இருமை.

This entry is part of 19 in the series 20010618_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


நான் சிறுசாய் இருக்கையில்
உலகம் தட்டையாய் இருந்தது.
எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன்
ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி
ஒளித்து விட்டானாம்.
அப்போதெல்லாம்
பகல்தொறும் பகல்தொறும்
ஏழு வண்ணக் குதிரைத் தேரில்
சூரியன் வருகிற வழி பார்த்திருந்து
பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்.

ஒரு நாள் வகுப்பறையில்
என் அழகான ஆசிரியை
உலகை உருண்டையாய் வனைந்து
பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.
சூரியனை தேரினால் இறக்கி
பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.
பின்னர் கல்லூரியிலோ
ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்
கோடி கோடி சூரியன் வைத்தார்.

இப்படியாக என்
பாட்டியின் மானச உலகில்
வாழ்வு மனசிலாகியது.
கற்ற உலகிலோ எனது அறிவு
கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது.
இந்த இரு வேறு உலகும்
என் இருப்பு நதியின்
எதிர் புதிர்க் கரைகள்.

நதியின் அக் கரையோ
முன் பொரு காலத்தில்,
அங்கு உண்மை பேசியதால்
ஏழை விறகு வெட்டிக்கு
பொற் கோடரியும் தருகிறாள்
வனதேவதை.
இக் கரையோ எதிர் காலத்தில்,
அங்கு மனிதனையே
பிரதிமை செய்கிறார் விஞ்ஞானியர்கள்.

காற்றரனாய்
தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது
நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களும்.

Series Navigation