கதை கதையாம் காரணமாம்.

This entry is part of 8 in the series 20001217_Issue

சித்திர லேகா.


ராமராஜன்
ராவணராஜனைக் காட்டிலும்
காமராஜனாகிப் போனான்.

கட்டிய மனைவியும்
கரும்பான ஐந்து பிள்ளைகளும்
கட்டழகுக் காரியதரசி
ஜென்னிபிராட்டியோடு
களித்தபோது
கனவாகிப் போயினர்.

காளையவன் தலைகுனிந்தான்.
புலம்பினான்.

கட்டியவளை துரோகித்தேனே ?
என் குட்டன்களையும் குட்டிகளையும் மறந்தேபோனேனே ?
காரணம் என்ன ?

கன்சல்டன்ட் அன்றோ ?
காரணம் வேண்டி
கேள்வி பதிலில்
பகுத்தாய்கிறான்.

காரணம் என்ன ?
ஜென்னிபிராட்டி சீதா பிராட்டி அல்ல
என்பது ஒரு காரணமே அல்ல.
அப்புசாமி அற்ற அவள்
ஒரு சீதா பாட்டி கூட அல்ல.
சாதா பிராட்டி.
சதையும் உணர்வும் உள்ள
போலித்தனம் இல்லாத்த
வெள்ளைப் பிராட்டி.

ஜென்னிபிராட்டி என்ன ?
சீதாபிராட்டியே
காரியதரசி ஆனாலும்
நடந்தது நடந்திருக்கும்.

பின் என்ன ?
போன வாரம் ஹாங்காங்
அதற்கு முன்பு
சிங்கப்பூர், மலேயா, பாலி, தென் கொரியா
இவற்றோடு இந்தியா,
ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, மொரிஷியஸ், பீஜி
எட்செட்ரா எட்செட்ரா.
எல்லா தேசங்களுக்கும் ஜென்னியோடு
தீராத வனவாசம்.
இந்த வாரம்
அவுஸ்திரேலியக் கண்டம் முழுவதும்
அவளோடு அஞ்ஞாத வாசம்.
கன்சல்டன்சி, மீட்டிங், கான்ஃபரன்ஸ்.
சவாலும், துணிச்சலும், வெப்ராளமும்
பிடித்த
சீனியர் மானேஜர் பதவி அன்றோ ?

வெப்ராளப் படுத்தும்
மானேஜர் பதவி ஏன் ?

ஐந்து பிள்ளைகளும்
இந்த அவுஸ்திரேலிய தேசத்து
தனியார் பள்ளியில் பயின்றிட
சீனியர் மானேஜரின் சம்பாத்தியம் இல்லையெனில்
வீரப்பன் பணியன்றோ புரிய வேண்டும் ?

மெத்த சரி.
தனியார் பள்ளி ஏன் ?

சீனியர் மானேஜரின் பிள்ளைகள்
அரசு பள்ளியிலா ?
அவமானம்.

இந்த சுழற்சியை முடிக்கும்
வரையரை ஏதும் இல்லை….
போகட்டும்.
ஏன் ஐந்தாவது பிள்ளை ?

ஏனெனில், அதற்கு முன்பு
நாலாவது.
அதற்கு முன்பு ?
மூன்றாவது,
இரண்டாவது,
ஒன்னாவது.

போதும். கன்சல்டன்ட்தனமாக
ஆராய்ந்து தெளிந்தது போதும்.
தெளிவான முடிவு இங்ஙனம் கிட்டாது.
எனவே ராமராஜனாக சிந்தி.

ஐந்து பிள்ளைகளுக்கும் என்ன காரணம் ?

காதல் மனையாள்
மட்டுமே காரணம்.

ஓஹோ ?
ஐந்து குழந்தையை
ஒராளாகத் தன்னந்தனியாக
ஈன்றெடுக்கும்
குந்தி தேவியைக்
கைப்பிடித்தக் காரணம் என்னவோ ?
தீராத காதலோ ?

காதல் இரண்டாம் பட்சமே.
நான் விழையும்
வருமான வரிவிலக்குக்கு
காந்தாரியையன்றோ
கட்டியிருக்க வேண்டும் ?

வருமான வரிக்குக் காரணம் ?

எக்கச்சக்கமான வருமானம்.

இத்தனை வருமானம்
வேண்டித்தானே
இந்தியா விட்டு
இவ்விடம் புலம் பெயர்ந்தது ?

ஐயோ இல்லை.
சத்தியமாக இல்லை.
ஒருபோதும் இல்லை.
இல்லவே இல்லை.

பின் என்ன காரணம் ?

பிக்கல், பிடுங்கல்,
தொணதொணப்பு,
அரிப்பு,
பூனைகூட வளர்த்தறியாத
என் மீது
மையங்கொண்டது
எல்லா திசையிலிருந்தும்
எதிர்ப்பு.

எதன் பொருட்டு எதிர்ப்பு ?

சிவனே என நான் பூண்ட
நிரந்தர பிரும்மச்சரிய விரதம்
பொருட்டு.

Series Navigation