• Home »
  • கவிதைகள் »
  • ‘டி.எஸ். எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும்……. ‘ (1)

‘டி.எஸ். எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும்……. ‘ (1)

This entry is part of 20 in the series 20010805_Issue

ருத்ரா


‘ நாம் எல்லாம் வெறுங்கூடுகள்.
எதைக் கொண்டோ
திணிக்கப்பட்டவர்கள்.
எல்லாமாய் வீழ்ந்து
சாிந்து கிடக்கிறோம்.
அந்தோ !
தலைக்குள் எல்லாம்
வைக்கோல் கூளங்கள்.
நமது பேச்சுகள்
பட்டிமன்றங்கள்,கவியரங்கங்கள்…
எல்லாம் ஒருமித்து ஒலிக்கும்
முணகல்கள் கிசு கிசுக்கள்.
காய்ந்தபோன புல்வெளிமீது
மலட்டு சுவாசம் போல்..
நொறுங்கி சிதறிக்கிடக்கும்
கண்ணாடித்துண்டுகள் மீது
அங்குமிங்கும் ஓடும்
எலிகளைப் போல்…
புழுங்கிப்போன அறைக்குள்
பூட்டும் கதவுமாய்….நாம். ‘

‘ உருவம் உண்டு வடிவம் இல்லை..
பூச்சு உண்டு..வர்ணம் இல்லை…
வாதம் வந்தவனின் அசைவுகளைப்போல
வீச்சும் விசையும் இழந்த
அவன் நடையைப்போல
இங்கும் அங்குமாய் …நாம். ‘

‘ ஜனனம் மரணம் என்ற
மாமிசக்கயிற்றை
அறுத்து எறிந்தவர்கள்
அங்கே நின்றுகொண்டு
அப்பட்டமாய்
நம்மை பார்க்கிறார்கள்.
உள்ளே முறுக்கிய
ஆத்மா எனும்
காக்காய் வலிப்புகளைப்
பார்க்கிறார்கள்.
நிர்வாணமே
சட்டையாய்
ஜ ‘ன்ஸ் பேண்ட்ஸாய்
ஒரு நிர்வாணம் காட்டும்
இன்னொரு
நிர்வாணத்தைப் பார்க்கிறார்கள்.
சூன்யமே
ஆடையுடுத்திய
சூன்யத்தைப் பார்க்கிறார்கள்.
துடிப்பான ஆவிகளுக்குள்ளும்
வெந்துகிடக்கும்
வெறும் உணர்ச்சிப் பணியாரங்களாய்
நம்மைப் பார்க்கிறார்கள்.
வெறுங்கூடுகளாய்
கூளங்கள் அடைத்த
கூடுகளாய்
நம்மைப் பார்க்கிறார்கள்… ‘

* * * * * * *

எலியட்டின் ஏக்கம்
எங்கும் நெருப்புக்குழம்பாய்..
திடாரென்று
விழித்துக்கொண்ட
‘ எட்னா ‘ வாய்…
எங்கிருந்தோ
அந்த குழிவிழுந்த
கண்களிலிருந்து வரும்
அக்கினிக் கண்ணீராய்…
அனல் வீசுகிறது.
கனவு ‘லாவா ‘
ஊர்ந்து வருகின்றது.
மானிடர்களே !
உங்கள் வெறுங்கூடுகளுக்குள்
நிரப்பிக்கொள்ள
ஒன்றுமா கிடைக்கவில்லை ?
காதலின்
வானவில் கீற்றுகளைக் கொண்டு
அவற்றை மிடையுங்கள்.
காதல் எனும்
பொங்குமாங்கடலை
அங்கு
பொதிந்து வையுங்கள்.
அந்த வெற்றுக்கூடுகளை
காதல் துடிக்கும்
இதயங்களின்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
ஆக்குங்கள்.
மனிதா ! நீ வெறுமை அல்ல.
விரக்தியும் வேதனையும் கொண்டு
விருந்து படைக்கும்
பந்திக்கு காத்திருப்பதே
வாழ்க்கை..என்று
ஒடிந்து போய் விடாதே.
காதலிக்கே வாழ்க்கை என்று
கண்மூடி தவம்கிடந்த பின்
வாழ்க்கையைக் காதலி என்று
கண்களைத் திறக்கிறாய் நீ.
வாழ்க்கையே
உன் காதலி ஆன பிறகு
நீ சுமந்து கொண்டிருப்பது
வெறும் கூடு அல்ல.
அப்போது
வசந்தமே உன் தோள் மீதுதான்.
சம்பிரதாயங்களும்
சடங்குகளும்
வைத்து தைக்கப்பட்ட
சோளக்காட்டு பொம்மையல்ல நீ.
ஒரு இருட்டை நோக்கி
தொழுது
கூப்புவதற்காக மட்டுமே
படைக்கப்பட்டது அல்ல
உன் கைகள்.
வெளிச்சங்களால்
இந்த கூட்டை நிரப்பி வைத்திடு.
வேதனைகள் எல்லாம்
வர்ணங்களாய்
பிய்த்துக் கொண்டு
வெளிப்படும் வரை
மூடியிரு இந்தக் கூட்டுக்குள்.
வானத்து மூளியான
உச்சிகளைப் பார்த்து
உரக்க குரலெடுத்து
ஓங்காரம் செய்ய
நீவிக்கொண்டிரூக்கும்
பாம்பு நாக்குகள் அல்ல
உன் நாக்குகள்.
காதல் எனும் ஆவேசம்
கனல் மூட்டட்டும்.
இந்த கல்லோடு காதல் செய்.
பச்சைப் புல்லோடும் காதல் கொள்.
அருவியின்
நீர்த்துகிலோடு காதல் செய்.
இந்த வைரத்திவலைகளோடு
இரண்டறக் கலந்து விடு.
அவள்
எங்கோ
எப்பொழுதோ
உன்னைப்பார்த்து
சிாித்தது…
உன் கண்முன் வருகிறது.
நட்சத்திரங்களையெல்லாம்
பொடி செய்து
தூவுகிறது.
சிாிப்பலை தந்த ஓசையின்
அந்தப் பரல்களோடு
படுத்துக்கொள்.
சிலம்பு நினைவுகள்
உடைந்து சிதறட்டும்.
இப்போது…நீ
வெறுங்கூடு அல்ல.
அவள் சிாிப்போசையின்
குமிழிகள் தோறும்
பிரபஞ்சங்களின்
கருப்பை கிழிந்து வரும்
நெருப்பின் பிரவாகம் இது.
கனவுகள் விறைத்து
கெட்டித்த
கனபாிமானங்களின்
கூடு நீ.
வீறு கொள்..மனிதா !
வெறுங்கூடு அல்ல நீ.

(தொடரும்)

Series Navigation