விக்ரமாதித்யன் கவிதைகள் 2
1.
உணவின் முக்கியத்துவம்
உன்னைவிட எனக்குத் தெரியும்
ஓட்டல்களில் மேஜை துடைத்திருக்கிறேன்
இலையெடுத்திருக்கிறேன்
கல்யாண வீடுகளுக்குப் போய் பந்திக்கு
காத்துக்கிடந்திருக்கிறேன்
அன்னதானவரிசையில்
கால்கடுக்க நின்றிருக்கிறேன்
கோயில் உண்டைக்கட்டிகளிலேயே
வயிறுவளர்த்திருக்கிறேன்
சாப்பாட்டுச்சீட்டுக்கு
அலைந்து திரிந்திருக்கிறேன்
மதிய உணவுக்கு
மாநகராட்சிலாரியை எதிர்பார்த்திருந்திருக்கிறேன்
சொந்தக்காரர்கள் சிநேகிதர்கள்
வீடுதேடிப் போயிருக்கிறேன்
சாப்பாட்டுநேரம்வரை இருந்து
இலக்கியம் பேசியிருக்கிறேன்
ஒருவேளைச் சோறில்லாது
கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன்
அன்றைக்கு
அம்மை ஒறுத்துவைத்தாள்
இடையில்
வந்த இவள்
இன்றைக்கும்
யார்யார்தயவிலோதான்
இருக்கமுடியாது யாரும்
என்னைக்காட்டிலும்
சாப்பாட்டு அருமை தெரிந்தவர்கள்
2.
மிக இற்றுநைந்துபோன வாழ்வை
வெகு பழைய மொழியில் சொல்லி சலிப்பூட்டுகிறாயே
நதிகூட
கரைகளுக்கு மத்தியில்தான்
உயிர்வாழும் போட்டியில்
மிருகங்கள் மனிதர்கள் என்ற பேதமில்லை
உயிரென வரும்போது
ஒரு வித்யாசமும் கிடையாது
சாதுவைக் கொண்டாடி
சண்டாளனைக் கண்டனம் செய்வதேன்
சாது சண்டாளனென்று பிரித்தபின்
சங்கடப்படுவதெல்லாம் வீண்
காணாததைக் காண
அறியாததை அறிய
கண்டு அனுபவித்ததெல்லாம்
காணாமல் போக
எழுதிப்பார்த்ததெல்லாம் எழுத்தாமோ
வாழ்ந்துபார்த்ததெல்லாம் வாழ்வாமோ
சூர்ணம் தின்னாது
பூர்ணனாக ஏலாது
கற்காலத்துக்கும் தற்காலத்துக்கும்
காணும் இடைவெளியென்ன
பஞ்சபூதங்களைக் கேள்
அஞ்சுவிரல்களைப் பார்
***
– நன்றி – கிரகயுத்தம் ***
திண்ணை
|