பணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

சுப்ரபாரதிமணியன்


திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்பதால் ஆசியாவின் மிகப் பெரிய வியாபாரகேந்திரமாகும். மக்களின் நேரம் கெட்ட நேர உழைப்பு முக்கிய காரணம்.எல்லாத் தரப்பினரும் இங்கு முதலீடு செய்கிறார்கள். அத்வானி முதல் கொண்டு கபில்தேவ் வரைக்கும் பெரும் பிரமுகர்களுக்கு தொழில் பினாமிகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஊர். இதனால் வியாபார விடயங்களை மீறி அரசியல் வாதிகளின் பார்வைக்கு இலக்காகி இருக்கும் ஊர்.( ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை துணை முதலமைச்சர் இங்கு வருகிறார் என்பது முக்கிய கணக்கு. ஒவ்வொரு முறையும் அவர் இங்கு வரும் போது வரவேற்பு, பொதுக்கூட்டத்திற்கு 3 கோடி ரூபாய் செலவாகிறது . ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இதைச் சுற்றிஉள்ள பகுதிகளில் வாங்கிக் குவித்த சொத்து காரணமாக இங்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் எகிறிப்போயிருக்கிறது. ) உள்ளூர் மார்க்ஸ்ட்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அரை கோடி ரூபாயை தமிழக தொழிலாளர் நல அமைச்சருக்கு சர்வதேச தொழிலாளர் நியதிப்படியான 8 மணி வேலை நேரம் இங்கு செல்லுபடியாகாது என்று சட்டத் திருத்தலுக்காக ஏற்றுமதியாளர்களிடம் பெற்ற பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார் என்பதான முதல் காரணமாகக்கொண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் தி மு கவில் இணைகிறார். ) தொழில் நகரம் என்பதை மீறி இது அரசியல் நகரம் ஆகி விட்டது.

இங்கு சமீபத்தில் பிரபலமான பேச்சாளர் தமிழருவி மணியன் தனது ஆதரவாளர்களின் பலத்தைக் காட்ட ஒரு கட்சி ( இயக்கம்) ஆரம்பித்த வைபவம் நடைபெற்றது. காந்திய சமுதாய மக்கள் இயக்கம்.தமிழருவி மணியனுக்கு இங்கு எப்போதுமே பெரும் கூட்டம் கூடும். கவர்ச்சிகரமான பேச்சு, வாசிப்புப் பழக்கம் இல்லாமல் கூட்டத்தில் பேசுவதைக் கேட்கப்பழகி சொக்கிப்போய் கிடக்கும் பெரும் கூட்டம் திருப்பூரில் உண்டு. இந்த கட்சி ஆரம்ப விழாவுக்கு இருமடங்குக் கூட்டம் கூடியிருந்தது. அவரின் பேச்சு காந்தீயம் இன்றைய சூழலுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை விட கருணாநிதி மீதான எக்கச்ச்க்க கோபத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. ( அவர் குடியிருக்கும் அரசு வீட்டை காலி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு தந்திருக்கும் தீர்ப்பு பிரசித்தியானது. தமிழ் வாழ்க என்று கதறிக் கொண்டிருப்பதை விட தமிழ் அறிஞர்களுக்கு கவுரவம் தருவது நல்லது. முக்கியம் என்றார் சந்துரு.) காந்திய பொருளாதார விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்க அறிக்கை தந்திருந்தார் தமிழருவி. உறுப்பினர் சந்தா ரூ 20 மட்டும். போராட்டங்களுக்கு அழைக்கமாட்டேன் என்று உறுதி மொழி தந்திருக்கிறார். நெல்லைக்கண்ணன் போன்றோர் தமிழருவி மணியனை விட கூட்டங்களுக்கு அதிகத் தொகை வாங்குகிறவர்கள். அவருக்கு அதிக கூட்டம் கூடும் ஊர் திருப்பூர். அவருக்கு ஆதரவு தரும் பணக்காரர்கள், புரவலர்கள் இங்கு அதிகம். அவர் அவரின் ஆதரவாளர்களின் கூட்டத்தை இங்கு கூட்டக்கூடும். சென்ற முறை சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்தார். இந்த முறை நெல்லைக்கண்ணனுடன் சேர்ந்து தமிழருவி மணியனுன் ரவுண்ட் அடிக்கலாம். ( இங்கு நகைச்சுவை மன்ற மாதக்கூட்டங்களுக்கு வரும் எக்கச்சக்க கூட்டத்தை வைத்துக் கொண்டு உள்ளூர் துணுக்கு எழுத்தாளர் ஒருவர் இது நல்ல சமயம் நகைச்சுவை கட்சி தொடங்கலாம் என்றார்.) சட்டமன்றத் தேர்தல் னெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற பலத்தைக் காட்டும் கூட்டங்கள் , புதிய கட்சிகளின் ஆரம்ப விழாக்கள் அதிகரிக்கும்.இந்திய ஜனநாயகம் கட்சிகளை ஆரம்பிப்பதை வெகுவாக ஆதரிக்கும் தாரளவாதம், பெருந்தன்மை கொண்டதாகும்.
ஆமாம், நகைச்சுவை கட்சித்தலைமைக்கு கீழ்க்கண்ட பேச்சாளர்களில் யாரை நீங்கள்சிபாரிசு செய்கிறீர்கள். 1.கு ஞானசம்பந்தம் 2. சாலமன் பாப்பையா.
3. லியோனி 4. ராசா
சிறந்த சிபாரிசுக்கு ஒரு டஜன் திருப்பூர் லோக்கல் பனியனும், ஈரோடு அயிட்ட ஜட்டி அரை டஜனும் பரிசு காத்திருக்கிறது.
சிறந்த சிபாரிசுக்குரியவர் ஒரு தொழிலதிபர் என்றால் புதிய பொருளாதார மண்டல பிரதேசத்தில் ஒரு இலவச தொழிற்சாலைக்கான இடம் பரிசளிக்க திருப்பூரின் பிரபல செ. சில்கஸ் நிறுவனம் ஒத்துக் கொண்டிருப்பது ஒரு முக்கிய செய்தியாகும்.

subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்