அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்….

This entry is part [part not set] of 7 in the series 20000611_Issue


ருத்ரா




1

எட்டுத்தொகைக்கும் எட்டாதது

பத்துப்பாட்டுக்கும் பத்தாதது.

உன்னிடம்

காதலை வடிக்க

தூாிகை தேடியவர்கள்

தோற்றுப்போனார்கள்.

வெண்ணிலவே

உன்னைக்

கனவு கண்டு கனவு கண்டு

இந்த வானச்சதுப்பு நிலக்காட்டில்

இவர்கள் தொலைந்து போனார்கள்.


2

நிலாச்சோறு நினைவுகள்

உலா வருவதுண்டு.

அது

வெறும் பசியின் சித்திரங்கள் அல்ல.

உன்னிடம்

வெள்ளி முலாம் பூசிக்கொண்டு

அரங்கேற வந்திருக்கும்

நினைவுத்தடங்கள்.


3

இந்த வானத்து

டி.வி யில்

காதலுக்கு

சொட்டு நீல

விளம்பரம் நீ.

அதற்கு முன்

இந்த

அழுக்கு

மனக்காரர்களை

அடித்து துவைப்பது யார் ?


4

சூாியன்

உன் முகத்தில்

வாய் கொப்பளித்ததை

எங்களுக்கு

வெள்ளி அருவி

ஆக்கினாய் நீ.


5

சூாியன்

அாிதாரம் பூசி

அவதாரம்

செய்தவள் நீ.

இந்த

சினிமாக்கவிஞர்களின்

பாட்டுகளா

உனக்கு ‘பட்டா ‘ போடுவது ?


6

நிலவைக்கிழித்து

காதலிக்கு

ரவிக்கை தைத்தான்.

அவன் மட்டும்

கந்தலாகிக் கிடந்தான்.


7

வெள்ளித்தீயில்

வானமே பற்றி யொிந்து..

தூக்கமில்லாமல்

அவள்

தீக்குளித்தாள்.


8

ஆயிரமாய் நீ

அழகு காட்டினாலும்

குளிர்ச்சியான

உன் புன்னகையை

ஈரப்படுத்திக்கொள்ளும்

‘லிப்ஸ்டிக் ‘

என் காதலியின்

இதழ்கள் அல்லவா!


9

அந்த சன்னலில்

அவள்

முகம் அழுத்தி

நின்று விட்டுப்போனதும்

அதை

நீ ஒற்றியெடுத்துக்கொண்டு

காட்சி தருகிறாய்.


10

உன் அசுரப்பசிக்கு

அளவே இல்லையா ?

எத்தனை ‘அம்பிகாபதிகளை ‘

தின்றிருப்பாய் நீ ?


11

தாவியேறி

தப்பித்துக்கொள்கிறேன் நான்

உன்னிடம்.

ஏனென்றால்

கம்பிகள் இல்லாத

சன்னல் நீ.


12

மூளியாய்

ஒரு வட்டம் வரைந்து

பெண்ணென்று

வானத்தில் எறிந்தான்

பிக்காஸோ.

அன்றிலிருந்து இன்று வரை

ஒவ்வொரு தேவதாசுக்கும்

இது தான் பார்வதி.


13

கவிதையைக்

குடித்துவிட்டு எறிந்த

உமர்க்கயாமின்

காலிக்கிண்ணம் நீ.

அவன்

உதட்டுத் தடங்களில்

ஊறும்

நூறு நிலவுகள்.


14

ஐஸ் கோன் சுவைத்து

பாப்கார்ன் கொறிக்க

ஒரு சினிமா வேண்டும்.

அதற்கு

இரண்டு டிக்கெட்டுகள் வேண்டும்.

டிக்கெட்டுகளின் பின்னே

ஒரு ஆண் ஒரு பெண் வேண்டும்.

இவர்கள் இருவரும்

சுவாசம் விட்டுக்கொள்ள

ஒரு காதல் வேண்டும்.

அதற்கும்

‘வெண்ணிலவு பாட்டோடு ‘

அவர்கள் முன்னே

வட்டமாய் ஒரு நிலவு வேண்டும்.

இப்போது அவர்களுக்கு

நீ ஒரு பஞ்சு மிட்டாய்.


15

உன்னிடம்

‘அமைதிக்கடல் ‘ இருப்பதாக அல்லவா

சொன்னார்கள்.

அடி மனதில்

ஒரு புயலைக் கிளப்புகிறாயே.


16

பூமி சுற்றுவது

ஏன் என்று

இப்போது புாிகிறது.

மதுக்கிண்ணமாய்

நீ அருகில் இருப்பது தான்.


17

அவளை நினைத்து

இவன் தலைக்கு

பித்தம் ஏறிவிட்டது.

‘என்ன சொல்லப்போகிறாய் ? ‘

வட்டமான

எலுமிச்சம்பழமே!


18

கவிஞர்களுக்கு வேண்டிய

உயிரெழுத்துக்களும்

மெய்யெழுத்துக்களும்

வற்றாமல்

ஊறிக்கிடக்கும்

வானத்து ‘மை ‘க்கூடு நீ.

ஆனாலும்

இவர்களின்

காகிதங்கள்

இன்னும் இருட்டாகவே

இருக்கின்றன.


19

அவள் முகத்தை

உன்னிடம் செதுக்கிய பிறகு

இன்னும் ஏன் அங்கே

மிச்சமாய்க்கிடக்கும்

அந்த சில்லுக் குப்பைகள் ?

நான்

அந்த நட்சத்திரங்களைச்

சொல்கிறேன்.


20

சினிமாக்காரர்களின்

‘காதலி ‘ முகத்துக்கு

அாிதாரம் பூச

உன்னைத்

தொட்டு தொட்டுத்

தேய்த்ததனால்

தேய்பிறை ஆகினாய் நீ.


21

இவர்கள் உன்னை

அமாவாசை

என்று அழைத்தாலும்

நீ எனக்கு

‘பர்தா ‘ அணிந்த

பெளர்ணமி.


22

ஃப்ராய்டிசப்பிராண்டல்களின்

அடிமனத்துப் புதை காட்டில்

கள்ளச்சாராயம் காய்ச்சும்

கயவன் நீ.

அதனால் தான்

உன்னை பாட்டில் அடைத்தாலும்

‘பாட்டில் ‘ ஆகிறாய் நீ.


23

ஒரு ‘கானாக் ‘கவிஞர்

உனக்கு

ஒரு நிலாப்பாட்டு பாடுகிறார்:

‘நிலா நிலா ஓடி வாமே.

நில்லாம ஓடி வாமே.

மலெ மேல ஏறி வாமே.

போதை இன்னும் பத்தலெ

‘மில்லிப்பூ ‘ கொண்டு வாமே.

வானம் மேலெ நீயும்

வந்து வந்து போறே.

இந்த வாணலி மேலெ

ஒன்னெ

முட்டை தோச போட்டு

சுட்டுத் துண்ண ஆசை.


24

அவள் முகத்தில்

நீ

முகம் பார்த்துக் கொள்கிறாய்.

அவள் முகம்

கிடைக்காத போது

உன் பெயர்

அமாவாசை


25

நிலவுப்பெண்ணே

உன் மெளன மொழியிலும்

உன்னை

குலுங்கி குலுங்கி

சிாிக்கவைத்துப்

பார்க்க ஆசை.

அதனால்

ஒரு பெளர்ணமி இரவில்

அசையாமல் இருக்கின்ற

அந்த தடாகத்தில்

ஒரு பூவை எறிந்தேன்.

அந்த நிழலுக்குள்

குலுங்க குலுங்க

உன் சிாிப்பு நிஜம்.

 

 

  Thinnai 2000 June 11

திண்ணை

Series Navigation

ருத்ரா

ருத்ரா