21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை 

This entry is part 9 of 49 in the series 19991203_Issue

குன்றம் மு இராமரத்தினம் 


 

    குறிப்பு – ‘தாராமதி ‘ ஆசிரியர் திரு குன்றம் மு இராமரத்தினம், குறிஞ்சி வேளாளர் சமூகத்தின் மேம்பாடு கருதி தமிழகம் தழுவிய அமைப்பை உருவாக்கி பல்லாண்டுகள் பணியாற்றினார். இன்று சாதி இறுக்கம் தளர்ந்துள்ளதா ? இல்லையா அன்று அவரிடம் முன்வைத்த கேள்விக்கு பதிலாக இக்கட்டுரை ‘நிகழ் ‘ அக்டோபர் 1995 இதழில் வெளியானது. 
மனித சமுதாயத்தில் இன்று காணப்படும் குறை கொடுமைகளானாலும், நிறை -நலம் என்றாலும் இந்த எதிர்மறைகளின் வேர்கள் என்னவோ இறந்த காலத்தில், அதாவது வரலாற்றில் இருக்கிறது என்பதும், அதை அங்கு கண்டு குறைகளின் வேர்களைக் கல்லியெறிதலும், நிறைகளின் வேர்களை நீரூற்றி வளர்த்தலும் சமூக நலம் நாடுவார் நிகழ்காலப்பணிகள் என்பது என்பது யாவரும் ஒப்புக் கொள்வது.இந்த கல்லுதலுக்கும் நீரிடலுக்குமான யுத்திகள் – அறிவியங்கள் (மார்க்சியம், காந்தியம் போன்ற இயங்கள்) பலவுண்டு. எனினும், குறை எது – நிறை எது என்பதிலே காணப்படும் கருத்து வேறுபாடுகளும், அதற்கான காரணங்களும் அலசி ஆராய வேண்டியவைகள்தாம். ஆனால் அதில் நாம் நுழையப்போவதில்லை. 

சாதி, சாதீயம் -அவைகளால் மக்களிடையே எழுந்துள்ள பிரிவு – பிளவு-மோதல்-சாதல் ஆகிய போக்குகள் கொடுமையானவை; கடுமையான கண்டனங்களுக்கும், ஒடுக்கலுக்கும் உட்பட வேண்டியவை என்பதிலே யாருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்க நியாயமில்லை – இனினும் சொல்லப்போனால், மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக – அமைதியும் இனிமையும் கொண்டதாக அமைய இந்த சாதி – சாதிய வழக்கு ஒழிதல் வேண்டும்; அதை ஒழிக்காமல்-அழிக்காமல் எந்த பொருளாதார அரசியல் சீரமைப்புகளை மேற்கொண்டாலும் அவை வெற்றி பெறா என்ற கருத்துக்களும் வலிமையுடன் விவாதிக்கப்படுகின்றன. எதையும் இறுதியாக மதிப்பீடு செய்வது இந்த சாதி-சாதீயம்தான் என்றும் இறுகிப்போன ஒரு வழக்கு இன்று – இருபதாம் நூற்றாண்டு இறுதியில் எப்படி இருக்கிறது – அது அடுத்துவரும் புதிய நூற்றாண்டில் எப்படி இருக்கும் என்பதை கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் அவற்றை கூர்ந்து பார்த்து உணர்ந்தவைகளை வைத்து யூகிப்பதுதான் கட்டுரையின் குறியும் அறிதியுமாகும். அனினும் சாதி-சாதியம் பற்றிய சில அடிப்படைகளை தெளிவு படுத்திக்கொள்வது இங்கு அவசியமாகும். 

சாதி எப்படி வந்தது என்பதிலெல்லாம் நாம் மண்டையைக் குடைந்து கொள்ளத் தேவையில்லை. மாடுகளுக்கு காங்கியம் மாடு, ஆலம்பாடி மாடு, பர்கூர் மாடு என்று அவற்றுடன் பிறப்பிடங்களைக்கொண்டு அழைப்பதுப்போல – உழவுமாடு, வண்டிமாடு, செக்குமாடு, பொதிமாடு, சாமிமாடு என்று அவற்றின் பயன்பாடு அல்லது பணிகொண்டு குறிக்கப்படுவது போலத்தான் ஒவ்வொரு மனிதக் கூட்டம் அல்லது குழுவுக்கும் சாதி பெயராகியிருக்கவேண்டும். இவை எந்த ஒரு கடவுள் அல்லது அறிவு ஜீவியின் படைப்புக்கள் அல்ல என்று நாம் கொண்டால் போதுமானது. 

வேறுபட்ட மாட்டினங்கள் ஒரு பகுதியில் வாழ நேரும்போது, அவசியமில்லாமல் அவை மோதி முட்டிக்கொள்வதில்லை. நாய்ச்சாதிகள் அப்படியில்லை. ஆதிக்கவுணர்வோடு ஒரு ஜாதி நாய் வேறு சாதிநாயைக் காணும் போது கடித்துக் குதறும் – மனித சாதிகள் இந்த வகையில் நாய்ச்சாதிப் பண்பு கொண்டவைதான் என்பதிலே நமக்குச் சந்தேகமில்லை. இப்படியான மோதல்கள் புயல்போல ஏற்பட்டாலும், நாளாவட்டத்தில் அவை தென்றலாகி அமைதிகாணும். இந்த நிலை நீடித்தவரை அக்கால மனித சமுதாயத்தில் இன்றுள்ள அவலங்கள் இருந்தன என்று கூற காரணங்கள் இல்லை. 

இப்படித் தோன்றி அலைந்து திரிந்த சாதிக் கூட்டங்கள் காலப் போக்கில் ஒன்றுபட்டு வாழும்போது, மனிதத் தேவைகளின் உற்பத்திப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக்கேற்ப இந்தப் பெயர்க்குழுக்கள் அல்லது கூட்டங்களை வகை தொகைப்படுத்தி, இந்தயிந்த கூட்டங்கள் இன்னின்ன வேலைகள் அல்லது தொழில்கள்தான் செய்யவேண்டும்; அவைகளுக்கிடையேயுள்ள உறவு முறைகள் இன்னின்ன முறைப்படித்தான் இருக்கவேண்டும் என வலியோரால் விதிகள் ஆக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதானது வரலாற்றுவழி நாம் அறிவது. இப்படிப் புகுத்தப்பட்ட இப்புதிய வழக்காறு (முறைமை)கள் சாதிகளுக்கு ஒரு கனதியைக் கொடுத்தன. அதாவது, சாதிகள் சாதியம் என்ற அறிவியப்படுத்தப்பட்டன. 

அவை பிறகு இறுகி நாளடைவில் மக்களின் சமூக அந்தஸ்த்தில் ஏற்றத்தாழ்வுகளையும் அதன் அடிப்படையில் அடக்கல்-ஒடுக்கல் சுரண்டல்களும் தோன்றி பொருளாதார ஏற்றத்தாழ்வுககளுக்கும் வகை செய்தன. இப்படியான சாதீயத்தால் சில சாதியினர் பெருவாழ்வு பெற்றனர். பல சாதியினர் சிறுவாழ்வு பெற்றனர். இன்னும் பல சாதிகளோ வாழ்வை வெறும் உயிர்ப்பாக்கிக் கொள்ள நேர்ந்தது. இந்த சமூக அநீதியால் பெருவாழ்வு பெற்ற சிறு கூட்டங்கள் அதைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வதும், வாழ்வு சிறுத்த கூட்டங்களும் வாழ்வை இழந்த கூட்டங்களும் அவற்றை எதிர்த்துப் போராடலும் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுத் தொடர் நிகழ்வுகள் இவை. 

இந்த மக்கள் போராட்டங்கள் இன்றுவரை தோல்வியில்தான் முடிந்தன என்பது பல அறிவுஜீவி ஆய்வாளர்களின் முடிவு. ஆனால் அது பாடி அல்ல. பாதிக்கப்பட்ட ஜாதிகள் தனித்தனியாக சில சமயம் ஒன்றிரண்டு கூட்டாக சாதீயத்தடைகளை எதிர்த்து நிகழ்த்திய போர்-போராட்டங்களில் வெற்றிகளைப் பெற்ற கதையும் உண்டு. அந்த சாதிகள் வழி வந்தவர்கள் மீண்டும் அதை இழந்த கதையும் உண்டு. இன்றைய பிற்படுத்தப்பட்ட சாதிகளும், தாழ்த்தப்பட்ட சாதிகளும் தங்களை ஆண்ட பரம்பரையாக பறை சாற்றிக் கொள்வது எல்லாம் இந்தக் கதைகளை வைத்துத்தான் என்பதை நாம் கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். எப்படியோ, இந்த சாதீயப் போராட்டம் சாதிகளை ராட்டினத் தறிகளைப் போல இறங்கி ஏறுவதான சுழற்சி முறையிலிருந்து வட்டத்தூறியாக மாறும் திருப்பத்துக்கு இன்று வந்துள்ளன என்பதுதான் எமது கணிப்பு. 

இந்த சாதீயத்தால் ஏற்பட்ட அவலங்கள் குறித்து நாம் நிறையவே படித்தும், பார்த்தும், கேள்விப்பட்டுமிருக்கிறோம். அவற்றில் சிகரமாக கருதப்படுவது தீண்டாமை. இந்த தீண்டாமையின் வீச்சு சாமானியமானதல்ல. தீண்டாமைக்குட்பட்ட மக்கள் மேல்மட்டச் சாதிகளின் தெருக்களில் நடக்க முடியாது. கோயில்களில் புகுந்து சாமி கும்பிட முடியாது. ஊரின் மூலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் குடிசை போட்டுத்தான் வசிக்க வேண்டும். இடுகாடுகள்கூட தனிதான். நல்ல துணிமணிகள் அணிவது. நகைகள் பூணுவது, வண்டிகளில் ஏறி ஊர்த்தெருக்களில் சவாரி செய்வது எல்லாமே தடைப்படுத்தப்பட்டவை. மாடு வளர்க்கலாம். கறந்த பாலை தேனீர் கடைக்காரன் கூட ஏற்க மாட்டான். பசும்பாலை தீண்டப்படாதாருக்கு விற்பதுகூட சாதீய முறையில் பாவம். இவர்கள் குழந்தைகளுக்கு மாற்றுப்பாலாக மாட்டுப்பால் புகட்டுவதுகூட தடை செய்யப்பட்டிருந்தது. இப்படியான கொடூரக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் இந்த சாதீயம் வகுத்த தீண்டாமையால் தாழ்த்தப்பட்ட சாதிகளின் மக்கள். இந்த தீண்டாமை பிற்படுத்தப்பட்ட மக்களையும் விட்டு வைக்கவில்லை. தாழ்த்தப்பட்டவன் உயர்சாதியான் வீட்டுத் தெருவரை போகலாம்.பிற்படுத்தப்பட்டவன் வாசல் வரை போகலாம். சில சாதியார் அதிகம் போனால் திண்ணைவரை செல்லலாம். ‘உள் ‘ என்று சொல்லப்படும் வீட்டுக்குள் எந்த பிற்படுத்தப்பட்ட சாதியானுக்கும் ஏற்பும் இல்லை- வரவேற்பும் இல்லை. 

இந்த சாதீய வீச்சு அறுபது ஆண்டுகளுக்கு முன்புகூட அதாவது முப்பதுகள் வரை முழு வீச்சோடு செயல்பட்டது உண்மை. ஆனால் நாற்பதுகளிலேயே அந்த சாதீயக் கட்டுமானத்தில் விரிசல் ஆரம்பமாகி விட்டது. அந்த விரிசல் பெரிதாகி பெரிதாகி, அந்த சாதீய மாளிகை வாசல்தளம் என்ற நிலையை கடந்து கொண்டு இருக்கிறது இந்த தொண்ணூறுகளில் என்பதுதான் நாம் இன்று காணும் காட்சி. 

இன்று நாட்டுப்புறங்கள் நகர்மயம் ஆகிக்கொண்டிருக்கின்றன. வளர்ந்துவரும் பேரூர்களில் பரம்பரைக் கைத்தொழில்கள் சிறு இயந்திரத் தொழிலாக மாறி வருகின்றன. சிறிய – நடுத்தர தொழிற்சாலைகள் கிராமப் புறங்களில் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. விவசாயம் இயந்திரமயமாகிக் கொண்டிருக்கிறது. இன்று தேனீர்க்கடை, தையல்கடை, சலவைச்சாலை, சவரச்சாலை இல்லாத ஊர்கள் இல்லை. – பெரிய ஊர்களில் மளிகைக் கடை, ஜவுளிக் கடை, நகைக்கடைகள்கூட தோன்றிவிட்டன. 

நாற்பதுகளில் – ஏன் ஐம்பதுகளில் கூட கிராம தேனீர்கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி அலுமினியப் போனி கடைத்தாழ்வாரத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. தையல் கடைக்காரன் தாழ்த்தப்பட்ட மக்களின் பழைய துணியைத் தைக்க மாட்டான். சவரக் கடைக்காரன் சிரைக்க மாட்டான். தொண்ணூறுகளில் இந்நிலை முற்றுமல்லாவிட்டாலும் முக்கால் பாகம் மாறி விட்டது. 

ஐம்பதில் கூட நான் பணியாற்றிய நகர்ப்புற அரசு அலுவலகச் சிற்றுண்டிச் சாலையில் துப்புரவு பணியாளர்களுக்குத் தனி தம்ளர் இருப்பதைக் கண்டு புகார் செய்திருக்கிறேன். அதே அலுவலகத்தில் ( வேறு அரசு அலுவலகங்கள், பஞ்சாயத்துகளில் கூட) துப்புரவுப் பணி செய்யும் தாழ்த்தப்பட்ட சாதி பணியாளர்களுக்கு தனியாக வரிசை வீடுகள் கட்டி குடியமர்த்தப்பட்டார்கள். அது என்னால் கேள்விக்குட்படுத்தப்பட்டது. இப்பொழுது அப்படி இல்லை. மற்றசாதி கீழ்நிலைபணியாளர்களோடு தாழ்த்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களும் அடுத்தடுத்த வீடுகளில் செளஜன்யமாக வாழ்கிறார்கள். இவை என் எதிர்ப்பின் விளைவுகள் அல்ல. அந்தத் துப்புரவுப் பணியாளர்களின் எழுச்சியோ -எதிர் நடவடிக்கைகளோ அல்ல. மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மாற்றம் இன்று நகர்மயமாகும் கிராமங்களிலும் பரவலாக காணப்படுகிறது. 

இப்போது நான் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். அதில் போயர் என்கிற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளிகள், ஆச்சாரி என்கிற பிற்பட்ட சாதித் தச்சர்கள், கம்பிகட்டுபவர், வெள்ளையடிப்போர் கூட வெவ்வேறுபட்ட பிற்பட்ட சாதியர்கள்தான். இவர்களோடு சித்தாள்களாக தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்களுக்கு தேனீர் கோப்பைகளில் ஊற்றி வழங்குவது இந்த நடுத்தர சாதியார்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒரு அருந்ததியப் பெண்தான். அவள் தரும் தேனீரை மறுத்தவர் எவரும் இல்லை. என்ன காரணம் ? மக்களிடையே இருந்த சாதீய பிடிப்பு தளர்ந்து உடைந்து போனதாகவே நான் நினைக்கிறேன். அது மட்டிமல்ல – இன்றைய தலித்கள் அன்றைய தலித்கள் போலில்லை. அவர்களி இன்று அடையாளப்படுத்த முடிவதில்லை.பேர் மாறியிருக்கிறது. பேச்சு மாறியிருக்கிறது. உடை உணவுப்பழக்கங்கள் கூட மாறியிருக்கின்றன. வீடுகள் கூட மாறிவிட்டன. அவர்களுக்கும் ஏனைய சாதியினர்களுக்கும் இடையே இருந்த வெளி வேறுபாடுகள் பெருமளவுக்கு குறைந்து இருக்கிறது. அவர்களின் குரலும் சற்று உயர்ந்திருக்கிறது. 

இந்த மாறுபாடுகள் சமுதாயம் நிலவுடமையிலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிவிட்டதன் விளைவு – மார்க்ஸியம், அம்பேத்காரியம், பெரியாரியம் ஆகியவற்றின் தாக்கங்கள் – தலித் இயக்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவுகள் – அரசின் சட்டங்கள் மற்றும் ஒதுக்கீட்டின் பயன்கள்- சாதிக் குழுக்களின் விழிப்புணர்வு- பொதுவாக மக்களுக்குள் ஏற்பட்ட உரிமையுணர்வுகள் இப்படி நிறையக் காரணங்களைக் கட்டி கட்டி வாதிடலாம். அப்படி வாதிடுபவர்களின் வாதங்களில் உண்மையில்லை என்றும் சொல்ல முடியாது. அத்தனையும் எறிந்த மொத்தக் கல்லடிகள் தான் சாதியங்களைக் காயப்படுத்தி வீழ்த்துகின்றன என்றும் சொல்லலாம்- கொள்ளலாம். எப்படியோ சாதிக்கு பூசப்பட்ட வர்ணம் – சாயம் வெளுக்கிறது. இன்னும் கறை முழுதாகப் போகவில்லைதான்- ‘அடுத்து வரும் நூற்றாண்டில் அது சுத்தமாகப் போய்விடும் – மிச்சப்படுவது பெயரளவிலான சாதிகள் மட்டுமே – அது ஒன்றும் அப்படி ஆபத்தானவை அல்ல ‘ என்று நான் நம்புகிறேன். நீங்கள் ?
  Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்விழாவும் நாமும் >>