நாளை மீண்டும் காற்று வீசும்…

This entry is part of 13 in the series 20010527_Issue

சேவியர்.


என் பஞ்சு திணித்த படுக்கைக் கரையில்
சிாித்துக் கிடக்கிறது
என் மெத்தை நிறத்துக்கு ஒத்துப்போகும்
ஆளுயரக் கரடி பொம்மை…

வலது சுவர் ஓரத்தில்
விட்டம் விரலால் தொட்டுப்பார்க்கும் தூரத்தில்
செயற்கைக் குளிர் செலுத்திக் கொண்டிருக்கிறது
சிறு குளிர்சாதனப் பெட்டி.

என் கண்ணாடி மேஜைமேல்
கவிதைத் தனமாய் ரோஜாக்கொத்துக்கள்
கலைநயம் கலையாத
அமொிக்கத் தொலைபேசி.

மிக மெலிதாய் குளிர்காற்றில் கரைந்து
காதுக்குள் நழுவி வீழும்
பீத்தோவானின் சிம்பொனி.

மெல்லிய என்
இரவு ஆடையோடு உறவு கொண்டாடும்
ஆவின் பால் நிறத்தில்
என் அழகிய நாய்க்குட்டி.

என் தேகம் பொத்தும் அத்தனைக்
குமிழ்களையும்
உடைத்துக் குவிக்கும்
என் மேனி குத்தும் கிழிந்த பாய்.
கனவுகள் மட்டும் நாளையும் வரும்.

****

Series Navigation