வீடு

This entry is part of 8 in the series 20000716_Issue

கோகுல கண்ணன்என் சரணாலயத்தில்
அவ்வப்போது பறவைகள்
குடிகொள்கின்றன

பறவைக்கூடுகளால்
ஆக்கப்பட்ட கூடென
எத்தனை பெருமையெனக்கு

அதிரும் வீடு
இடையற்ற படபட
சிறகடிப்பில்
மொழிமீறிய
தீராத உரையாடலில்

பறவைகளின் அன்பளிப்பென
சேமித்து வைக்கிறேன்
கழன்றுவிழும் சிறகுகளை

சிறகு முளைத்த நந்தவனமாய்
பூத்துக்குலுங்கும் வீடு
ஒரு நாள்
பூமியின் ஈர்ப்பை
இலகுவாய் உதறி
காற்றின் கரம்பற்றி
அந்தரவெளியில் தாவியேறும்

நான் காத்திருக்கிறேன்

பறவைகளின் முடிவற்ற கருணையில் உதிரும்
அந்த ஒற்றைச் சிறகுக்காக

இசை

****************************
காற்று தவிக்கும் நுண்நடுக்கத்தில்
நெஞ்சம் ததும்பி
கால்கள் தரைதப்ப
காற்றலைபுரளும் வெளிதனில்
கலைந்து கலைந்து
பிளவுற்று விரியும் ப்ரக்ஞையுடன்
பிரளயத்தின் வேகத்தில்
புல்லாய் பணிந்திருப்பேன்
நீலத்தின் குளிர்ச்சி
விழிவழி நுழைய
கபாலத்தின் தகிப்பு
கரைந்து வழிய
லேசான நம்பிக்கையில்
காற்றின் தோள்தழுவி
வெளியெங்கும்
பரவி பரவி

முடிவில்லா பள்ளத்தின்
அடர்ந்த இருள் சதுப்பில்
உதிர்கிறேன்
வெறி செலுத்தும் புரவியின்
விசையோடு

மெளனத்தின் முஷ்டி
ப்ரக்ஞையில் வீழ்கிறது
தீர்க்கமாய்
முன்னறிவிப்பற்ற
மூர்க்கத்துடன்

மெதுவாய்
மெதுவாய்
நம்பிக்கையின்மையுடன்
களைப்புடன்
சிதறி கிடக்கும்
என்னை
சேகரித்து
சரியான பகுதிகளை
ஏறக்குறைய
சரியான இடத்தில்
பொருத்தி
மீண்டும் வந்து சேர்வேன்
உன் பாடலின்
தொடக்கத்திற்கு.

**

Series Navigation

கோகுல கண்ணன்.