ஜாதி…

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

நா.பாஸ்கர்


காலகாலமாய்
புலவர் ஜாதி
புலம்பித்தான் வருகிறது
‘ஜாதிகள் இல்லை ‘ என்று.

‘பாஸ்கர் *** ‘
தாத்தா வைத்த பெயராம்
கடைசி வார்த்தையை
நீக்கிவிட்டேன்,
ஜாதிப்பெயரென.

ஆராய்ந்து ஆராய்ந்து
பிரயோகிக்கிறேன் வார்தைகளை
இன்ன ஜாதியென
அடையாளப்படுத்திவிடக் கூடாதென்று.

சைவன் என சொல்லக்கூட
சங்கடப்படுகிறேன் – இவர்கள்
ஏதேதோ ஊகித்துகொள்வதால்.

சிலர் சற்றே உரிமையோடு
கேட்டும் விடுகின்றனர்
‘நீங்கள் பிராமணரா ? ‘
‘தம்பி நாயக்கரா ? ‘
‘ஏனுங்க நீங்க தேவரா ? ‘…….

‘மனித ஜாதி ‘ என்று
கன்னத்தில் அடித்தது போல்
பதிலுரைக்க முடிந்தது இல்லை
சிரித்து மழுப்புவதை தவிர.

காதலித்துவிட்டேனாம் – இவர்
மகளை, இதற்கும் சம்மதமாம்!
‘மாப்பிள்ளை என்ன ஜாதி ? ‘
முரண்டு பிடிக்கிறார்.

பாரதி இன்னொருமுறை
வந்து பாடிவிட்டுப்போ
‘என்று தணியுமிந்த
ஜாதிகள் மோகம் ‘.

Series Navigation

நா.பாஸ்கர்

நா.பாஸ்கர்