!

உங்களுக்குள்ளே..நீங்கள்

உலா வந்து

உவகை கொள்ள

உற்சாகமூட்டும் பிருந்தாவனங்களை

பதியம் போட்டுக்கொள்ளுங்கள்.

வெறும் பொதிமாடுகளிலிருந்து

அர்த்தம் பொதிந்த மானிடனாய்

பாிணாமம் கொள்ளுங்கள்.

(தொடரும்)

Series Navigation