சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

முனைவர் மு. பழனியப்பன்



முனைவர் மு. பழனியப்பன்
இணைப்பேராசிரியர்
மா. மன்னர் கல்லூரி
புதுக்கோட்டை

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல புதிய பணிகளைத் தற்போது தொடங்கி வருகிறது. அவற்றுள் பாட நூல்களை சமச்சீர் கல்விமுறையில் உருவாக்கி வருவது முக்கியமான பணியாகும். மேலும் பாட நூல்களை இணைய வடிவமைப்பில் வழங்கி வருவது குறிக்கத்தக்க ஒன்றாகும்.

சமச்சீர் கல்வி முறையில் உருவாக்கப் பெற்ற ஆறாம் வகுப்பிற்கு உரிய தமிழ்ப் பாட நூல் பற்றிய மதிப்பீட்டை இக்கட்டுரை செய்ய முன்வருகின்றது.

நூற்று முப்பது பக்கங்கள் கொண்ட இந்தப் பாட நூல் பாரதி கனவு கண்டது போல பல வண்ணங்களுடன், பிள்ளைக்களைக் கவரும் வண்ணம் தயாரிக்க முயன்றுள்ளது. இருப்பினும் வண்ணக் கலவைகள் அதிகம் கலக்கப் பெற்றிருக்கலாம். பக்க ஓரங்களில் அதிகமாக மர வண்ணமே பயன்படுத்தப் பெற்றுள்ளது. சில பக்கங்கள் அந்தந்த பாடத்தின் பின்னணியைப் பெற்றிருக்கின்றன. (எடுத்துக்காட்டிற்கு பறவைகள் பலவிதம் என்ற உரைநடைப் பகுதியைச் சுட்டலாம்) இம்முறையைப் பின்பற்றியிருந்தால் வளமாக இருந்திருக்கும்.

இத் தமிழ்ப் புத்தகத்தின் இயல்கள் செய்யுள், உரைநடைப் பகுதிகள் என இரண்டும் கலந்து உருவாக்கப் பெற்றிருப்பது புதுமையான முயற்சியின் தொடக்கம். ஏனெனில் செய்யுள் பகுதி தனியாக முன்னாலும் அதன் பின்னால் உரைநடைப் பகுதி என்பதாகவும் அமைக்கப் பெற்றிருந்த முறை இதில் மாற்றம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் செய்யுள், உரைநடை, துணைப்பாடம் என்று பகுதிகள் பக்கத்தலைப்பிட்டுக் காட்டியிருப்பதும் நல்ல முறைமையே. இவற்றோடு இயல் முடிவில் வகுப்பறைத் திறன்கள் என வகுத்து பயிற்சிகளைத் தந்திருப்பதும் நல்ல முறைமையே. வகுப்பறைத் திறன்களில் பேசுதல்,எழுதுதல், படைத்தல், கலந்துரையாடல், குழுச் செய்கை முதலான பல பயிற்சிகளை ஆக்கித் தந்திருப்பது நிறைவாக உள்ளது. பாடத் தேர்வை விட இதற்கு அதிக நேரமும், உழைப்பும் பாடக்குழுவினருக்குத் தேவைப்பட்டிருக்கும் என்பது இவற்றைக் காண்கையில் தெரியவருகிறது.

இயல்களின் முடிவில் இலக்கணம் தரப்பெற்றுள்ளது. இலக்கணப்பகுதிகளில் வண்ணங்கள், படங்கள் இடம் பெறாமல் வெறும் அச்சுவடிவமாக இருப்பது என்பது பெருங்குறை. இது தனியாக பாடக்குழுவினரின் ஒரு பகுதியினரால் செய்யப் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பாடத் தேர்வு பெற்ற பின் இலக்கண இணைப்பைச் சேர்த்திருக்க வேண்டும். இதன் காரணமாக இலக்கணப் பகுதிகள் பாடப் பகுதிகளுக்குப் பின் பற்றப் பட்ட வண்ணக்கலவை நிலைக்கு வந்து சேரவில்லை என்பது தெரிகிறது.

மேலும் இலக்கணப் பகுதிகளின் தொடர்பிலும் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக நெடில்,குறில் பாடநூலின் முதலில் அறிமுகமாகிறது. அவற்றிற்கான மாத்திரை அளவுகள் பாட நூலின் நிறைவில் வருமாறு அமைக்கப் பெற்றுள்ளன. இந்த இடைவெளி, இதுபோன்ற முறை மாற்றங்கள் வருங்காலத்தில் சரி செய்யப்படும் என்று நம்புவோம்.

குறிப்பாக இப்பாடநூலில் மிகத் தெளிவாகக் கூறவேண்டுமானால் தமிழ்த்தாத்தா உ.வே.சா மற்றும் கல்லிலே கலை வண்ணம் போன்ற உரைநடைப் பாடங்கள் மிக்கச் சிறப்புடையனவாக உள்ளன. இவற்றிற்காக உழைத்துள்ள பாடக் குழுவினருக்கு நன்றி. இது போன்று மற்ற பாடங்களும் அமைந்திருக்க வேண்டும். ஆனால் மற்றவை அத்தனைச் சிறப்புடன் இல்லை. குறிப்பாக இளமையில் பெரியார் கேட்ட கேள்வி, தேசியம் காத்த செம்மல் போன்றவற்றில் பல புகைப்படங்களை அளிதத்திருக்கலாம். அந்த வாய்ப்பினைப் பாடக் குழு நழுவவிட்டுவிட்டது என்றே கூறலாம்.

கதைப் பகுதிகளைப் பொறுத்தவரை அவை இரண்டு நிலைகளில் அமைந்துள்ளன. அதாவது துணைப்பாடம், மற்றும் முதன்மைப் பாடம் என்ற நிலையில் அவை இடம் பெற்றுள்ளன. எது பெரிய உண்மை, வணக்கம் ஐயா ஆகிய கதைகள் ஆழமில்லாமல் கொண்டு கூட்டி முடிக்கப் பட்ட கதைகள் போல உள்ளன. தெனாலி ராமன் கதைகளில் பல இருக்கையில் தங்கமாம்பழமும் சூட்டுக் கோலும் கதை நகைச்சுவையைத் தந்தாலும் அவ்வளவு பொருத்தமான இந்தப் புத்தகத்தில் இல்லை. நல்ல கதை என்றால் கடைசி வரை நம்பிக்கை என்ற கதை மட்டுமே. வீரச் சிறுவன் கதை கூட அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. இன்னும் நல்ல உயிர்ப்புள்ள நகைச்சுவை மிளிர்கின்ற கதைகளைப் பாடத்திட்டக் குழு எடுத்திருக்கலாம்.

செய்யுள் பகுதிகளில் அதிகம் அறியப்படாத பல பாடல்கள் ஏற்கப் பெற்றிருப்பது சிறப்பு. இருப்பினும் நாய்க்கால், ஈக்கால் போன்ற பாடல்கள் நாகரீகமானதாகத் தெரியவில்லை. அப்துல் ரகுமான் கவிதையான தாகம் என்பதைக் கூடச் சிறப்பாச் சொல்ல இயலவில்லை. புதுக்கவிதையில் நெடிய நல்ல கவிதை ஒன்றைத் தந்திருக்கலாம். இதே நிலைதான் பட்டுக் கோட்டை, பாவேந்தர் பாடல்களுக்கும். வேறு நல்ல பாடல்களைக் குழு எடுத்திருக்கலாம். ஒரே நல்ல பாடல் என்றால் அது தாராபாரதி எழுதிய திண்ணையை இடித்துத் தெருவாக்கு என்பதுதான்.

குறிப்பாகச் செய்யுள் பகுதியில் ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு பகுதிகளில் ஒரு சீர்மை இல்லை என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாகும். சில பாடல்களுக்கு ஆசிரியர் குறிப்பு இல்லை. சில பாடல்களுக்கு நூல் குறிப்பு இல்லை. அல்லது இரண்டும் ஒரே எல்லையில் இருக்கும். இப்படிப்பட்ட குழப்பங்களைத் தீர்த்திருக்கலாம்.

சமச்சீர் பாட நூலா?

ஆறாம் வகுப்பிற்கு வைக்கப் பெற்றிருக்கும் இந்தப் பாட நூல் சமச்சீரானதுதானா என்ற ஐயம் பாட நூலைப் படித்து முடித்து வைக்கும்போது எழுகின்றது. குறிப்பாக ஔவையார் பாடல் ஒன்றை இப்பாட நூல் கொண்டுள்ளது.

நாடாகு ஒன்றோ (பக்கம் 67) எனத் தொடங்கும் அப்பாடலைப் படிக்கும்போதே அதன் சொல்பிரிப்புத் தன்மை சற்று நகைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தெலுங்கைப் படிப்பதுபோன்ற ஒரு அனுபவத்தை இப்பாடல் தொனிக்கச் செய்கிறது. நாடா கொன்றோ என்ற தொடரைப் பிரித்த போது நாடுஆகு ஒன்றோ என்றாவது முழுமையாப் பிரித்திருக்க வேண்டும். பாதி பிரித்தும் பாதி பிரிக்காமலும் தமிழை வேற்றுமொழியாக்கியிருப்பது நகைப்பினை ஏற்படுத்துகிறது.

அதற்கு வரையப் பெற்ற பொருளும் நகைப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது. நாடு (மருதநிலம்), காடு ( முல்லை நிலம்), அவல் (பள்ளம் நெய்தல் ), மிசை (மேடு குறிஞ்சி) என்று பாலை நிலம் தோன்றுவதற்கு முன்னால் தொல்காப்பிய நெறிப்படி விளங்கும் இப்பாடலுக்குப் பொருள் சொல்லியிருப்பது பொருந்தாததாக உள்ளது.

” நிலமே நீ நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும் நல்லதாக இருக்கிறாய். நிலமே நீ வாழ்க” என்பது பாட நூல் தரும் பொருளாகும்.

பாடலில் உள்ள எவ்வழி நல்லவர் ஆடவர் என்பதற்கு ஆண்கள் என்ற நேர்பொருளைக் கொண்டு இவ்வுரை விளக்கம் செய்யப் பெற்றுள்ளது.

ஆடவர் என்பதற்கு சொற்பொருள் தரும் பொழுது இதே பாடப் புத்தகத்தில் “ஆடவர் ஆண்கள், இங்கு மனிதர்களைப் பொதுவாகக் குறித்தது” என்று விளக்கம் தரப் பெற்றுள்ளது.

இப்பாடலுக்கு ஆண்கள் என்று பொருள் விளக்கம் கொள்ளுவதா, அல்லது மனிதர்கள் என்று கொள்ளுவதா அல்லது ஆளுமை உடையவர்கள் எனக் கொள்ளுவதா என்ற கேள்வியை எழுப்பினால் இப்புத்தகம் சமச் சீர் புத்தகமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

ஆடு என்பதற்கு வெற்றி என்ற பொருளைக் கழகத் தமிழ் அகராதி தருகின்றது. ஆளுமை உடையவர்கள் என்று பொருள் கொள்ளுவதும் சரியாக இருக்கலாம். தற்காலச் சூழலில் ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமானமாய் அனைத்துத் தரப்பிலும் வெற்றியுடன் இயங்கும் நிலையில் இப்பாடல் அல்லது இப்பாடலுக்கு வழங்கப் பெற்றுள்ள பொருள் ஆண்சார்புடையதாக இருக்கையில் இந்நூலை எவ்வாறு சமச்சீர் உடையது என்று ஏற்றுக் கொள்ள இயலும்.

மேலும் நான்மணிக் கடிகைப் பாடலான மனைக்கு விளக்கம் மடவாள் (பக்கம் 30) என்ற பாடலிலும் இதே நிலை உள்ளது. மடவார் என்பது முலபாடமாகும். அது இங்கு மடவாள் எனத் திரிக்கப் பெற்றுள்ளது. இதனைக் காணுகையில் இல்லிருந்து மட்டுமே பணி செய்ய வேண்டியது பெண்களின் கடமை என்பதாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதன் காரணமாக பெண்களுக்க உரிய இடத்தை இப்பாட நூல் தரவில்லையோ என்ற ஐயம் தோன்றுகிறது. கடைசி வரை நம்பிக்கை, சாதனைப் பெண்மணி மேடம் கியுரி, மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் போன்றவற்றிலும் முறையே நோய் வந்தமையால் இரங்கத்தக்கநிலை, கணவனின் சார்புடன் வாழும் கியுரி,அப்பாவின் ஆளுமையை வெளிப்படுத்தும் மகளுக்கான கடிதம் என்பதான முறையில் பெண்களின் இருப்பு வைக்கப் பெற்றிருப்பதையும் காணுகையில் இப்பாட நூலின் சமச் சீர் தன்மை பாலின அடிப்படையில் ஆண் ஆதிக்க வயப்பட்டே கிடக்கிறது என்பது முற்றிலும் உண்மையாகிறது.

மேலும் இப்பாட நூலில் பாரதியின் செந்தமிழ்நாடு சேர்க்கப் பெற்றிருக்கிறது என்றாலும் அது துருத்திக் கொண்டு உள்ளதாகவே படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அடுத்துத் தமிழை மேலும் தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலை வேண்டியதில்லை. மேலும் மனோன்மணீயத்தில் காலம் காலமாகச் சொல்லி வரும் அடிகள் மாற்றம் இந்நூலிலும் தொடர்கிறது. அது மாறாது போலும். முன் அட்டை இன்னும் சற்று நன்றாக வடிவமைக்கப் பெற்றிருக்கலாம்.

இதுதவிர நாட்டுப் புர (ற)ச் சிக்கலும் இப்பாட நூலுக்கு இருக்கிறது. ஆயிரம் சொன்னாலும் இதுவரைத் தமிழ்ச் சூழலில் பயன்படுத்தப் பட்ட வழக்கு நாட்டுப்புறம் என்பதை மறுக்க இயலாது.

இவ்வகையில் தொடர்ந்து செய்யப்படும் சமச்சீர் கல்வித்திட்டப் பாட நூல்கள் இன்னும் கவனமுடன் தயாரிக்கப் பட வேண்டும் என்பது தமிழர்கள் அனைவ ரின் நல்விழைவு ஆகும்.மேலும் இவை இணைய வடிவாகப் பல்லூடக முறையிலும் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்னும் வேண்டுகோள் ஏற்கப்பட வேண்டும்

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்