பயம்

This entry is part of 18 in the series 20010610_Issue

சேவியர்


சில பயங்களின்
சிறகு பிடித்துச் சிறகு பிடித்துப்
பறந்துப் பழக்கப்பட்டது தான்
மனித இனம்.

அப்பாவின் குரலின் கம்பீரத்தில்
மருளும் விழிகள் வழிய
அவசர அவசரமாய் இரவு உணவு அருந்திய
சிறு வயதுப் பயம்…

வகுப்புக்கணக்கைப் போட மறந்து
கணக்கு வாத்தியாாின் பிரம்பின் நினைவில்
காய்ச்சல் வருத்திக்கொண்ட
பள்ளிக்கூடப் பயம்…

தேர்வு முடிவுக்கு முன்னிரவில்
துரத்தும் யானைமுன் நகர்த்தமுடியா கால்களுமாய்
விழுந்துகிடப்பதாகவும்,
ஏதோ ஓர் நீர்நிலைக்குள் கால்கள் கட்டப்பட்டு
மூழ்கித்தவிப்பதாகவும்
கனவு கண்டு பயந்து…..

வேலை…
குடும்பம்..
எதிர்காலம் என்று
பக்கத்துக்குப் பக்கம் பயத்தை
பிள்ளையார் சுழியாய்ப் போட்ட வாழ்க்கை.

என் சிறுவயது மகனாவது
இந்த பயமில்லாத வாழ்க்கை வாழவேண்டும்,
கோலி விளையாடிக் கொண்டிருந்தவனை
அணைத்துக் கொண்டு சொன்னேன்…
மெதுவாய் என் முகம் பார்த்தான்.
அப்பா சொல் காப்பாற்ற முடியுமா என்னும் பயம்
அவன் கண்களில் மிதப்பது தொிந்தது…

Series Navigation