கனவுகள்

This entry is part of 7 in the series 20000905_Issue

திலகபாமா, சிவகாசி


இலட்சம் தேடாமல் என்

இலட்சியம் கண்டு,

நூறு பொன்னைக் கொண்டு

எனை எடை போடாமல்

பெண்மையின் மென்மை கண்டு

சம்மதம் சொன்னார்.

கல்யாணப் பாிசாய்

எவரோ வாங்கியதை

என்னிடம் தராமல்

முதல் பாிசு

முத்தாய்ப்பாய் இருக்க

வேண்டுமென்றெண்ணி,

முனைந்து முனைந்து தேடி

முடிவெடுக்க முடியாமல்

முடிவில்

முள்ளில்லாத ரோஜா உன்

முகம் போல் ரோஜா

என்று சொல்லி

என்னிடம் தந்தார்.

காய்ந்த இதழ்கள்

காயாத நினைவுகளுடன்

இன்றும் என்

பட்டுப்புடவைக்குள்

பத்திரமாய்.

நான்கு மாதங்களாய்

நான் பிண்ணிய குளிராடையை

கோடையிலும்

குளிரென போர்த்திக்

கொண்டார்.

பாவை உன் நினைவு வந்தது

பனி அடிக்க குளிரும் வந்தது.

ஆடை போர்த்தினாலும்

அடங்காத குளிர்

ஆரணங்கு போர்த்தத்தான்

அடங்கு மென்றார்

கருகும் வாடை கண்டு

கனவைக் கலைத்துப் பார்த்தேன்

பொங்கிய பால் தீயில்

பொசுங்கி விட்டது

கனவுகள் சுகமானவைதான் அது

நனவாகா விட்டால்

நம்மை நசுக்கும் சுமைகள்.

 

 

  Thinnai 2000 September 5

திண்ணை

Series Navigation