சேவியர் கவிதைகள்

This entry is part of 12 in the series 20010722_Issue


நயாகரா…

இது,

இரு நாடுகளுக்கிடையே பாயும்

ஓர் தண்ணீர்ப்பாலம்.

மொழிபெயர்க்க முடியுமா

இந்த

விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ?

கைக்கெட்டும் தூரத்தில் கனடா

பாதங்களுக்குக் கீழ் அமொிக்கா,

நடுவில் ஓடும் நயாகரா நீாின்

இருகரங்களில் இரு நாடுகள்.

வானத்தின் ஒருபகுதி கிழிந்து விழுகிறதா ?

இந்த அருவியின் அடிவாரம்தான்

மேக உற்பத்தியின்

கொள்முதல் நிலையமா ?

கால்வழுக்கி கீழே விழுகின்ற தண்ணீருக்கு

புதுக்கால்கள் பிறப்பதெப்படி ?

புருவங்கள் விழுந்துவிடுமளவுக்கு

விழிகளுக்குள் வியப்புக் கோளங்கள்.

பாறைகளுக்கு இடையே

வானவில் பார்த்ததுண்டா ?

நாடுகளுக்கிடையே அருவி கிழித்த

அழகிய கவிதையை வாசித்ததுண்டா ?

இருகண்களும் இளைக்குமளவுக்கு

அழகுகளை அள்ளிக் கொட்டியதுண்டா ?

இல்லையேல்

நயாகராவுக்கு வாருங்கள்.

இங்கேயும்

மழைக்கோட்டுடன் நனைகிறார்கள் பலர்.

முட்டைக்குள் ஒளிந்துகொண்டு

கொக்காிக்க ஆசைப்படும் சேவல் மனிதர்கள்.

தலை நனையும் கவலையுடன்

நடக்கிறார்கள் பல நாகாீகவாதிகள்…

பாவம்

புல்லாங்குழல் இவர்களுக்கு

உடைந்துபோன மூங்கில்.

ஒவ்வொரு பாறைஇடுக்கிலும்

நயாகரா எழுதிப்போகும் சிம்பொனியை,

ஒட்டுமொத்த ஈரச் சூழலுக்கு

இயற்கை அமைக்கும் பின்னணி இசையை,

எந்த இசைக் கருவியும் இன்னும்

அருவியாய்ப் பொழியவில்லை.

தண்ணீரும் தண்ணீரும் மோதி மோதியே

கண்களுக்குள் பரவசத் தீ..

பனிக்கட்டியை உடைத்து தலையில் கொட்டுவதாய்

வேகத்தின் விஸ்வரூபம்.

கோப்பைகளில் ஊற்றி ஊற்றி இந்த

நயாகராவை நுகர்ந்துவிட முடியாது…

நயாகரா பொழியும் பிரம்மாண்டச் சாரலும்

தாய் மடி தரும் பிரபஞ்ச அமைதியும்

தலைவைத்தால் மட்டுமே நனையும் சங்கதிகள்.

இன்னும் சில கண்கள் இருந்தால்

அழகின் கொள்ளளவு அதிகமாகியிருக்கும்,

நயாகராவின் நாட்டிய அரங்கேற்றத்துக்கு

இருகண்கள் என்பது

இருளில் நடப்பது போன்றதே !!

நயாகரா….

மூன்று அருவிகளின் கூட்டுக் குடும்பம்.

குதிக்கும் அருவிகளின் குதூகலக் கூடம்.

அமைதியாய் நகரும் அதன் தாழ்வாரம்

நூற்று எண்பது அடிகளை முழுங்கிய ஆழமாம்….

நயாகரா

நான் என்னும் கர்வத்தை

கசக்கிப் பிழிந்துக் கிழித்துப் போடும் …

விரல் தொடும் தூரத்தில்

நோில் பார்த்தால் மட்டுமே

நெஞ்சக்குழிகளுக்குள் நிஜமாய் தங்கும்.

நயாகரா…

எந்தக் கவிதையும் எழுதிவிட முடியாத

சிலிர்ப்பின் குழந்தை.

நயாகரா…

இது ஒரு காவியத்துக்கான கனத்தின்

ஒரு வார்த்தைக் கவிதை.


விரல்களே விளக்குகள்…

எதிர்பாராத நிகழ்வுகளின் குவியல்,

ஒவ்வோர் எதிர்பார்ப்புகளுக்குமிடையே

முளைத்து வளரும் எதிர்ப்புகள்,

நெருங்க நெருங்க விலகிச் செல்லும்

தொடு வான இலட்சியங்கள்….

இவற்றின் காங்கிாீட் கலவை தான் வாழ்க்கை.

ரோஜா மேல் பனித்துளி அழகுதான்

ஆனால்

வரப்புகளின் தண்ணீர்தானே வாழ்க்கை.

கனவுகளை இரவுகளுக்கு ஒத்திவைத்துவிட்டு

நிஜங்களுக்கு முதுகெலும்பு முடைவோம்.

காதல் அழகுதான்,

கவிதை அழகுதான்…

ஆனால் வறுமையின் அமிலக்குழிக்குள்

வயிற்றுத் தாகம் தானே அருவியாகிறது ?

மீன்கள் பிடித்துப் பிடித்து

மீந்துபோன வாழ்வில் மிச்சத்தின் செதில்கள் மட்டுமே.

போதும்…

மீன்கள் சேகாிப்பது தேவை தான்

ஆனாலும் தூண்டில்கள் தயாராக்குவோம்.

எத்தனை நாள் தான்

ஒற்றைத் தெரசாவும்,

ஒரு காந்தியும் கொண்டே வரலாறு நகர்த்துவது ?

நூறு கோடி மக்களில்

பெரும்பாலானோர்க்கு இன்னும் பெயாிடப்படவில்லையே !!!

வெற்றிகளின் பாதையில்

தோல்விகளும் படிக்கட்டுகளே…

தோல்வியின் பாதையில்

வெற்றிகள் கூட படுகுழிகளே…

நமக்குத் தேவையான முதல் வெற்றி

எங்கே தோல்வியடைகிறோமெனும் தேடலில் தான்.

கதவுகள், ஜன்னல்கள் எல்லாம்

திறந்துதான் கிடக்கின்றன…

நாம் தான்

சுவாில் அறையப்பட்ட ஆணிகளாய் இருக்கிறோம்.


புகைத் தோட்டத்தின் புன்னகைப் பூக்கள்…

வாருங்கள்…

பிரியத்துக்குரிய பேச்சுவார்த்தைப்

பிரதிநிதிகளே வாருங்கள்.

போர்க்களங்களை இந்த

விவாதக் களங்கள் அழித்துவிடுமென்றால்,

எல்லைக்கோடுகளை

அவசரக் கூட்டங்கள் அவிழ்த்துவிடுமென்றால்

போராட்டங்களை இந்த

பேச்சுவார்த்தைகள் பிரிக்குமென்றால்

ஆயுதங்களை அறுத்தெறிந்துவிட்டு வாருங்கள்.

முடியவில்லை எங்களால்…

போர்க்களத்துக்கு வீரர்களை அனுப்பி

புள்ளி விவரங்களை மட்டும் பொறுக்கி எடுக்க

இனியும் முடியவில்லை.

ஒவ்வொரு எல்லையிலும்

சத்தமின்றி சரிந்து கொண்டிருக்கும்

ஜீவன்களுக்கு

ஆயுதங்கள் செரிக்கவில்லை இப்போதெல்லாம்.

எதற்கெடுத்தாலும் வெட்டரிவாள் தூக்கி

பீரங்கிகளுக்குள் பிடிவாதம் திணித்து

நானா நீயா போட்டியில்

இருவருமே தோற்றுப்போக

இன்னும் ஏன் தொடர்ப்போராட்டம் ?

புன்னகை இன்னொரு வெற்றி

அது

உள்ளங்கையில் ஆயுள் ரேகையை நீளமாக்கும்

உள்ளத்துக்குள் நிம்மதியின் அருவியை

ஆழமாக்கும்.

பதுங்குகுழிகளுக்குள் படுத்து

சவப்பெட்டி தயாரிப்பில் மூழ்கி

மலர்வளையங்களுக்காய் தோட்டம் செய்து

எத்தனை நாள் தான்

சந்தோஷங்களுக்கு விஷம் அளிப்பது ?

பூமி அழகானது,

வாழ்க்கையின் ஒவ்வோர் வினாடிகளும் அழகானவை.

அதை இன்னும்

விரோதத்தின் விரல்களுக்கே விற்றுவிடுவதா ?

பேசுங்கள்….

வார்த்தைகளின் பரிமாற்றத்தில்

ஆறறிவின் பரிமாணத்தை அறியுங்கள்.

பேசும்போது,

தீர்ப்புக்களோடு பேசாதீர்கள்

தீர்வுகளுக்காய் பேசுங்கள்

சேவியர்.

Series Navigation