நண்பகல் *
————-
வெளிச்சமும் வெம்மையும்
வீழ்த்த இயலாது
எங்கும் விரவிக்
கிடக்கிறது
இன்று.
மாறும் நிறங்கள்
பதிவு பெறும்
ஒளி நாடாக்களென
காற்றில் நனைகின்றன
இலைகள்.
இப்போதைக் கடந்து
இப்போதில் நுழைந்து
கடக்கிறது என்
விநாடி முள்.
முடிவற்ற ஒரு கணத்தில்
பிறந்து வளர்ந்து
நரையும் கொண்ட கிழவன்
சூரியனைச் சுலபமாய்
மறைக்கிறான் தன்
இடது புறங்கையால்.
டிசம்பர் செவ்வாய் *
————————- இந்நாள் பொன்னாள் ஆகும்
அறிகுறி எதுவும் இல்லை இதுவரை.
தலைவர் எவரும் சாகவில்லை
தெய்வக்குமாரன் பிறந்ததைச் சுட்டும்
விண்மீன் எதுவும் தென்படவில்லை.
அரிசி விளைச்சலை அதிகப்படுத்த
ராக்கெட் புறப்படும் தகவலுமில்லை.
இன்றும்
என்றும் போல
சமுத்திரம் மற்றும்
தெருக்கோடி குட்டையில்
சூக்குமத் தாரைகள் கிளம்பி
வானோக்கி உயர்ந்திருக்கும்
பெயரிடப்படாத குட்டி நட்சத்திரம்
இடம் பெயர்ந்திருக்கலாம் ஒருவேளை.
லட்சக்கணக்கில் மண்புழுக்கள்
மண்ணைத் துளைத்து மீண்டிருக்கும்.
எழுதப்படாத
மனித குல வரலாற்றில்
இடப்பட்ட காற்புள்ளியாய்
நடக்கிறேன்
டாக்கடை நோக்கி.
-எம்.யுவன் ‘வேறொரு காலம் ‘ கவிதை தொகுப்பிலிருந்து.
வெளியீடு மையம்,
7, ராகவன் காலனி
மேற்கு மாம்பலம்,
சென்னை-600 033
விலை. ரூ30.
மின்னஞ்சல் தொடர்புக்கு: virutcham@mailcity.com
Keyin- Gokulakannan
திண்ணை
|