லாவண்யா கவிதைகள்

This entry is part [part not set] of 4 in the series 20000206_Issue

அவள்



ஒவ்வொரு முறை சிக்னலில் நிற்கும்போதும் அவள் வருவாள்
கையில் ஒரு நசுங்கின பாத்திரம், கறுப்பேறின புடவை
என்ன வைத்திருப்பாள் அதனுள் என்று தொியாத அந்த பை
அவள் தினமும் வருவாள்
மறுத்தால் பேசாமல் போய் விடுவாள்.
அருவருப்பாய்ப் பார்த்தால்,
உள்ளே அழுக்குக் கைநீட்டி உடை தொடுவாள்., கிள்ளுவாள்.,
கை நீட்டினதிற்கே அருவருப்பாகிறவர்களை
தீண்டி வதைப்பதில் அவளுக்கு ஒரு சந்தோஷம்.
ஆட்டோ டிரைவர்கள் சிலர் அவளை விரட்ட முயல்வதுண்டு.
அப்போது மட்டும் கோபம் வரும் அவளுக்கு,
அசிங்கமாய் சைகைகள் செய்து சரளமாய் தெலுங்கில் திட்டுவாள்
அவளால் எல்லா பிச்சைக் காரர்கள் மீதும் கோபம் வரும்.
சில வாரக் கடைசிகளில்
அவளுடன், அவள் ஜாடையில் ஒரு சின்னப் பெண் வரும்
கைகளை பாவாடையில் துடைத்துக் கொண்டு பிஞ்சுக் கரம் நீட்டி பிச்சை கேட்கும்.
கொடுத்தால் சிாிக்கும்.,
மறுத்தாலும் சிாிக்கும்.,
மறுபடி கையேந்தி ‘கொடேன் ‘ என்பது போல் சிாிப்பு மாறாது பார்க்கும்.
ஒரு முறை அதன் கையில் ஒரு பாடப் புத்தகம் பார்த்தேன். படிக்கிறது போல.,
அன்றிலிருந்துதான்
ஒரு நாள் தவறாது காசு கொடுக்கிறேன் இந்த பிச்சைக் காாிக்கு !
மற்றபடி எதற்காகவும் இவளைப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தொியும்.


கேள்விகளும் பெயர்களும்

*************************************
ஒவ்வொரு முறை ஊருக்குப் போகிறபோதும்,
இதுவேதான் நிகழ்கிறது.
மாலைப் பொழுதுகளில்
காலாற நடக்கலாமென்று வெளியே போனால்,
யாரேனும் பிடித்துக் கொள்கிறார்கள்.,
அவர்களை எங்கேயோ பார்த்த நினைவுதான் எனக்கு.,
ஆனால் யாரென்று தெளிவாய்த் நினைவிலிருப்பதில்லை.
அவர்களுக்கு என்னை மிக நன்றாய்த் தொிந்திருக்கிறது.
பள்ளியில், என் சின்ன வயது பட்டப் பெயர்கள் முதல்,
சைக்கிள் கற்றுக் கொள்ளப் போய்
காலுடைந்து ஒரு மாதம் படுத்திருந்த கதை வரை,
எல்லாம் சாியாய்ச் சொல்றைார்கள்.
கண்களில் சந்தோஷமும் பெருமிதமும் வழிய, கேள்விகளில் துளைக்கிறார்கள்.
‘எப்படி இருக்கே ? ‘
‘பார்த்து ரொம்ப நாள் ஆச்சில்ல ? ‘
‘கோயம்பத்தூர்லயா படிச்சே ? எனக்கு தொியவே தொியாதே ‘
‘வேலை பார்க்கறியா., என்ன சம்பளம் ? ‘
‘கண்ணுக்கு கீழே கருவளையமெல்லாம் விழுந்திருக்கு., வேலை ரொம்ப அதிகமோ ? ‘
‘எதுக்கு ஆந்திராவிலே போய் கஷ்டப் படணும் ை நம்ம ஊருப் பக்கம் வந்துடலாமில்ல. ? ‘
‘சட்டு புட்டுன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க வேண்டியதுதானே ? ‘
‘என் தம்பி ஒருத்தன் டிப்ளமோ முடிச்சிருக்கான்.,
உன் கம்பெனியிலே எதுனா வேலை கிடைக்குமா பாரேன் ‘
– இப்படியாய் எல்லையில்லாமல் கேள்விகள்.
எல்லா கேள்விகளுக்கும் எப்படியோ பதில் சொல்லி விடுகிறேன்,
என்றாலும், மனதிற்குள்
எப்போதும் ஒரு நடுக்கம்.
‘என் பேர் என்ன சொல்லு பார்க்கலாம் ‘
என்று இவர்களில் யாராவது கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது ?

Thinnai 2000 February 6

திண்ணை

Series Navigation

அவள்

அவள்