ஒரு பழைய வீடு

This entry is part of 16 in the series 20010505_Issue

வெ. அனந்த நாராயணன்


இந்த வீடு மிகவும் சிறியதுதான்
இதன் வெளிப்புறச் சாயங்கள்
மங்கிப்போய் விட்டன
சுவர்கள்
சரியத் தொடங்கி விட்டன
இன்று யாரும்
இங்கு வசிப்பதில்லை
இந்தத் தெருவாசிகளுக்கு
இதுவும்
மற்றொரு
பாழடைந்த வீடு

சுவாசத்தைச் சற்று அடக்கி
ஒட்டடைகளைச் சிறிதே விலக்கிக்
கொஞ்சம்
உள்ளே வாருங்கள்

இந்தத் தூசிபடிந்த தரையில்
காடாகி விட்ட
இக்கொல்லைப்புறத்தில்
இன்னும்
இவ் வாசற்படிகளில்
திண்ணையில்
சற்றுக் கவனமாய்ப் பாருங்கள்

சிறிதும் பெரிதுமாய்ச்
சில காலடிகள் தெரியவில்லை ?

மனிதர்கள் வாழ்ந்த
இடம்தான் இது

இந்தக் குழந்தைகள் வளர்ந்தும்
பெரியவர்கள் இறந்தும்
காணாமல் போய் விட்டார்கள்
உண்மைதான்

ஆனாலும்
தடங்களை முழுக்க
இவர்களால்
அழித்துவிட முடியவில்லை

இந்தக் காரை உதிரும் சுவர்களில்
சிவப்புத் தொப்பியணிந்த
போலீஸ்காரன் படங்களும்
கரடி
ரயில்
டில்லி களும்
இன்னமும் மங்கலாய்
எனக்குத் தெரிகின்றன

இந்த மாட்டுத் தொழுவத்தைத்
தாண்டுகையில்
மார்கழி மாதப்
பறங்கிப்பூ மணம்
வீசவில்லை ?

இன்னும் இன்னும் …
அங்கே அதோ …
சரி சரி
உங்கள் அவசரம் புரிகிறது
ஆனால்
என்னதான் சொல்லுங்கள்
இன்னமும்
இது
என் வீடுதான்

****

Series Navigation