அம்மா நீ குளிர் பருவமல்லவே

This entry is part [part not set] of 12 in the series 20001112_Issue



குர்திஸ் கவிஞன் : கமால் மிராவ்தலி

தமிழில் : யமுனா ராஜேந்திரன்

அம்மா
போன வருஷம் நான் உன்னைச் சந்தித்த போது
நீ இவ்வளவு மோசமாக இருக்க வில்லை
உனது முடி நீண்டு நன்றாகக் கறுத்திருந்தது.
என்றுமே உருகாத இந்த நிரந்தரப் பனி
எப்போது உன் தலை மேல் வீழ்ந்தது ?
அணைக்கவே முடியாத இத் தீச்சுவாலை
என்று உன் இதயத்தில் பற்றியது ?

அம்மா
பனியையும் தீச்சுவாலையையும் ஒருங்கே கொணர்தற்கு
நீ குளிர் பருவமல்லவே
எவ்வாறு நீ உன்
கடைசித் துளியையும் உறிஞ்சி முடித்தாய் ?

கறுப்பு மேகம் சூழ நரகத்திலிருந்து வந்த மாதிரி
தோற்றம் தருகிறாய்- உனது
கருஞ்சிவப்பு உதடுகள் முழுக்கவும் சுருக்கங்கள்
புன்னகைகள் அதற்குள் புதைந்து போயின

அம்மா உன்னை நீ
கவனித்துக் கொள்கிறாயா என்ன ?
உன்னிலிருந்து உன்னை எவர்
திருடிச் சென்றார் ?

உனது விழிகள்
உன் பார்வையைத் தேடித் திரிகிறது
உனது செவிகள்
உனது ஒலியைத் தேடித் திரிகிறது
உனது நாவு
உனது சொல்லுக்கு அசைகிறது
உனது சுவாசப்பை
உனது மூச்சுக்கு அவாவுகிறது
உனது ஆன்மா அம்மா
நீ உயிரோடு இருக்கிறாய்
உனது வாழ்க்கையைத் தேடுகிறது

இந்த நிலையில் என்றுமே உன்னை நான்
பார்க்க விரும்பியிருக்க வில்லை
சென்ற வருஷம் நான் வந்த போது நீ
இம்மாதிரி மோசமான நிலையில் இல்லை.

இது நான் அம்மா
உன் மகன்
அம்மா என்னை ஞாபகப் படுத்திப்பார்
நான் உனது பார்வை
உனது கேள்வி உனது குரல்
எனக்குள் ஆழ்ந்து மூச்சு விடு அம்மா – எனது
இதயக் குருதியை உனக்குத் தர
என்னை விடு அம்மா

அம்மா என்னை விட்டுப் போகாதே
பொறு என்னோடு கொஞ்சம் இரு
பொறுத்திரு அம்மா நாளை வரை.

(மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை – சமகால குர்திஸ் கவிதைகள் அறிமுகமும் தொகுப்பு மொழியாக்கமும் : யமுனா ராஜேந்திரன் : தொகுப்பிலிருந்து)
தாமரைச்செல்வி பதிப்பகம்,31/48 ராணி அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78, விலை 50 ரூபாய்

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்