நினைவுகளின் சுவட்டில் – (60)

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

வெங்கட் சாமிநாதன்



அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னுடன் பேச நிறைய இருந்தது. கேட்க ஆயிரம் கேள்விகள். ஊர் எப்படி இருக்கிறது.? தமிழ் பேசறவா இருக்காளா? நான் எங்கே சாப்பிடுகிறேன்?. சாப்பாடு நன்றாக இருக்கிறதா? கூட யாராவது பெரியவா துணைக்கு இருக்கிறார்களா? நன்றாக ஒழுங்காக வேலை செய்கிறேனா? பெரிய அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டு அவர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறேனா? இங்கே ஊரில் அப்பா அம்மாவிடம், மாமாவிடம் எப்படி இருந்தாலும், முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை. பாஷை தெரியாத ஊரில், எல்லோரும் அவர்கள் காரியத்தைத் தான் பார்த்துக்கொள்வார்களே தவிர நமக்கு ஒரு கஷ்ட காலத்துக்கு எப்பவாவது உதவ வருவார்களே தவிர நாம் தான் நல்லபடியா அனுசரிச்சு நடந்துக்கணும்”….. இந்த மாதிரி தான் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி எனக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஜாம்ஷெட்பூர் மாமா, மாமி பற்றிச் சொன்னேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். “அப்புவுக்கு நம்மகிட்டே ரொம்ப ஒட்டுதல்டா. எந்த சீமைக்குப் போனா என்ன, நம்ம மறக்க மாட்டாண்டா. பாட்டி கிட்டேயும் (நிலக்கோட்டைப் பாட்டி) அப்புவுக்கு பாசம் ஜாஸ்தி” என்றாள் அம்மா. ஹிராகுட்டைப் பற்றிக் கேட்டாள் அம்மா. அப்பாவும் கேட்டுக் கொண்டிருந்தார். சுற்றித் தங்கையும் தம்பியும் உட்கார்ந்து கொண்டு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். . முதல் தங்கை கல்யாணம் ஆகி சென்னையில் இருக்கிறாள். “உன்னாலே வரமுடியாதுடா, தெரியும். இப்போதான் வேலைக்குச் சேந்திருக்கே. எங்கேயே கண்காணா இடத்திலே இருக்கே. நீ வராட்டா பரவாயில்லே. அதுக்காக நீ ஒண்ணும் வருத்தப்பட வேண்டாம். ஒருத்தரும் தப்பா நினைச்சிக்கலே. அது சரி அங்கே சாப்பாட்டுக்கு என்னடா பண்றே? எங்கே சாப்பிடறே. சாப்பாடு நன்னா இருக்கா.? அங்கெல்லாம் ரொட்டி தான் சாப்பிடனுமாமே. அப்படியா? அப்படீன்ன ரொட்டி ஒத்துக்கறதாடா?” என்று கேட்டாள் கவலையோடு. ஜெம்ஷெட்பூரில் மாமாவோடு இருந்தபோது கவலை இல்லை. இப்போது தனியாக இருக்கறானே பிள்ளை. எங்கே என்னத்தைச் சாப்பிடறானோ?” என்ற கவலை. “முதல்லே ஹிராகுட் போனப்போ அங்கே ஒரு நாயர் ஹோட்டலைத் தவிர வேறே ஒண்ணும் இருக்கல்லைம்மா. அங்கே தனியா இருக்கறவா எல்லாருக்கும் அந்த நாயரை விட்டா வேறே கதி இல்லை. அப்புறம் இப்போ கொஞ்ச நாளாத் தான் ஒரு பாலக்காட்டுக்காரர் மெஸ்ஸுன்னு ஒண்ணு நடத்தறார். இப்போ தமிழ்க் காரா எல்லாரும் அங்கே தான் சாப்பிடறோம். சாப்பாட்டுக்கு ஒண்ணும் கஷ்டமில்லை என்றேன். நான் நாயர் ஹோட்டலில் சாப்பிட்டேன் என்று சொன்னதும் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அது ரசிக்கவில்லை. “என்னென்னமோ சொல்றானே” என்ற கவலை அவர்கள் முகத்தில் தெரிந்தது. “என்னடா சொல்றே? நாயர் ஹோட்டல்லே சாப்டேங்கறயே? என்றாள் அம்மா. “சரி விடு, வேறே கதி இல்லேன்னா என்ன பண்ணுவான். அதான் இப்போ ஒரு பாலக்காட்டுக்காரர் கிள்ப்பிலே சாப்பிடறேங்கறானே” என்று அப்பா சமாதானமாகச் சொன்னார். அம்மா புரிந்துகொள்வாள், அப்பாவைச் சமாளிப்பது தான் கஷ்டம் என்று பயந்திருந்தேன். ஆனால் நடந்தது நினைத்ததுக்கு நேர் மாறாக இருந்தது. ஆனாலும் அந்த விஷயம் அந்த முதல் நாளோடு முடிந்தது. அதன் பிறகு அது மறந்து பேச நிறைய விஷயங்கள் இருந்தன. காவேரிப்பட்டணம் எஸ். என்.. ராஜா, செல்லஸ்வாமி, கிருஷ்ணசாமி பற்றியெல்லாம் சொன்னேன். மாயவரத்துக்காரர் ஒத்தர் பணம் கொடுத்து இருக்கிறார். அதைக் கொடுக்க மாயவரம் போகணும், முடிந்தால் சீர்காழி போய் கிருஷ்ணஸ்வாமி குடும்பத்தாரையும் பார்த்து வரவேண்டும்.” என்றேன். “அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இருடா இங்கே. ஒன்றரை வருஷம் கழிச்சு இப்பத்தான் வந்திருக்கே. உடனே மாயவரம் சீர்காழின்ணு ஆரம்பிச்சுட்டே. இங்கே கொஞ்ச நாள் இரு. அப்பறம் முதல்லே நிலக்கோட்டை போய் மாமாவைப் பாத்துட்டு வா.; அதுக்கப்பறம் பாத்துக்கலாம் மத்ததையெல்லாம்.” என்றாள் அம்மா. “”கும்ப கோணமும் போகணும்மா. இங்கே உடையாளுர் காரா பொண்ணு ஒருத்தி கற்பரக்ஷைன்னு பேர், கல்யாணம் ஆகி அங்கே ஹிராகுட்டுக்கு வந்திருக்கா. உன்னை அ[ப்பாவையெல்லாம் ரொமப நன்னா தெரியும்னு சொன்னா. அவ பாட்டி கும்மோணத்திலே ரெட்டியார் குளத்தெருவிலே இருக்காளாம். போய் பார்த்து, கற்பரக்ஷை நான் இருக்கற இடத்திலே தான் இருக்கா. சௌரியமா இருக்கா. ஒண்ணும் கவலைப்பட வேண்டானும் சொல்லுடா”ன்னும் சொன்னா. அங்கே ஒரு தடவை போகணும்மா?” என்றேன். ‘சரிதான் போ. இப்பத்தான் வந்திருக்கே. கால்லே சக்கரத்தைக் கட்டீண்டு வந்து அங்கே போகணும், இங்கே போகணும்னு அடுக்கிண்டே போறயே. இங்கே இருக்கப் போறயா இல்லையா என்றாள்: அம்மா கோபத்துடன். “ இருபது நாள் லீவ் இருக்கும்மா. கவலைப் படாதே. சீர்காழி மாயவரம் எல்லாம் காலம்பற போய்ட்டு சாயந்திரம் திரும்பி வந்துடலாம். நிலக்கோட்டை போனாத் தான் உடனே திரும்ப முடியாது.” என்று அம்மாவை சமாதானப் படுத்தினேன்,. என் மனதில் இன்னொரு பிரயாணமும் இருந்தது. என் பள்ளிக்கூட நண்பன், கவிஞன், ஆர். ஷண்முகம் சிதம்பரம் பக்கத்தில் கிள்ளை என்ற (கிள்ளை என்று தான் என் நினைவில் இருக்கிறது) ஊரில் இருக்கும் காந்தி ஆஸ்ரமத்தில் படிக்கிறவன், அவனுக்குக்கூட படிப்பிற்கு மாதன் இருபது ரூபாய் அனுப்புகிறேன் என்று முன்னர் சொல்லியிருக்கிறேன். அவனைப் போய் பார்க்கவேண்டும். ஆனால் முடிகிறதோ என்னவோ. அதைப் பற்றி நான் அம்மாவிடம் சொல்லவில்லை. போக முடியாமல் போகலாம். ஆகவே அதை இப்பவே சொல்லி காரியத்தைக் கெடுத்துக் கொள்வானேன் என்று தோன்றிற்று.

அம்மா ஊர்க்கதையெல்லாம் சொன்னாள். அம்மாவின் உலகம் அது. நான் எஸ் எஸ் எல் ஸி பாஸ் செய்த போது, நான் பாஸ் செய்வேனா என்பது எனக்கே நிச்சயமில்லாதிருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாறி எவ்வளவு குறைச்சல் மார்க்கில் பாஸ் ஆகுமோ அவ்வளவே மார்க் வாங்கி பாஸ் ஆனதே பெரிய விஷயம். அதற்கே ஊரில், இன்னும் யார் யார் பாஸ் செய்தார்கள், பாஸ் செய்யவில்லை என்று தெரியாது. இருந்தாலும், “சாஸ்திரிகளாத்து பிள்ளை பாஸ் பண்ணிடுத்தாமே” என்று சிலர் சொல்லிக் கொண்டதாக அம்மா சொன்னாள். அந்த சாஸ்திரிகளாத்துப் பிள்ளை இப்போது வடக்கே (வடக்கே போய் வேலை பார்ப்பது என்பது பெரிய தீரச் செயல் ஆயிற்றே}} போய் வேலை தேடீண்டு அப்பா அம்மாக்கு பணம் அனுப்பறானாமே என்றால் அது இன்னமும் காட்டமான விஷயமாயிருக்குமே.. ”இல்லைடா. நானும் அப்படி ஏதாவது பேசிப்பாளோன்னு பயந்துண்டுதான் இருந்தேன். ஆனா “உங்க கவலை விட்டது போங்கோ. இனிமே உங்க பிள்ளை உங்களைப் பாத்துப்பான்னு தான் சந்தோஷமா சொலறா,” என்றாள் அம்மா.

ரொமப நாள் கழித்து தங்கை தம்பிகளோடும் கிராமத்திலும் பொழுது போவது சந்தோஷமாக இருந்தது. “பிள்ளை தலையெடுத்துட்டான். இனிமே கவலை இல்லை என்று அம்மா அப்பாவும் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள்.இருந்தாலும் அம்மா அப்பப்போது என்னை நினைவு படுத்திக்கொண்டிருப்பாள். “பாத்து செலவழிடாப்பா. நம்மது இல்லேன்னு ஒரு அஞ்சு ரூபாயாவது சேத்து வச்சுக்கணும். அப்புறமா இன்னும் ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ, என் கிட்டே இருந்த ஒரே ஒரு சங்கிலியையும் அடகு வச்சுத் தான் உன்னை அனுப்பிச்சது. அதை ஞாபகம் வச்சுக்கோ. அப்பாவாலே எல்லாம் அதை மீட்க முடியாது. நீ பணம் சேத்து அனுப்பினாத்தான் அதை மீட்க முடியும். அது இல்லாமே இப்படி மூளிக்கழுத்தோடே நான் ஒரு கல்யாணம் கார்த்தின்னு எங்கேயும் போக முடியாதுடாப்பா.” என்று கண்கள் கலங்க, நாக்கு தழதழக்க அம்மா சொல்வாள்.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்