சன்னல்
வ.ஐ.ச.ஜெயபாலன்.
துயில் நீங்கி
கனத்த மெத்தைப் போர்வைதனைப் புறம்தள்ளி
சோம்பல் முறித்தபடி எழுந்து
சன்னல் திரை தன்னை ஒதுக்கி விட்டேன்
இன்று கிறிஸ்மஸ் விடுமுறை நாள்.
புராணத்துப் பாற்கடலில்
சூரியனின்
பொற்தோணி வந்தது போல்
வெண்பனி போர்த்த உலகில் பகல் விடியும்.
வெள்ளிப் பைன் மரங்கள்.
இலையுதிர்த்த வெள்ளிப் பேச் மரங்கள்.
வெள்ளி வெள்ளிப் புல்வெளிகள்.
என்ன இது
பொன்னாலே இன்காக்கள் *
பூங்கா அமைத்ததுபோல்
வெள்ளியினால் வைக்கிங்கள்**
காடே அமைத்தனரோ.
காடுகளின் ஊடே குதூகலமாய்
பனிமேல் சறுக்கி ஓடுகின்ற காதலர்கள்.
பின் ஓடிச் செல்லும் நாய்கூட மகிழ்ச்சியுடன்.
நான் மந்தையைப் பிரிந்து வந்த தனி ஆடு.
போர் என்ற ஓநாயின்
பிடி உதறித் தப்பிய நான்
அதிட்டத்தால்
வாட்டும் குளிர் நாளில் கூட
வாழ்வை ரசிக்கும் கலையை அறிந்தவரின்
நாடு வந்தேன்.
வெண்பனியின் மீது சூரியன் விளையாடும்
நாட்கள் எனக்கு உவகை தருகிறது.
என் மைந்தன் என்னோடிருந்தால் இவ்வேளை
நானும் அவனும் இந்த
வெள்ளி வெள்ளிக் காடுகளுள்
விளையாடக் கூடுமன்றோ.
“சூரியனைப் பிடித்துத் தா” என்று அவன் கேட்டால்
வெண்பனியில் சூரியனை வனைந்து நான் தாரேனோ.
“ஏனப்பா இலங்கையில் வெண்பனி இல்லை” என்பானேல்
முன்னர் இருந்ததென்றும்
கொதிக்கின்ற சூரியனார் அதன்மீது காதலுற்று
அள்ளி அணைக்க அது உருகிப் போனதென்றும்
பின்னர் துருவத்தை வந்து அது சேர்ந்த தென்றும்
அதனாலே சூரியனார் துருவம் வரும்போது
வெப்பத்தை நம் நாட்டில் விட்டு விட்டு வருவதென்றும்
கட்டி ஒரு நல்ல கதை சொல்ல மாட்டேனோ ?
கருவில் இருந்தென் காதல் மனையாளின்
வயிற்றில் உதைத்த பயல்
நினைவில் இருந்தென் நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்.
நமக்கிடையே
ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக்கிறது
விசா என்ற பெயரில்.
வெண்பனி மீது
இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.
*இன்கா : தென் அமரிக்க தொல்குடிகள்- பொன்னால் செயற்க்கைப் பூந்தோட்டம்
அமைத்தவர்கள்.
** வைக்கிங்: நேர்வீஜியத் (ஸ்கண்டிநேவிய) தொல்குடிகள் (1990 )
இது ஒஸ்லோவில் 1990 டிசம்பர் எழுதப்பட்ட கவிதை. இக்கவிதையின் நோர்வீஜிய மொழியாக்கம் வெளிவந்தபோது எனது மனைவிக்கும் மகனுக்கும்
நோர்வே வர விசா அனுமதி வளங்கப்பட்டது.
திண்ணை
|