ஆலமரம்

This entry is part of 8 in the series 20000625_Issue

பாவண்ணன்


மனிதநிழல் தீண்டாத மனவெளியின்

மண்பிளந்து நிற்கிறது ஆலமரம்

முளைக்குள் வேர்பதித்து

முகில்வெளியில் கிளையசைத்து

விழுதைச் சுழற்றுகிறது அந்த மரம்

ஆதரவாய் முகம்தடவி

அழுதவரிச் சுவடழிய

அன்புடன் தீண்டும் விரல்

அந்த மரம்

எரிக்கும் கோடையில் அலைந்துழன்றபின்

அடிமரத்தின் மடிதேடி

இளைப்பாறும் என் உடல்

மார்தழுவும் காற்றில்

மனப்பாரம் கரைந்தகல

என்மீது படரும் இனிய நிழல்

அண்டத்தில் துளிர்த்தது அம்மரம்

ஆதிமனிதனின் வயது கொண்டது அம்மரம்

ஏரிக்கரையில் நிற்கும் மரமல்ல அது

அடையாற்றில் நிற்கும் மரமுமல்ல அது

எந்தத் தோப்பிலும் அந்த மரம் இல்லை

இந்த உலகத்திலேயே அந்த மரம் இல்லை

ஆலமரம்

ஒரு கனவு

கனவென்னும் ஆணியில் தொங்கும் சித்திரம்

அந்த மரத்தடியில் சாய்ந்தபடி

ஆகாயத்தைப் பார்க்கிறேன்

சாயங்கால மேகங்களிடமும்

சரியும் சூரியனிடமும் உரையாடுகிறேன்

கவியும் இருள், நிலவு

கண்சிமிட்டும் விண்மீன்களுடன் கைகுலுக்குகிறேன்

கனிந்த மனநிலையில்

காற்றிடம் என் கவிதையைச் சொல்கிறேன்

விழுதுகளின் விரல்பற்றி

வரட்டுமா என்று விடைபெறுகிறேன்

தென்பெண்ணை

பாவண்ணன்


வந்ததும் தெரியவில்லை

வற்றியதும் தெரியவில்லை

ஊதாரி போல

ஊரைப் பார்த்து வெறிக்கிறது ஆறு

கூத்தாடித் திரிந்தபடி

தானே தொலைத்துவிட்டு

பாழ்மணலில் வெயில்மின்ன

பைத்தியம் போல் தத்தளிக்கிறது

தண்ணீர் வழிந்தபோது

தளுக்கிக் குலுக்கியதெல்லாம்

கனவாக மாறிக்

கற்பனையாய்ப் போய்விட்டது

சகிக்கவில்லை இப்போது

ஊரைப் பார்த்து

ஒப்பாரி வைத்தபடி

மணலைச் சுழற்றி

மார்பில் அறைந்தபடி

ஆறாத துக்கத்தில் அலைகிறது

பொசுக்கும் வெப்பம் தாளாமல்

புரளும் போதெல்லாம்

வானத்தை நோக்கி முறையிடுகிறது

மேகங்களைக் கண்டதுமே

கண்ணுக்குத் தெரியாத கைகளை நீட்டி

காப்பாற்ற வேண்டிக் கதறுகிறது

ஆற்றின் ஈரம் வற்றியதால்

ஆற்றோரச் செடிகள் கருகிவிட்டன

பச்சை நாணல் புதர்கள்

பதறிக் கதறி உயிர்விட்டன

காலைச் சூரியனோ

மாலைச் சூரியனோ

தகதக்ககும் பிம்பத்தைக் காட்டாத

ஆற்றின் கரைகளை

ஆசையுடன் நாடுவதில்லை மக்கள்

வற்றாமல் வைத்துக் கொள்ளும் விதம்

ஆற்றுக்கும் தெரியவில்லை

மனிதனுக்கும் தெரியவில்லை

மண்ணாகிப் போன ஆற்றின் வயிற்றில்

சாராய உலைகள் எரிக்ின்றன

பாலத்தின் மறைவில்

ஆணும் பெண்ணும் ஒதுங்குகிறார்கள்

குறுக்குப் பாதைகளில்

மாடோட்டி வருகிறார்கள் சிறுவர்கள்

ஆதரவற்ற ஆற்றின் தோற்றம்

மனசைக் கசிய வைக்கிறது

ஒரே ஒரு பெருமழை போதும்

இதன் கண்களுக்கு உயிர் வந்துவிடும்

எப்படியாவது

ஓடிக்கொண்டே இருக்கும்படி செய்ய வேண்டும்

இந்த ஆற்றை ஒரு கடல்போல.

 

  Thinnai 2000 June 25

திண்ணை

Series Navigation