பழக்கமாகும்வரை…

This entry is part of 17 in the series 20010715_Issue

கோகுல கிருஷ்ணன்.


முட்டியை உடைத்துக்கொண்டு

இரத்தம் சிந்த வேண்டியிருந்தது

சைக்கிள் பழகும்வரை.

மூழ்கித் திணறி

மூச்சுத் தேடி

அப்பாவை இறுக்கிக் கொள்ள நேர்ந்தது

நீச்சல் பழகும்வரை.

முதன்முதலாய் வீட்டைப் பிாிந்தது

வேதனை தந்தது

கல்லூாி விடுதி பழக்கமாகும்வரை.

இரைச்சல் அணிந்த சாலைகளும்

இதயம் கழற்றிய மனிதர்களும்

வெறுப்பு வளர்த்தன

நகரம் பழக்கமாகும்வரை.

எல்லா சிரமங்களும்

பழக்கமாகும்வரைதான்.

எனவே கவலையில்லை,

பழகிவிடும்…

நீயற்ற மிச்ச வாழ்வும்.

Series Navigation