என்று திரும்பினாய் நீ – என்னிடம் … ?

This entry is part [part not set] of 11 in the series 20000618_Issue

முடவன் குட்டி


கைதூக்கி விடுவாரென
யாசித்து நீண்ட கரத்தில்
விரல் அற்த்துச் சென்றனர்- மனிதர்.

தன்னுடனும்
உலகுடனுமான
இணக்கம் குலைத்தன-புத்தகங்கள்

வாழ்தலின் அர்த்தம் தேடிய
அறிவுசார் விசாரணை விவாதங்களில்
தலைக்குள் கொழுத்தது-தர்க்க எலி
சதா அதன் கொர கொரப்பில்
அழிந்தது – இயல்பு

நிம்மதியைக் குறிவைத்தே
‘பணவேட்டைக்குத் ‘ தயாரானான்.
பொய், களவு, சூது, வஞ்சமென
அவசியமான சகல வித்தகளையும்
கற்றுத் தேர்ந்தான்.
வேட்டையிலோ
ஒவ்வொருமுறையும்
குறி (நிம்மதி) தப்பலானது.
வித்தைகள் மேலும் மேலும்
வலுவாக ஆடிவர
பாதிமனதில் பதுங்கியிருந்த மிருகம்
முழுமனதிலும் உறுமலாச்சு.

எதனை நம்ப… ? எங்கு சேர… ?
சுற்றிச் சுழித்தது
‘விரக்திப் ‘ பேய்க் காற்று
வந்து விழுந்தான்
வாழ்க்கையின் ஓரம்.

உயிர் சுமக்கவா… ? இனி மேலுமா… ?
எட்டிப் பார்த்தான்- கிணற்றுள்
அடிஆழத்தில் மிதந்தது முகம்-
பரிபூரணம் ஒளிர.
என்முகமா… ? எனதா… ? எனது தானா… ?
‘ஆம்… ‘
தீர்க்கமாய் வந்தது குரலொன்று
யார் நீ – என்றான் – வெல வெலத்து,
‘உன் உள்ளே சதா உறைந்திருக்கும்
பேரொளி ‘- என்றது குரல்.
உன்னை… இது நாள் வரை…
– முணுமுணுத்தான்

‘என்று திரும்பினாய் நீ – என்னிடம் ?
எனைக் காண… ? ‘
சட்டென நின்றது குரல்.
நினைவோ வலியோ கனவோ அற்று
‘நான் ‘ ‘எனது ‘ அகந்தை உதிர
நிர்மலமானது மனம்.
அக்கணத்தில்…
‘அளப்பரிய கருணை ‘ அவனுள் பெருகிற்று.
கிண்ற்று மேடையிலிருந்து கீழே இறங்கினான் – அவன்.
குனிந்த தலை நிமிர்ந்தது
மெல்ல நடந்தான் – வாழ்விடம்.

 

 

  Thinnai 2000 June 18

திண்ணை

Series Navigation

முடவன் குட்டி

முடவன் குட்டி