‘உயிரோடு என்னை நீ தின்னடா…. ‘

This entry is part [part not set] of 14 in the series 20010623_Issue

ருத்ரா.


காதல்
எப்படி
இப்படியொரு
கசாப்புக் கத்திக்குள்
கருவுயிர்த்தது ?

எறும்புகள் மொய்க்கத்
தூவும்
இந்த ‘ஹெராய்ன் ‘ எழுத்துக்களில்
மெல்லவே கட்டப்படுகிறது
இளைஞர்களுக்கு
சமாதி.

கதைச்சோற்றோடு..இந்த
சதைத்துண்டங்களையும்
பாிமாறுகின்ற
‘பிாியாணி ‘ க்கவிஞர்களே!
உங்கள் பேனாக்கள்
வெட்டாிவாளாய்
பாிணாமம் ஆனது எப்படி ?

காதலை
மெல்லிதாய்ச் சொல்வதில்
அந்த
‘அணிலாடு முன்றிலார் ‘களையும்
‘கல்பொரு சிறுநுரையார் ‘களையும்
ஞாபகப்படுத்திய கவிஞனே!

இப்போது அவர்களுக்கு
கல்லறை தோண்ட
சினிமாவின் ஜிகினாவனத்தில்
சிக்கிக்கொண்டது ஏன் ?

இசையமைப்பு என்ற பெயாில்
இந்த ஓசைகளின்
சம்மட்டிகளில்
நொறுங்கிப்போன எழுத்துக்கள்
குஜராத் பூகம்ப மிச்சங்களாய்
கைவேறு கால்வேறு
சிதறிக் கிடக்கும் காட்சிகள்
உனக்கு புலப்படவில்லையே..ஏன் ?

வெறியூட்டும்..இந்த
தோல்கருவிகளுக்கும்
துளைக்கருவிகளுக்கும்
பேயோட்ட…நீ
வேப்பிலை தூக்கியது…ஏன் ?

தொல்காப்பியத்துக்கு
உரை எழுத
இந்த தோல்காப்பியமா ?

காற்றில் தூவிக்கிடந்த
அந்த காதலை..
அந்த பிாிவுத்துன்பத்தை…
கல்லும் புல்லும்
கிசுகிசுத்துக்கொண்டிருக்கும்
அந்த கசிவு மின்சாரத்தில்
உயிர்த்துக்கிடக்கும் காதலை…
எழுதும்போது
அந்த கனத்த எழுத்தாணிகள் கூட
அன்னத்தூவிகளாகின.

நம் கற்பனைப் புலத்தின்
திரைச்சீலைகளில்
உயிர் பாய்ச்சும்
தூாிகைகளாகின.

அந்த கடபுடா
இலக்கணத்துக்குள்ளும்
காதல் மின்னலின்
நரம்புகள்
யாழ் இசைத்தன.

அந்தோ!
இன்று
இசைக்கருவிகள்
செவியைத்தின்றன.

பாட்டுகளோ
நம் இதயங்களைத்தின்றன.
வசூல் பசியெடுத்த ..இந்த
வயல் காட்டில்
நாம் இன்னும்…இந்த
இருட்டையே பசித்து
இருட்டையே புசிக்கின்றோம்.

நரமாமிச கற்பனைக்குள்
‘முத்துக் ‘குளிக்கும்
‘வைரவ ‘சாமிகளே!
கதை காணாமல் போனது என்று
சதையோடு சாமியாடும்
பட்டாக்கத்தி பைரவர்களே.

பட்டாம்பூச்சிகளை
பட்டா போட்டுக்கொண்டு
வண்ணங்கள் பிழிந்ததெல்லாம்
தமிழை
இப்படி
‘உயிரோடு தின்பதற்கு ‘ தானா ?

‘இருட்டறையில்
பிணந்தழீயற்று ‘…..
ஆம்.
இந்த காகிதசவங்களை
கட்டியழுது கொண்டிருந்தது போதும்.
இந்த காட்டுச்சத்தங்களுக்கு
தீ மூட்டிக்கொண்டிருந்தது போதும்.
இந்த
‘ஃப்ராய்டிச ‘ப் பிண்டங்களை
தின்பண்டங்களாய்
கூவி கூவி விற்றது போதும்.
கவிப்பேரரசனே!
உன் கவிதைகளால்
‘அகாடெமி அவார்டுகள் ‘
அலங்காரம் பெற்றது போய்
உன்னை
அடிக்கடி
அடையாளம் காட்டிக்கொள்ள
காதலை..இப்படி
வெறும் இறைச்சி ஆக்கலாமா ?
காதலின்
‘பால்வெளி ‘ விஞ்ஞானம் காட்டி
பிரமிக்க வைத்தவன் ..இந்த
‘பால்வெறி ‘க் காட்டின்
புதை குழிகளில்
வீழ்ந்து போகலாமா ?

காதலின் அடிக்குரல்
எதிரொலிக்க
புதியதொரு
பத்துப்பாட்டுகளையும்
எட்டுத்தொகைகளையும்
எட்டிப்பிடிக்கவேண்டியவன் நீ.

வேண்டாம் உனக்கு
இந்த
வெத்துப்பாட்டும்
‘எட்டித் ‘தொகையும்.

Series Navigation

ருத்ரா

ருத்ரா