சிலிர்த்த முத்தம்

This entry is part of 14 in the series 20010115_Issue

மு.புகழேந்திவயது தொண்ணூறு
தொண்டு கிழம்
நார் உடம்பு
மொட்டை தலை
பொக்கை வாய்
முள்தாடி முகம்
குழியிலுள்ள கண்கள்

வேப்பமர நிழலில்
அப்பக்க திண்ணையில்
பாய்மேல் திண்டில்
படுத்துக்கொண்டு தினசரி
படித்துக்கொண்டிருந்த
அவ்வீட்டு முப்பாட்டனார்
சுகமான காற்றில்
சற்றே கண்ணயர்ந்தார்

வயது ஒன்று
வளரும் முல்லை
குழிவிழுந்த கன்னம்
கோமளச் சிரிப்பு
முச்சாண் வெற்றுடம்பு
சிறுகருவண்டு கண்கள்
தாமரை வதனம்

அவ்வீட்டு குழவி
இப்பக்க திண்ணையில்
அமுதுண்டது அம்மையிடம்

அமுதுண்ட கழிப்பில்
நிறையுற்ற வயிறுடன்
எதுவென்று புரியா உவகையில்
தத்தி தத்தி
நாற்கால் நடைபோட்டு
எட்டச் சென்று
சற்று அமர்ந்து
சுற்றும் முற்றும்
விழித்துப் பார்த்து
கையிரண்டும் வீசி
அமுத ஒலியெழுப்பியது
மீண்டும்
தத்தி தத்தி
நாற்கால் நடைபோட்டு
அமுதுண்ட செந்சிரிப்புடன்
அப்பக்க திண்ணைக்கு
சென்றது அக்குழவி

உமிழ்நீர் ஊற
வெற்றுடம்பில்
எச்சிழமுது வடிய
கால் இரண்டும் விரித்து
கை இரண்டும் ஆட்டி
மொட்டை தலைப்பக்கம்
மெதுவாய் நகர்ந்து
உச்சாணி மண்டையில்
இட்டது ஒர் முத்தம்

உச்சி சிலிர்ப்பில்
மெல்லே கண்விழித்த
அவ்வீட்டு முப்பாட்டனார்
குழவியை கண்டு
குதுகலமடைந்தார்
பல்லில்லா வாய் வழியே
பாசப்பேரிட்டு
விளித்துச் சிரித்தார்

குழந்தையும் குழந்தையும்
சிரித்தது.

**

Series Navigation