மொழிவது சுகம்: லீ-சியாபொவும்- ஏழு சமுராய்களும்

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இன்றைய தேதியில் சீனாவுடன் மோதத் துணிந்த ஓர் உலக அமைப்பு உண்டெனில் அநேகமாக நோபெல் பரிசு குழுவினராகத்தான் இருக்கமுடியும். ஒபாமாவுக்குக் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசினை அளித்து உலகை வியப்பில் ஆழ்த்தினர். தலாய் லாமாவுக்கு நோபெல் பரிசைகொடுத்து மூட்டிய கோபம் தணியாத நிலையில் சீனர்கள் தங்கள் உள்விவகாரமென கதவை அடைக்கிற பிரச்சினையில் நார்வே குழுவினர் மூக்கை நுழைத்திருக்கிறார்கள். 1989ம் ஆண்டு நோபெல் பரிசு திபெத்தின் தலைவிதியை மாற்றியதாக பதிவுகளில்லை. அநேகமாக திபெத் என்ற அடையாளம் இறந்தகாலத்தில் பேசப்படலாம்,அதைச் சொல்வதற்குக்கூட சீனர்கள் அனுமதிவேண்டும். கடந்த 8ந்தேதி நடந்திருப்பது அதாவது தியனன்மென் புகழ் லீ-சியாவுக்கு அமைதிக்கான நோபெல் பரிசை அறிவித்திருப்பது எதிர்பாராத ஒருநிகழ்வு, சிங்கத்தின் குகைக்குள்நுழைந்து பிடரியில் நோபெல் குழுவினர் கைவைத்திருக்கிறார்கள்.

திருமதி லீ-சியாவின் அன்றாடவாழ்க்கை மேலும் கடினமாகியிருக்கிறது, மியன்மர்(பர்மாவை) ராணுவ அரசு, 1991ம் ஆண்டு நோபெல் பரிசுபெற்ற திருமதி அவுங் சான் சூ கீ இன்றுவரை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறது. சீனர்களின் நடவடிக்கையும் அதை ஒத்ததாகத்தான் இருக்கிறது. கடந்த அக்டோபர் எட்டாம் தேதி நோபெல் பரிசுக்குழுவினர் லீயின் பெயரை தெரிவுசெய்ததுமே, திருமதி லீயின் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. வெளி ஆட்களையோ, பத்திரிகையாளர்களையோ சந்திக்கக்கூடாதென நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். அவரை சந்திக்க முயன்ற பலரும் தங்கள் இயலாமையைத் தெரிவித்துள்ளனர். நோபெல் பரிசுபெற்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. சீன அரசாங்கத்தின் தரப்பில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்த கருத்துமட்டும் செய்திகளில் இடம்பிடித்தது. அரசாங்கத்தின் ஊர்ஜிதமான செய்தியின்படி லீ ஒரு மோசமான குற்றவாளி, நோபெல் பரிசுக்குழுவினர் ஒரு மோசமான குற்றவாளியை பரிசுக்குத் தேர்வு செய்திருக்கின்றனர். ட்விட்டர் மூலமாக ஏற்பாடு செய்திருந்த லீ ஆதவாளர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையேயான சந்திப்பை அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. சுவோ துவோ என்பவர் லி-சியாபொவுடன் தினன்மென் சதுக்க போராட்டத்தின்போது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச்செய்தவர், இவர் கடந்த ஞாயிறன்று ஜனநாயகத்தில் நம்பிக்கைக்கொண்ட சில ஆதரவாளர்களை நோபெல் பரிசு அறிவிப்பினை முன்வைத்து சந்திப்பதாக இருந்ததைத் தெரிந்துகொண்ட அரசாங்கம் அதை தடை செய்துவிட்டது. பிரெஞ்சு தினசரியான ‘லெ மோந்து’ கேட்டுக்கொண்டதற்கிணங்க அதன் நிருபரை சந்திக்க விரும்பிய லீ-சியாபொவின் வழக்கறிஞர் ட்விட்டரில்,” சீன உளவு அமைப்பான Guobao அதிகாரிகள் தொடர்புகொண்டு பத்திரிகையாளர் எவரையும் சந்திக்கக்கூடாதென தெரிவித்ததாகவும், இவர் பதிலுக்கு நோபெல் பரிசு அறிவிப்பை பொதுமக்களிடமிருந்து மறைப்பதும், மேலதிகாரிகளுக்குப் பயந்து லீயையும் அவரது ஆதரவாளர்களான தங்களை சமூகவிரோதிபோல நடத்துவதும் தொடர்ந்து சாத்தியமல்லவென அவர்களிடம் எடுத்துரைத்ததாகவும், கூறியிருக்கிறார். அரசாங்கத்தின் இவ்வளவு கெடுபிடிகளையும், கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொண்டு வெளியுலகத்தை எட்டுகின்ற செய்திகளும் இல்லாமலில்லை. முன்னாள் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒரு சிலரும், கணிசமான லீ தரப்பினரும் எழுப்புகின்ற ஆதரவுக்குரல்களும் சீனப் பெருஞ்சுவரை அசைத்துப் பார்க்கின்றன. ஜனநாயகத்திற்காவும், சுதந்திரத்திற்காகவும், அமைதிக்காகவும், அஹிம்சைக்காகவும் தினன்மென் சதுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு நோபெல் பரிசு அர்ப்பணமென்று லீ கூறி அழுததாக அவரது நெருக்கமான நண்பர் தெரிவித்திருக்கிறார்.

வருங்கால உலகின் பெரிய அண்ணனாக தம்மைக் முன்னிறுத்திக்கொள்ளவிருக்கிற சீனாவிற்கு அநேகமாக பெரியவர்கள் கூட்டத்தில்(?) வரிசையில் நிற்கிறபோது, ஜனநாயகம் மனித உரிமைகள் போன்ற சொல்லாடல்கள் சங்கடத்தைத் தரலாம். ‘மாவோ வாரிசுகள் உள்நாட்டில் மட்டுமல்ல அண்மைக்காலங்களில் மனித உரிமைகள் மீறலை சடங்காகக்கொண்ட பிற சர்வாதிகாரிகளுக்குப் பக்கபலமாக இருப்பதன்மூலம் எத்தனை மாற்றங்கள் வரினும் இவ்விடயத்தில் எங்கள் குணத்தை மாற்றிக்கொள்ளவியலாது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். சூடான்,ஜிம்பாப்வே,இலங்கை,பர்மா, வடகொரியா என அப்பட்டியல் நீளும் ஆபத்துள்ளது. இனி மனித உரிமைமீறலை ஜாம்ஜாமென்று உலகநாடுகள் சீனாவின் ஆதரவுடன் அரங்கேற்றலாம். ஐநா சபையில் மேற்கண்ட நாடுகளுக்கு ஆதரவாக சார்புவாதத்தை இலக்கணபிழையின்றி எழுத சீனா துணைபோகிறது. உதவிக்கென சில நேரங்களில் ரஷ்யாவையும் சேர்த்துக்கொள்கிறது. மேற்கண்ட நாடுகளின் எதேச்சதிகாரிகளை சீனா ஆதரிக்கிறபோது அந்நாடுகளின் ஒருமைப்பாட்டிற்கு ஒத்துழைப்பதே தமது நோக்கமென கூறிக்கொண்டாலும் உண்மையில் சம்பந்தப்பட்ட நாடுகளின் நலனைக்காட்டிலும், சீனா தனது பொருளாதாரத்திற்கு விளையக்கூடிய நன்மைகளின் விழுக்காடுகளை அடிப்படையாகக்கொண்டே காய் நகர்த்துகிறதென்பதை நடுநிலையாளர்கள் அறிந்திருக்கிறார்கள்.மேற்கண்ட நாடுகளின் இயற்கைவளங்களை தமது பொருளாதாரப் பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றுவதென்கிற தன்முனைப்புடன் வினையாற்றுகிறபோது மனித உரிமை என்ற சொல் நினைவின் அடித்தட்டுக்குப் போய்விடுகிறது. சீன பெரிய அண்ணன் மனித உரிமைக்குக்கொடுக்கும் மரியாதையின் நீள அகலம் என்னவென்பதை இந்தச் சின்ன அண்ணன்களும் அறிவார்கள். தவிர இதில் குறுக்கிட மேற்கத்தியர்களுக்கும், அமெரிக்காவுக்கும் என்ன யோக்கியதை இருக்கிறது? லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளையும், ஆப்ரிக்க சர்வாதிகாரிகளையும் இவர்கள் நலனுக்காக வளர்த்ததில்லையா என்ன? சீனர்களின் இப்புதிய அணுகுமுறை ஒரு சில நாடுகளின் அதிகார வர்க்கத்திற்கு மிகவும் வசதியாக இருக்கிறது, உதாரணமாக மியான்மார் ராணுவ அரசாங்கத்திற்கு. மியான்மார் ராணுவ அரசு இழைத்துள்ள கொடூரங்களை விசாரிக்கவென்று ஐநா ஏற்படுத்தவுள்ள விசாரனைக்குழுவை கூடாதென்பதில் சீனா முன்னின்று உழைக்கிறது. 2009ம் ஆண்டு இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திய யுத்தத்தின் முடிவில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லபட்டதைப் பற்றி ஐநா பாதுகாப்பு சபை கேள்வி எழுப்பியபோது சீனாவிற்கு இந்தியாவும், ரஷ்யாவும் துனைபோயின. ட·ர்பூர்(Durfour)பிரச்சினையில் பன்னாட்டு நீதிவிசாரணையின்போது சீனாவின் தலையீடு இல்லை என்கிறபோதும், சூடானுக்கு எதிரான உலநாடுகளின் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட சீனாவே காரணம் என்பதை அறிவோம்.

அமைதிக்கான நோபெல் பரிசு லீ-சியாபொவுக்கென முடிவானதற்குப் பிறகு சீனர்களின் கசப்பை வெளிஉலகம் நன்கு உணர்ந்திருக்கிறது. பரிசு பெற்றவருக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்பதை குறிப்பாக சீனப் பராமரிப்பு மியென்மார் அரசாங்கமும் ஏற்கனவே கோடிட்டுக்காட்டியுள்ளது. சீன நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டு பதினெட்டு ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பிறகு விடுதலைக்கண்ட Wei jinshengம், ஐந்து ஆண்டு சிறைவாழ்க்கைக்குப்பிறகு விடுவிக்கப்பட்டு அமெரிக்காவில் குடியேறிய உய்கூர் இன இஸ்லாமிய பெண்மணி Rebia kadeerம் பீகிங்-வாஷிங்டன் பொருளியல் இலாபக்கணக்கு அடிப்படையில் சுதந்திரக்காற்றை சுவாசித்தவர்கள். உண்மையில் ஜனநாயகமும், விடுதலையும், மனித உரிமைகளும், அஹிம்சையும் இன்று பொருளற்றவைகளாகியுள்ளன. அக்கிரா குரோசவாவின் ‘ஏழு சமுராய்கள்’ திரைப்படத்தில் கொள்ளையர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றி தருமாறு கிராமமக்கள் சமுராய்களிடம் இறைஞ்சுவார்கள். சமுராய்களின் சாதுர்யமும், திட்டமிடலும், வீரமும் கொள்ளையர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றவும் உதவும். விவசாயக்குடிகள் கொள்ளையகளிடமிருந்து மீண்ட சந்தோஷத்தில் காப்பாற்றிய சமுராய்களை மறந்து குதூகலமாக விவசாயத்தில் இறங்கியிருப்பார்கள். சமுராய் ஒருவனின் காதலிகூட பார்த்தும் பாராததுபோல நடையைக்கட்டுவாள். எஞ்சியிருக்கிற சமுராய்கள் மூவரும் புறப்படுகிறபோது, “இப்போரிலே கொள்ளையர்களோடு நாமும் தோற்றிருக்கிறோம், ஜெயித்திருப்பது விவசாயக்குடிகள் மட்டுமேயென”, விரக்தியுடன் மூத்த சமுராய் கூறுவார். இன்றைய லீ முதற்கொண்டு நேற்றைய காந்திவரை மனிதரினத்தின் விடுதலைக்கு உழைக்கிறவர்களை சமுராய்களெனவும், அதிகாரவர்க்கத்தைக் கொள்ளையர்களெனவும் கொண்டால் மக்களை அக்கிரா குரோசவா வர்ணிப்பதுபோல சுயநலமிகளெனக் கருத இடமுண்டு. ஆக அதிகாரவர்க்க கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற சமுராய் என்றபேரிலே ஒன்றிரண்டு இளிச்சவாயர்கள் எக்காலத்திலும் வாய்ப்பார்கள், நமக்கும் அதுபோதும் மற்றபடி அவர்கள் தோற்றாலென்ன ஜெயித்தாலென்ன?
—————————————————————————————-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா