எங்கள் வீதி

This entry is part [part not set] of 13 in the series 20010408_Issue

பாரதிராமன்


பட்டணத்துப் புறநகாில்தான் எங்கள் வீதி.

அதைச் சுலபமாய் அடையாளம் காணலாம் எவரும்

சுண்ணாம்பு உடுத்திய மின் கம்பங்களில்

மாடுகள் கட்டப்பட்டிருக்கும்

குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் மின் கம்பிகளில்

வேதாளங்களாய்த் தொங்கும்

வாலறுந்த பட்டங்கள்.

விடியும்போது இருக்கும் சுறுசுறுப்பு

விளக்கு அணையும் வரைக்கும் இருக்கும்.

இடசாாி வீட்டுப்பிள்ளைகள் வலசாாியிலும்

வலசாாி வீட்டுப்பிள்ளைகள் இடசாாியிலும்

காலைக்கடன் முடித்திருப்பார்கள்.

கோலங்கள் மட்டும்

அவரவர் சாாியில் அவரவர் போட்டது.

நாற்பது வீடுகளேயானாலும் நான்கு பேப்பர் பையன்கள்

கடன்ஏறிக் கஷ்டப்படுகையில் மாற்றிக்கொள்ள சவுகாியம்.

எருமைப்பால்,பசும்பால்,அட்டைப்பால்,டோக்கன்பால் கடைகளோடு

மூலைக்கடை நாயர் ஆரம்பித்துவைக்கும் டாக்கடை நாதங்கள்,

வீதியின் ஓரங்களில் தேங்கும் குளங்கள் வயிறு முட்டக் குடித்த

குடிமகன்களின் வடிகால் வாாியங்கள்.

பேப்பர் பையன்களுக்கு அப்புறம் உப்பு வண்டிகள்தான் வரும்;

மற்றவையெல்லாம் மதியத்துக்கு மேல்தான்.

பேண்ட் சர்ட்டுகள், பஞ்சகச்சம்,தட்டுச்சுற்று,பாவாடை தாவணிகள்,

பள்ளிச்சீருடைகள்,சல்வார்கமீசுகள்,தோளில் தொங்கும் பைகளுடன்

சேலைகள்,தனியாகவும் கூட்டாகவும் கிளம்பிச்செல்ல

பத்து மணி வாக்கில் அமைதிகொள்ளும் வீதி,

பறவைகள் நீங்கிய மரங்களாய்.

இனித் துவங்கும் வம்பும் வியாபாரமும்

கடுங்கோடை நாட்களில் பகல் இரண்டு மணி வரை தூங்கும் வீதி

தர்பூசும் ஐஸ்கிாீமும் கூட அப்புறம்தான் வளையவரும்.

கதவு தட்டி கண்டதையும் விற்க வரும் கன்னியர் கூட்டம்

கெஞ்சிப்பேசி தலையில் கட்டும் லாவண்யம்-தாவணீயம்-

தன நாசம்- நாலுமணிவரை நடக்கும்.

மாலை நெருங்கி வரும்போது

மாறி மாறி பெண்டிர் முகம் காட்டும் வாசல்கள்.

வழிமேல் விழி வைத்து

பெளர்ணமி,அஷ்டமி,அமாவாசை நிலவுகள்போல

உண்மையும் பொய்யுமாய் வரவேற்புகள்.

உலாக்கிளம்பிய வயோதிகர் களுக்காகவும்

விளையாட்டு வால்களுக்காகவும்

ஒருவரும் காத்திருப்பதில்லை,

பழகிப்போனது.

விளக்கு வைத்ததும் வீாிடும் ஒலிகள்

வானொலி, தொலைக்காட்சிகள்பலவும் உமிழும் ஒலிகள்

பள்ளிப் பாடக்குரலைப் பலவீனமாக்கும்.

சங்கிலிப் பறிப்பும்,திறந்த வாசல்வழித் திருட்டும்

அவ்வப்போது தினசாிகளில் செய்தியாக வரும்

அதிரும் ஒலிகளால் தலைவலி மூளும்போது

மின்சாரம் தடைப்படும்.

மீண்டுவந்து பாயும்போது

ஓரம் கருத்த குழல் விளக்குகள் கண்ணடிக்கும்

வீதி அப்போது தூங்கிப் போயிருக்கும்.

வீதிக் கொசுக்கள் அத்தனையும் வீடுகளில் புகுந்திருக்கும்

தூங்கப்போன இருட்டிலும் தொடரும் சில வேலைகள்

கூர்க்காவின் விசிலுக்கும் தடி ஓசைக்கும் தயங்காமல்.

போன வருடம் எட்டு பிறப்புகள்

இரண்டே சாவுகள்,

மற்றபடி

ஆறு புதுக் குடித்தனங்கள்,

ஒரே ஒரு மாற்றல்.

இரண்டு அடுக்குமாடி கட்டிட அனுமதி.

கூடி வரும் வாக்காளர் தொகை.

விலாசம் கேட்டு வருபவர்களை

வெறுப்படிக்கும் சினேகிதங்கள்

நாட்டு நடப்புகள் அத்தனையும்

புட்டு வைக்கும் புறச்சுவர்கள்

விடியலில் எருமைகள் கத்த

விழித்துவிடும் எங்கள் வீதி

பருவ மழையின் போது மட்டும்

நகருக்கு விலக்காகிவிடும் ஒரு தீவாக.

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.