பிப் – ’14

This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue

கலியுகன்


மின்வெட்டு

தொடங்கி வைத்த

தை மாதத்து

ஞாயிற்று விடியல்…

வயிற்றுப்பசி

சந்தியாவந்தனத்தை

மறக்கச் செய்த

காலைப் பொழுது…

விடுதி மெஸ்ஸில்

ரப்பர் இட்டிலி

முள்ளாங்கி சாம்பார்

வெள்ளைச் சட்டினி

கருப்பு மயிர் (ஒண்ணரை அங்குலம்)…

பசியடங்கிப் போனது…

விபத்துச் செய்தி

ஏதுமின்றிச்

சோபையற்றுக் கிடந்த

நாளிதழை மேய்ந்து…

உடல் துவைத்து

உலர விட்டுத்

தெருவில் இறங்கினேன்…

வேலண்டைன் தென்றல்

சுவாசித்து…

பரிச்சய முகங்களின்

வெறுமை வாழ்த்துகளுக்குப்

பதிலேந்தி…

இலக்கற்றுத்

திரிகையில்…

எண்ணம்…

பேருந்தில் ஏறி

அமர்ந்து…

பயணச் சீட்டும்

வாங்கியாகி விட்டது…

நானோ

காசின்றி

நிறுத்தத்திலேயே

நின்றுவிட்டேன்…

எனக்குப்

படிக்கட்டுப் பயணமும்

பழக்கமில்லை…

காத்திருத்தலிலும்

ஒரு

சுகத்தை

சிருஷ்டித்துக் கொண்டு

அன்றாடத்தில்

லயித்துப் போனது

மனசு…

இன்று

சிவராத்திரி என்று

என் நாட்காட்டி

பகர்கின்றது…

ஆம்…

நமக்கு இது

முதல் காதல் தினம்

என்று

எனக்கு

நன்றாகவே

நினைவுள்ளது…

*

Series Navigation

கலியுகன்

கலியுகன்