கவிதைகள்

This entry is part of 2 in the series 20000604_Issue

கோகுலக்கண்ணன்


சிறகு பிளந்து

விழுந்திருந்தது புறா

கவணுடன் மனிதன்

பக்கத்தில்

ரத்தம் கசிந்து சரிந்த

பறவையின் மரணம்

மேலான உன் கேள்வியை

சமாளித்து விட்டேன் மகளே

அவன் கண்ணில் பளிச்சிடும்

கர்வம் பற்றிக் கேட்டால்

என்ன சொல்ல முடியும்

என்னால் ?

**********************

குதிரைகள் தூங்குவது எப்படி

வண்ணங்களின் வகை எத்தனை

கரை நனைக்கும் அலை வருவது எங்கிருந்து

ஏரிக்கரை மீறும் வாத்துகளின் குரல் ஏனிப்படி

எப்போதும் சிரிக்கும் பொம்மை எப்போது வளரும்

எப்போதேனும் வீட்டுக்கு வரும் சாக்கேத் மாமாவின் மீசை எங்கே

நீச்சல் குளத்தில் மீன்களில்லா நிலைமை ஏன்

..

எத்தனை கேள்விகள் உன்னிடம்

ஈடைவெளியற்று

சோர்வற்று

வெள்ளத்தின் வேகத்தோடு

நான் நின்றிருப்பதோ

அறியாமை அருகிலும்

பொறுமையின்மை மத்தியிலும்

பல சமயம் பதிலில் மெளனமே

அதிக விகிதாசாரத்தில்

நிராகரித்து உன் கவனம் திருப்பவும்

முயல்கிறேன் அவ்வப்போது

உன் கேள்விகளை சந்திக்க யலாது

எரிந்து விழுகிறேன் சில சமயம்

என் உதாசீனத்தில்

புண்படாத உள்ளத்தோடு

என் மடியில் ஏறி விளையாடுகையில்

நான் குறுகி போகிறேன்

உன் உயரம் முன்

இன்னும் சில காலம் போனபின்

எனக்கு இருக்கும்

உன்னிடம் கேட்க

ஏராளமான கேள்விகள்

அறியாமையில் விளைவதான

பாவனையுடன்

அப்போது நீ எரிச்சலுற்று

என் கேள்விகளை மெளனமாய்

புறக்கணிக்க செய்யலாம்

தாங்கிக் கொள்ள

இன்றைய உன் பெருந்தன்மை

அன்று எனக்கு

சாத்தியப்படுமா ?

 

 

  Thinnai 2000 June 06

திண்ணை

Series Navigation