நீதியும் சமூக நீதியும்

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

சத்யானந்தன்


சென்னையில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி தன் மீது ஆசிரியைகளால் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டுப் பின் சக மாணவிகளால் தொடர்ந்து அவமானப் படுத்தப் பட்டு தன் அப்பழுக்கற்ற நிலையை நிறுவ வேறு வழி தெரியாது தற்கொலை செய்து கொண்டார். வறிய நலிந்த பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவி பட்டதாரி ஆகும் கனவைச் சுமந்த அவளின் பெற்றோருக்கு நமது பதில் இது. தற்கொலைக் கடிதத்தை பூர்த்தி செய்ய இயலாது கண்ணீரில் அக்கடிதம் நனைந்து பாதியில் நின்று போனது.

அடித்தட்டு மக்கள் முன்னேறுவது தலை நிமிர்ந்து நிற்பது குறித்த ஒரு உணர்வுபூர்வமான ஆசை நம்மிடம் இல்லை. நம் கனவுகளில் அவர்தம் நல்வாழ்வுக்கு இடமில்லை. எதிர்கால இந்தியாவிலும் சமூக நீதி கனவே என்பதற்கு அவமானத்தின் உச்சமான இந்தத் துயரச் சம்பவம் ஒரு கட்டியம். அறவுணர்வு (?) மிதமிஞ்சிய ஆசிரியருக்கு மனிதநேய விழுமியங்கள் மரத்துப் போயிருப்பது புறையோடிப்போன வருணாசிரம பாரம்பரியத்தின் விளைவே.

நீதியும் சமூக நீதியும் வெவ்வேறானவை என்னும் மனப்பாங்கு நம்மிடையே சர்வ சாதாரணமாக நிலவுகிறது. அரசு மற்றும் அரசியல்வாதிகளால் சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு பற்றியது மட்டுமே,அதுவும் தலித் மற்றும் தலித் அல்லாத அரசியல் கட்சிகளின் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் கையாளப்படும் என்று நிறுவப்பட்டிருக்கிறது. பணியிடங்களிலும் தொழிற்சங்க அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளிலும் இதை வெளிப்படையாகவே காணலாம்.

ஒரு கேலி நடவடிக்கை போல சமூக நீதி பற்றி தலித்துகளிடம் மட்டுமே பேசி வருவதில் அரசியல்வாதிகள் வீறுகொள்கிறார்கள். எவன் பாதிக்கிறானோ அவனிடம் பேச வேண்டயதை பாதிக்கப் பட்டவரிடம் பேசுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாகும். அரசியலாக்கப்பட்ட ஒரு விஷயம் சமுதாயத்தின் கருத்துத் தளத்திற்கு அன்னியமாகிவிடுகிறது. தலித் அல்லாதவரின் முன் சமூக நீதி குறித்த எந்தக் கேள்வியும் எழுப்ப எந்த ஒரு மன்றமோ ஊடகமோ இல்லை. (ஊடகங்களுள் சினிமா தலித்தை எப்படிச் சித்தரிக்கிறது என்பது மனதை மிகவும் பாதிக்கும் விஷயம்). இவ்வாறாக தனது சகோதரனைச் சுரண்டுவது குறித்து எந்த ஒரு குற்ற உணர்வும் பாதிப்பும் இல்லாத பெரும்பான்மைச் சமுதாயம் உருவெடுத்துள்ளது. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சமூக நீதி என்பது விவாதங்களும் பதிவுகளும் அதன் விளைவான புரிதல்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக எதிர்மறைச் சித்தரிப்புச் செய்து விட்டனர்.

தலித் அல்லாத ஒரு படித்த இளைஞனிடம் ஒரு வழியாகப் பிரச்சனையைப் புரிய வைத்தால் “கடிகாரத்தைத் திருப்பி வைக்க இயலாது,” ” என் முன்னோர் செய்ததற்கு நான் என்ன செய்ய ” மற்றும் ” இப்போதுதான் சலுகைகள் இருக்கிறதே” என்னும் பதில்களே கிடைக்கும்.

சமூக நீதி மட்டுமல்ல சமுதாயத்தை பாதிக்கும் எந்த ஒரு கேள்வியின் விடையை நோக்கி நகர நாம் தயாரில்லை. தலித், நலிந்தோரின் அவலங்கள் பற்றிய சரியான புரிதல் அவசியம். நட்புமுறையாகவோ அல்லது கட்டாயமாகவோ எல்லா சாதி சங்கத் தலைவர்கள், சாதிக் கட்சிகள், சாதித் தொழிற் சங்கங்கள், தலித் அமைப்புகள் (கட்சிகளும் பிறவும்), அரசியல் கட்சிகள், சினிமா மற்றும் வாணிப சங்கங்கள் ஆகியவற்றின் பிரதினிதிகள் ஒரு பக்கமும் மாணவர் மறு பக்கமும் பங்கேற்கும் கலந்துரையாடல்கள் எனத் தொடங்கி கருத்தரங்கங்கள், விவாத அரங்குகள் எனத் தொடர வேண்டும். ஒவ்வொரு அமைப்பும் தலித்துகள் கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழிற்திறன் பயிற்சி பெற தான் என்ன செய்தேன் செய்யப் போகிறேன் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

அறநெறி, மனசாட்சி, நீதி தொட்ட விழுமியங்களில் சமூக நீதியின் பக்கமிருத்தலும், பங்களிப்புச் செய்தலும் இயல்பாக இடம் பெறும் சூழல் உருவாக வேண்டும். நீதி என்பது ஒன்றே எங்கும் நிறைந்தவனைப் போல.

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்