நினைவுகளின் சுவட்டில் – (53)

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

வெங்கட் சாமிநாதன்


நினைவுகளின் சுவட்டில் – (53)

எல்லோருக்கும், ஜெம்ஷெட்பூர் மாமவுக்கு, அப்பாவுக்கு, நிலக்கோட்டை மாமாவுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதினேன். எனக்கு பெருமையாக இருக்காதா? நானும் சம்பாதிக்கும், சம்பாதித்து பெற்றோருக்கு உதவுகிறவனாகி விட்டேனே. இனி, ஜெம்ஷெட்பூருக்கு வருவதற்கான செலவுக்கு அம்மா அட்கு வைத்த நகையை மீட்க வேண்டும்.

முதலில் ஜெம்ஷெபூர் போகவேண்டும். நான் வேலை பார்ப்பவனாக, அவரால் தயார் செய்யப்ப்ட்டவனாக அவர் முன் நிற்க வேண்டும். மாமா, மாமி இருவ்ருக்கும் நேரில் சென்று நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளவேண்டும். அவர்களும் சந்தோஷப்படுவார்கள். ராஜாவிடம் சொல்லிக்கொண்டு புற்ப்பட்டு விட்டேன். என்ன பெரிய விஷயம் ஒரு ராத்திரி பயணம். சாய்ங்காலம் ஐந்து மணிக்கு ஹிராகுட்டிலிருந்து பஸ் ஏறினால் சம்பல்பூர் அரை அல்லது முக்கால் மணி நேரத்தில். பின் சம்பல்பூரிலிருந்து ஜ்ர்ஸகுட்ர் ஒன்று அல்லது ஒன்றே கால் மணி நேரத்தில். ஜெர்ஸகுடா ஸ்டேஷனிலேயே ஏதாவது சாப்பிடலாம். ராத்திரி தான் கல்கத்தா போகும் பம்பாய் மெயில் வரும். காலையில் ஜெம்ஷெட்பூர் போய்ச் சேர்ந்துவிடலாம். போய்ச் சேர்ந்தேன். என்னைப் பார்த்ததும் மாமிக்கும் மாமாவுக்கு சந்தோஷம் தான். ஆச்சரியமும் கூட. “என்னடா இது, வேலையில் சேர்ந்து நாலு நாள் ஆகலை அதுக்குள்ள் என்ன அவசரம் உனக்கு?” என்று ஆச்சரியத்துடன் கண்கள் விரிய கொஞ்சம் சத்தமாகவே கேட்டார்கள். சொன்னேன். “உங்களைப் பாத்து நமஸ்காரம் பண்ணிச் சொல்லணும்னு தோணித்து? என்றேன். “சரிதான் போ. அதுக்கு என்ன இப்படி அவசரம்? அப்பாக்கு, நிலக்கோட்டை மாமாக்கெல்லாம் லெட்டர் போட்டயா, இல்லையா? என்று கேட்டார். எல்லோருக்கும் சந்தோஷம் தான். எப்படியோ எங்கேயோ வேலை கிடச்சுட்டதே. அவர்கள் பொறுப்பையும் நிறைவேற்றியாச்சே. இனி இவன் பாடு, இவன் சாமர்த்தியம்.,” என்று ஒரு நிம்மதியும் சந்தோஷமும். ஹிராகுட் எப்படி இருக்கு, ஆபீஸ் வேலையெல்லாம் கஷ்டமில்லாமல் இருக்கா,?” என்று கேடக ஆரம்பித்தவர் பின் கொஞ்சம் யோசிக்க்ற மாதிரி நிறுத்திப் பின், “ஆமாம் ராஜா தான் இருக்காரே. எல்லாம் பாத்துப்பார். ஏண்டா பாத்துக்கறாரோல்யோ? என்று இன்னொரு கேள்வியாக தானே பதிலையும் சொல்லிக்கொண்டு, “கவலைப் படவேண்டாம்” என்று சமாதானமும் சொல்லிக்கொண்டார் மாமா..

இரண்டு நாள் பொழுது ஜெம்ஷெட்பூரில் கழிந்தது. ஞாயிறு ராத்திரி டாடாநகரில் பம்பாய் மெயில் ஏறினேன். மாமா ஸ்டேஷனுக்கு வரவில்லை. பையன் எல்லாம் தனியாகவே இருந்து கத்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டார். காலையில் ஐந்து மணிக்கு ஜெர்ஸகுடா போய்ச் சேரும். விழித்திருந்து இறங்க வேண்டும். தெரியாதா, ஒரு தடவை போய்ப் பழக்கப்பட்டது தானே. இறங்கவேண்டுமென்றால் தானே விழிப்பு வந்துவிடும். மேலே ஏறிப் படுத்துக்கொண்டேன். மனதில் ஒரு நிம்மதி. சந்தோஷம். வாழ்க்கையை, தன்னந்தனியனாக எதிர்கொள்ள ஆரம்பித்தாயிற்று. நிலக்கோட்டையிலும், உடையாளூரிலும், திரிந்து கொண்டிருந்த கிராமத்துப் பையன் இப்போது வட நாட்டில் எங்கெங்கோ ஒரிஸ்ஸாவிலிருந்து பீஹாருக்கும், பீஹாரிலிருந்து ஒரிஸ்ஸாவுக்கும் என்னவோ நிலக்கொட்டையிலிருந்து வத்தலக் குண்டு போவது போல பிரயாணம் செய்துகொண்டிருக்கிறானே. வளர்ந்து கொண்டிருக்கிறான். உலகம் தெரிகிறது. என்று என் மனத்துக்குள் மிகத் திருப்தியுடன் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. கண் விழித்ததும் மேலேயிருந்து குனிந்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். நன்றாக விடிந்து விடடது தெரிந்தது. வண்டி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கீழே குனிந்து எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று கேட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பிலாஸ்பூர்வந்து விடும். உனக்கு எங்கே இறங்கணும், பேட்டா?” என்று கேட்டார்கள். “ என்னது? பிலாஸ்பூரா? ஜெர்ஸகுடா போயிடுத்தா? “ என்று திடுக்கிட்டுப் போனேன். ”ஜெர்ஸகுடா காலை ஐந்து மணிக்கே வந்துவிடுமே. சொல்லியிருந்தா எழுப்பியிருப்போமே” என்று வருத்தத்துடன் சொன்னார்கள். சரி பிலாஸ்பூரில் இறங்கி திரும்பிப் போகிற வண்டிக்காக காத்திருந்து ஏறுக்கொள். இப்போ வேறு என்ன செய்வது? தப்பு பண்ணியாச்சு” என்றார்கள். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருந்துகொள் என்று புத்தி மதி சொன்னார்கள். சின்ன பையன், ஹிந்தி வேறே என்னமோ போல பேசுகிறான் என்று நினைத்திருப்பார்கள். இன்னும் எவ்வளவு நேரம் பிலாஸ்பூரில் இறங்கக் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை. மன நிம்மதியின்றி கவலையுடன் கீழே இறங்கி உடகார்ந்து கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே இருந்தேன். இது எப்படி ஆயிற்று? முதலில் பழக்கமில்லாத் இடத்துக்கு சரியாக இறங்க வேண்டிய இடத்தில் சரியாக இறங்கி வண்டி மாறி, பஸ் பிடித்து எல்லாம் போனவனுக்கு இரண்டாம் முறை ஏன் தவறிப் போயிற்று? ராத்திரி தூக்கம் வருவதற்கு முன்னால், ரொம்ப புத்திசாலியாக பெரியவனாக வளர்ந்து வருவதைப் பற்றி எண்ணி பெருமைப் பட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. எவ்வளவு சீக்கிரம் அந்த கர்வம் பங்கமடைந்து விட்டது!

பிலாஸ்பூர் ஸ்டேஷனில் இறங்கி கல்கத்தா பக்கம், போகும் வண்டிக்காகக் காத்திருந்தேன். காத்திருக்கும் வேளையில் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்து இருக்கைகளில் உடகார்வதும் பின் போரடித்தால், ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு நடப்பதுமாக பொழுது கழிந்தது.
இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். ஹிராகுட் போய் விடலாம். சரி. ஆனால் ஆபீஸ் போகமுடியாது. நாளைக்குத் தான் போகமுடியும். லீவும் போடவில்லை. என்ன சொல்வது? அது வேறு கவலை அரித்துக்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் கிடைத்த சமூஸாவும் டீயும் தான் பசியை அடைக்கக் கிடைத்தது. ஒரு வழியாக ஒரு பாஸ்ஞ்சர் வண்டி வந்தது. அதில் ஏறி ஜெர்ஸகுடா போய்ச் சேர்ந்தேன். அடுத்து சம்பல்பூருக்குப் போக கொஞ்ச நேரத்தில் ஒரு ஷட்டிலும் வந்தது. பின் சம்பல்பூர் ஸ்டேஷனிலிருந்து ஹிராகுட் போக பஸ் பிடித்து ஹிராகுட் போய்ச் சேர்ந்த போது மணி ஆறோ என்னவோ ஆய்விட்டது.

வீட்டுக்கு வந்தால் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிவந்தது. புது ஆள், சின்ன பையன், இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாறவேண்டும், அதுவும் வேளை கெட்ட வேளையில். காலையிலேயே வந்திருக்க வேண்டியவனுக்கு என்ன ஆயிற்று? என்ற கவலை அவர்களுக்கு. எனக்கு தூங்கிப் போய்விட்டேன், பிலாஸ்பூர் போய்த் திரும்பி வருகிறேன் என்று சொல்ல வெட்கம். “மாமா தான் அப்பறமா போய்க்கலாம்டா”ன்னு சொன்னார் என்றேன். “சரி. எப்பறமா போக்லாம்னு சொன்னார்? எந்த வண்டியிலே ஏறினே, உனக்கு ஏறறதுக்கு வண்டியே கிடையாதேடா. பொய் சொல்றேடா, அதுவும் ஒழுங்காச் சொல்லத் தெரியலையே. இப்பதான் வேலை கிடச்சிருக்கு. மாமா அப்பறமா போலாம்னு சொல்வாராடா? என்ன பண்ணினே சொல்லு? என்று என் அசட்டுத்தனத்தை அங்கிருக்கும் எல்லோருக்கும் முன் போட்டு உடைத்தார்கள். நான் விளித்தேன், என்ன பதில் சொல்வதென்று தெரியாது. பின் மெதுவாக “ஆமாம், தூங்கிப் போயிட்டேன். விழித்த போது வண்டி ரொம்ப தூரம் தாண்டிப் போயிடுத்து.” என்றேன். ராஜா சிரித்துக்கொண்டே, “அப்படிச் சொல்லு. அதிலே ஒண்ணும் தப்பில்லே. எல்லாருக்கும் நேர்ரது தானே. இதையே நாளைக்கு ஆபீசிலும் சொல்லு. புரிஞ்சிப்பா” என்றார்.

மறுநாள் ஆபீஸில் ஒரு நாள் லீவ் எழுதிக்கொடுத்தேன். “என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு நான் சொன்னதும் எல்லோரும் கனிவாகப் பார்த்துச் சிரித்தார்கள். போய் மலிக் சாஹப்டே கொடு என்று சொன்னார்கள். நான் அவர் முன் போய் நின்றேன். அவர் என்னைப் பார்த்து புன்முறுவலித்து, “ எனக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பாயா? “ என்று கேட்டார். இது எனக்கு அதிசயமாக இருந்தது. இதை எதிர்பார்க்கவே இல்லை. சரி என்றேன். முதலில் புத்தகம் வரவழைத்த்து சொல்கிறேன் பின் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி விட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் எல்லோரிடமும் மலிக் முரளீதர் மல்ஹோத்ரான்னு ஒரு அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் இருக்கார். அவர் தமிழ் சொல்லிக்க் கொடுக்கச் சொல்லிக் கேட்டார் என்றேன். அவர்களுக்கு ச்ந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. “வந்து இரண்டு நாளாகலே அதுக்குள்ள் பெரியா ஆளா வளைச்சுப் போட்டுட்டயே,” என்று கேலி வேறு செய்தார்கள். ”ஆமாம் அவர் என்னைக் கேட்க என்ன காரணம்?” என்று யோசித்தேன். என்னைத் தவிர வேறு தமிழ் ஆட்களே அந்த ஆபீஸில் இல்லை. என்பது தெரிந்தது. ஆனால் தமிழ் கற்கணும்னு ஏன் தோணித்து அவ்ருக்கு?, என்று அடுத்த கேள்வி எழுந்தது. அதற்கு பதில் கிடைக்கவில்லை. அவர் ரொம்பவும் நல்ல மனிதர். நீ சின்ன பையன். ஏதோ அவருக்கு உன் கிட்ட ஒரு பாசம் போல. தமிழ் கத்துக்கறது ஒரு சாக்குதான் என்றும் ஒரு அபிப்ராயம். என்னை விட அதிகம் செல்லஸ்வாமியை அவருக்குத் தெரியுமே. என்னவோ. அதன் பின் அது பற்றி நான் அதிகம் யோசிக்க வில்லை. பால பாடப் புத்தகம் அனுப்பும்படி அப்பாவுக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டேன்.

மலிக் முரளீதர் மல்ஹோத்ரா எனக்கு நேர் பெரிய அதிகாரி இல்லை. அவர் அட்மினிஸ்டிரேடிவ் ஆஃபீஸர். ஆபீஸ் முழுதுக்குமான நிர்வாகம் அவர் கையில் ஆனால் நான் வேலை செய்யும் சீஃப் என்சினீயர் ஆபீஸில் உள்ள செக்‌ஷனில் வொர்க் செக்சனுக்கு தேஷ்ராஜ் பூரி என்பவர் செக்ஸன் ஆபீஸர். எல்லோருமே பஞ்சாபிகள். ஹிராகுட் முழுதிலுமே, சீஃப் என்சினீயரிலிருந்து கடைசிப்படியில் இருக்கும் க்ளர்க் வரை, பின் எல்லா கண்டிராக்டர்களும் பஞ்சாபிகள் தான். எல்லோரும் சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்ததாகவும் அது கட்டி முடிந்த பின் இங்கு வந்ததாகவும் சொன்னார்கள். எல்லோரும் பஞ்சாபியில் பேசிக்கொண்டார்கள். பஞ்சாபி அல்லாதவரிடம் மாத்திரம் ஹிந்தியில் பேசினார்கள். பஞ்சாபி தான் முதலில் நான் தானாக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பாஷையாக இருந்தது. அதில் என் முயற்சியோ, என் புத்திசாலித்தனமோ எதும் இல்லை. சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பஞ்சாபிகள். அவர்கள் என்னேரமும் யாரிடமும் பேசுவது பஞ்சாபியில் தான். ஆக, கேட்டுக் கேட்டு அது தானாகவே நம்மைத் தொற்றிக்கொள்ளும். ஆனால் பஞ்சாபி கற்றுக்கொண்டவர்கள் மிகச் சிலரே. எனக்கு அவர்கள் பஞ்சாபியில் பேசுவதைக் கேட்க மிக சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஒரே விஷ்யத்தைப் ஹிந்தியிலும் சொல்லலாம் ப்ஞசாபியிலும் சொல்லலாம். ஆனால் பஞ்சாபியில் சொல்வதும், சொல்வதைக் கேட்பதும் மிகவும் குதூகலம் தருவதாக இருந்தது. ’ஹேய் தேனு கீ ஹொயா,’ என்று சாதாரணமாகச் சொன்னாலே அதில் மிகுந்த இளப்பமும் கிண்டலும் தொனிக்கும். அந்த சுவாரஸ்யம் வேறு எந்த் மொழியிலும் இல்லையெனத் தோன்றிற்று.

அதிலும் எத்தனையோ வகைகள். மலிக் முரளீதர் மல்ஹோத்திரா இப்போது பாகிஸ்தானில் இருக்கும் முலதானிலிருந்து வந்தவர். மூல்தான் என்னும் ஜில்லா சிந்து மாகாணத்தைத் தொடும் எல்லையில் இருந்தது. ஆக, பஞ்சாபியே கொஞ்சம் சிந்தி போல தொனிக்க பேசுவார்கள். அதுவும் ஒரு சுவாரஸ்யம் தான். மலிக் சாஹேப் தவிர இன்னொருவரும், அவரும் செக்‌ஷன் ஆபீஸர் தான், மூல்தானி. நல்ல உயரம். பிரம்மாண்டமான சரீரம். தொப்பை வேறு பெரிதாக முன் தள்ளியிருக்கும். மலிக் ஆயா ராம் என்று பெயர். அவர் செக்‌ஷனில் நான் இல்லாவிட்டாலும் என்னிடம் மிக அன்பாக பேசுவார். என் பெயர் அவருக்கு சொல்ல வராது. அவர் என்னை, ”ஸ்னாதன் தர்ம்” என்று தான் அழைப்பார். எனக்கும் சனாதன தர்மத்திற்கும் இடையே மூல்தானுக்கும் தஞ்சாவூருக்கும் உள்ள தூரம் என்று அவரிடம் சொல்லிப் பயனில்லை. அவர் ஸ்னாதன் தர்ம் என்றுதான் அழைப்பார். எனக்கு அதில் ஏதும் பெரிய ஆக்ஷேபனை கிடையாது. இருப்பினும், ஸ்னாதன் தர்ம் என்று என்னை அழைக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பாக இருக்கும். இருந்தாலும் அவர் அன்பு மிகுந்தவராதலால் நான் சிரித்துக்கொண்டே “ஹான் ஜீ” என்று பதிலளிப்பேன். அருகிலிருந்தவர்கள், முதலில் ஆச்சரியத்துடன், ‘யே கீ நா ஹை தேரா” ( ஏய் இது என்னடா பேரு உனக்கு?) என்று கொஞச நாள் கேட்டார்கள். பின் அவர்களுக்கும் அது பழகிவிட்டது.

நான் வேலை பார்த்த செக்‌ஷனில் இரண்டே இரண்டு டைபிஸ்ட்கள். நான் ஒருத்தன். மற்றவன் மிஹிர் குமார் பிஸ்வாஸ் என்னும் வங்காளி. நல்ல உயரம் வங்காளிகள் ஸ்டைலில் வேஷ்டி கட்டிக்கொண்டு தான் வருவான். நிறைய வேலை எங்கள் இருவர் மேஜையிலும் குவியும். தப்பில்லாமல் டைப் செய்பவன் பிஸ்வாஸ் தான். தேஷ் ராஜ் பூரி, என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொல்வார் “ இரண்டு பேரும் நிறைய வேலை செய்கிறீர்கள். நீ டைப் செய்வது பார்க்க அழகா இருக்கு. ஆனால் தப்பு நிறைய செய்கிறாய். பிஸ்வாஸ் டைப் செய்வது பார்க்க நன்றாக இல்லை. ஆனால் தப்பில்லாமல் செய்கிறான். எது தேவலை சொல்” என்பார். அவரிடம் ந்ல்லா பெயர் வாங்க கொஞ்ச மாதங்கள் ஆயிற்று. ஆனால் அப்போது புதிதாகச் சேர்ந்த் போது, அவரை எனக்குப் பிடிக்கவில்லை. அவர் எவ்வளவு நல்ல மனதுடையவர் என்பதை நான் அந்த ஹிராகுட் அணை நிர்வாக த்திலிருந்து வெளியேறும் கடைசி நாட்களில் தான் எனக்குத் தெரியவந்தது. அது பின்னால் வரும் சந்தர்ப்பத்த்தில்.

எஸ். என். ராஜா வீட்டிலேயே எவ்வளவு நாட்கள் இருக்க முடியும்? மாமி எப்போது வேணுமானாலும் வரலாம். அப்போது எங்கு ஓடமுடியும்? இருந்தாலும் நான் அதற்கு முயற்சிக்காமலேயே ஒரு வீடு ஒன்று எனக்கு தரப்பட்டது. அது ஹிராகுட் முகாமிலிருந்து தூர ஒதுங்கியிருப்பது போல படும். கோடியில் ஒரு சின்ன குன்றின் அடிவாரத்தில் அந்த் வரிசை வீடு இருந்தது. ஆர்டர் வந்ததும், பெட்டி படுக்கைகளோடு அந்த புதிய வீட்டுக்குப் போனேன். ஏற்கனவே அந்த வீடு ஒருவருக்குத் தரப்பட்டிருந்தது. நானும் போய் அதில் பங்கு கொள்ள வேண்டும். அந்த வரிசை வீடு எப்போதோ கட்டப்பட்டிருக்கவேண்டும். பஞ்சாப் கிராமத்து வீடுகள் போல, வீட்டு கொல்லைப் புறக் கதவைத் திறந்து செலவது போல ஒரு சுற்றுச்சுவர் கதவைக் கடந்து சென்றால் ஒரு பெரிய திறந்த முற்றம். தளமில்லாத் வெற்று மண் தரை முற்றம். அந்த முற்றத்தின் மறு பக்கத்தில் இரண்டு பெரிய அறைக்ள் தாழ்வாரத்தோடு. அவ்வளவே. ஏற்கனவே ஒருவன் தன் குடும்பத்தோடு, (மனைவி மாத்திரமே, குழந்தைகள் இல்லை) இருந்தான். நான் அடுத்திருந்த மற்ற அறையில் என் பெட்டி படுக்கைகளை வைத்தேன். கொஞ்ச நேரத்தில் அடுத்த அறைக்காரன் வந்தவன் என்னைப் பார்த்து, ‘உன்னை யார் இங்கே உள்ளே விட்டது. கிளம்பு இந்த இடத்தை விட்டு. இது என் வீடு” என்று கத்தினான். அவனிடம் எனக்கு இங்கு வர ஆர்டர் இருப்பதைச் சொல்லி ஒன்றும் பயனிருக்கவில்லை. கத்திக்கொண்டே இருந்தான். நீயா ந்ல்லபடியா எடுத்துக்கொண்டு இந்த இடத்தை விட்டுக் கிளம்பு, இல்லையானால், நான் உன் சாமானகளை வெளியே எறிந்து விடுவேன்.” என்று பயமுறுத்திவிட்டுச் சென்றான். நான் மறு நாள் காலை, (வேறு யார்) மலிக் முரளீதர் மல்ஹோத்ராவிடம் போய் நடந்ததைச் சொன்னேன். அவர் தன்னிடம் வேலை பார்க்கும் ராம் சந்த் என்பவனிடம் நீ அங்கு தானே இருக்கிறார். என்ன விஷய்ம்? என்று கேட்க, அவன், “அந்த ஆள் சண்டைக்காரன், யார் போனாலும் விரட்டி விடுகிறான். அவன் புதுசாக கல்யாணம் செய்துக்கொண்டவன். யாரும் அங்கு வருகிறவர்களோடு சண்டை போடுகிறவன். அவனோடு இருக்க முடியாது. அவனை எல்லாருக்கும் நன்கு தெரியும்..” என்று சொல்லி, “இன்னொரு வீடு அலாட் ஆகிறவரைக்கும், என் வீட்டீல் வேணுமானால் வைத்துகொள்கிறேன்.” என்றான்.

இவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ராம் சந்த் என்னுடைய பிரசினையைக் கேட்ட மாத்திரத்திலேயே, முரளீதர் மல்ஹோத்திரா சொல்லாமலேயே, என்னிடம் வந்து தங்கிக்கொள் என்று சொன்னது, முகம் தெரியாத, பழகாத ஒருவனுக்கு உதவ முன் வந்தது பெரிய விஷ்யமாகப் பட்டது. ஆனால் நான் அவன் வீட்டுக்கு தங்கப் போனதாக நினைவு இல்லை. எனக்கு நினைவில் இருப்பது, எனக்கு இன்னொரு வீடு தங்குவதற்கு உத்தரவு கிடைத்தது தான். அது எஸ்.என்.ராஜாவின் வீட்டுக்கு சில வரிசை வீடுகள தள்ளி அலுவலக்ம் போகும் வழியில் இருந்தது. அந்த வீட்டில் ஏற்கனவே ஒர் மலயாளியும் தமிழ்னும் இருந்தனர். மலயாளி ஒரு எலெசக்ட்ரீஷியன். கூட இருந்த தமிழ்ன் அவனுக்கு உதவியாள். எனக்கு இங்கு எந்த பிரசினையும் இருக்கவில்லை. ராஜாவுக்குத் தான் கொஞ்சம் கவலையாக இருந்தது.(தொடரும்)

வெங்கட் சாமிநாதன்/5.7.2010

.

.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்