தேர்தல்

This entry is part of 15 in the series 20010430_Issue

சேவியர்


இதோ
மீண்டும் ஒரு யுத்த காண்டம்
படைவீரனைக் கொன்று
அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர்…

சுருக்குக் கயிரோடும்…
கண்ணி வலைகளோடும்
காத்திருக்கின்றன சுயநல சிங்கங்கள்
வெள்ளைப் பசுவின் தோல் போர்த்தி…

வருவாய்க் கணக்கை வகுத்து வகுத்து
சுவரொட்டிகளுக்குச் செலவு செய்யும்
முன்னாள் மந்திரிகள்…

முன்னுதாரணங்களின் முகவுரையுடன்
அரசியல் சந்தையில்
முதலீடு செய்யும் முதலாளிகள்…

சம்பாத்தியங்களுக்கு அடிப்படையில்
சட்டசபைக் கூட்டணியின்
தோள் துண்டு தரித்துக் கொள்ளும்
சந்தர்ப்பச் சிறுத்தைகள்….

எல்லா வல்லூறுகளும் அலகு திறந்து
குறிவைத்துக் காத்திருக்கின்றன
விரிந்து கிடக்கும்
விலா எலும்புகள் நோக்கி…

அறியாமையின் தெருக்கோடியில் இருக்கும்
ஏழைத் தொண்டர்கள்
அரசியல் எச்சில்களை
இரத்தம் தோய்த்து சுவர்களில் ஒட்டுகிறார்கள்

இந்த வேட்டை முடிந்தபின்
வழக்கம் போல
உணவுகொடுத்த கானகம்
உலைக்குள் திணிக்கப்படும்….

சீதை தீயிடப்படுவாள்…

கும்பகர்ணனின் கூட்டுக்குள்
கோப்புக்கள் குறட்டை விடும்….

அங்குசங்கள்
அயலானின் காது கிழிக்கும்…

ஓட்டுப் போட்ட ஒட்டிய வயிறுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
கனவுகள் எல்லாம்
ஒட்ட நறுக்கப்படும்…

பெட்டிகளுக்குள் அடைக்கப் படும்
தன்மானம்….
கோட்டைக்குள் சிறையிடப்படும்
மனிதாபிமானம்…

இந்த முறையேனும்
விடியுமெனும் நம்பிக்கையில்
விரல் நீட்டிக் கொண்டிருக்கும்
வாக்குச் சாவடி முன்
ஓர்
வறுமைக் கூட்டம்.

Series Navigation