நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

வெங்கட் சாமிநாதன்


நான் ஹிராகுட் வந்ததிலிருந்து, அது ஒரு ஞாயிறறுக் கிழ்மை, எல்லோராலும் ராஜா என்று அழைக்கப்பட்ட் எஸ்.என். ராஜாவின் வீட்டில் தான் தங்கினேன் அவர் தான் என்னை பஸ் ஸ்டாண்டில் பார்த்து, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டாரோ தெரியாது, வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மறு நாள் தான் எனக்கு வேலை கிடைத்துவிட்டதே. ராஜா அங்கு ஹிராகுட் காம்ப்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார். அங்கிருந்த தமிழர்களில் மூத்த வயதினரும் அவர்தான். ராஜா, அவ்வளவாக பெரிய வேலையில் இல்லாது இருந்தாலும், ஒர் எளிய சாதாரண தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் அஸ்பெஸ்டாஸ் சுவரும் கூரையும் கொண்ட வீட்டில் இருந்தாலும், அவர் வயதிற்காகவோ என்னவோ, அல்லது அவரது யாருக்கும் ஏதாவது உதவியாக இருக்கும் குணத்தாலோ, எல்லோரும் மரியாதையுடன்
தான் அவருடன் பழகினார்கள். “உனக்கும் ஒரு க்வார்ட்டர் கிடைக்கும் வரை இங்கேயே இருக்கலாம். இங்கேயே சாப்பிடலாம். என்ன? சரிதானா? இல்லை உனக்கு வெளிலேதான் சாப்பிடணும்னாலும் சரி ,அதை உனக்குன்னு க்வார்ட்டர் கிடைத்து போனாயானால் வேறு ஏற்பாடு செய்துகொள்” என்று சொன்னார்.

இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? புதிய இடத்தில்? எனக்கு என்று ஒரு க்வார்ட்டர் கிடைக்கும் வரை இருந்தேன். ஒரு மாத காலமோ என்னவோ. கொஞ்சம் கூட இருக்கலாம். ராஜாவுக்கு அடிக்கடி மாறி வரும் ஷிஃப்ட். ஹிராகுட்டின் பவர் ஹவுஸில் ஸ்விட்ச் போர்ட் ஆபரேட்டர். எட்டு மணிக்கு ஒருதரம் ஷிஃப்ட் மாறும். வீட்டில் எப்போதும் யாராவது இருக்க அது சௌகரியம். அவருக்கு ஊர் காவேரி பட்டினம். மாமி அப்போது ஊருக்குப் போயிருந்தாள். நான் அவரது வீட்டிற்குப் போன இரண்டொரு நாட்களில் அவரது மைத்துனன், அவருடன் வந்து சேர்ந்தான். என்னை விட நான்கைந்து வய்து மூத்தவன். வேலை தேடி வந்திருந்தான். வைத்தியநாதன் என்று பெயர். இந்த பெயர்கள் எல்லாம், அறுபது வருடங்களுக்கு முன் ஒரு குறுகிய கால கட்டமே பழகிய மனிதர்களின் பெயர்கள், முகம் எல்லாம் எப்படி ஞாபகமிருக்கிறதோ தெரியவில்லை. அடுத்து ஒன்றிரண்டு நாட்களில் இன்னும் ஒருவர், ஸ்ரீனிவாசன் என்று பெயர். சில நாட்களே தங்கியிருந்தார். எங்கள் எல்லோரையும் விட அதிகம் படித்த மனிதர். ஒரு அசாத்திய சுய நம்பிக்கை யோடு இருப்பவர் என்பது அவர் எங்களுடன் பழகிய தோரணை யிலிருந்து தெரிந்தது. “இதோ பாருங்கள் ராஜா, எனக்கு சுளையாக ரூ 200 கைக்குக் கிடைக்கவேண்டும். அதற்கு குறைந்தால் எனக்கு அவர்கள் கொடுக்கும் வேலை வேண்டாம். ரெவென்யூ ஸ்டாம்புக்குக் கூட நான் பைஸா கொடுக்கமாட்டேன்” என்றார். ஊர் விட்டு இவ்வளவு தூரம் வேலை தேடி வந்த ஒரு மனிதர் இப்படியெல்லாம் நிபந்தனைகள் போடுவார் என்றால் எங்களுக்கு ஆச்சரியம் தான். நாங்கள் சிரித்தோம். ஆனால், அவருக்கு வேலை கிடைத்தது. முன்னல் சொன்னபடியே அவர் வேலையை ஒப்புக்கொள்ள வில்லை ஒரு வாரத்துக்குள் அவர் ஹிராகுட்டை விட்டுப் போய்விட்டார். பிறகு, எனக்கு ஒன்றிரண்டு வயது மூததவனாக ஒருவன் வந்திருந்தான். வேலை தேடித்தான். கொஞ்சம் விசித்திரமான ஆள். ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்தவன் என்று தெரிந்த்து. இண்டர்வ்யூவுக்குக் கூப்பிட்ட அன்று அவன் போகவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, “நாள் நன்னாயில்லை. இன்னிக்குப் போகாதே”ன்னு அப்பா சொல்லிட்டார்” என்றான். எங்களுக்கு வேடிக்கயாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. அவன் குடும்பத்துக்கு அந்த வேலை தேவை. அவன் சம்பாதித்தாக வேண்டும். இல்லையெனில் ஊர் விட்டு ஒரிஸ்ஸாவில் இந்த வனாந்திரத்துக்கு வருவானேன். பாரதியார் கூட் இந்த மாதிரியான ஒரு வேடிக்கை மனிதர் பற்றி எழுதியிருக்கிறார். வீட்டை விட்டுக் கிள்ம்பிய போது ஒரு விதவை எதிர்ப்பட்டாள் என்று போகாமல் அன்று காரியத்தைத் தள்ளிப் போட, அதன் பிறகு அந்த வருஷம் பூராவுமே நல்ல நாளோ நல்ல சகுனமோ ஆகவில்லை என்று. அவர் எழுதி நாற்பது வருடங்களுக்குப் பிறகும் அதே கதை.

எங்கள் அலுவலகம் அதிக தூரத்தில் ஒன்றும் இல்லை. அலுவலக நேரத்தில் இஷ்டப்பட்டால் வீடு வந்து கொஞ்சம் இளைப்பாறிப் பின் போக்லாம். 15 நிமிட நடை. ஒரு புதிய குடியிருப்பு எவ்வளவு பெரிதாக இருக்கமுடியும்? அதிகம் போனால் ஒரு 300 வீடுகள் அதாவது 30 வரிசை வீடுகள். வரிசைக்குப் பத்தாக. அலுவலக்ம் ஒரு ஷெட்டில் இருந்தது. MB shed என்றார்கள். அதற்கு என்ன அர்த்த்மோ தெரியாது. அதற்குள் தான் ஒரு சீஃப் என்சினியர், இரண்டு சூப்பிரண்டெண்டெண்ட் என்சினியர் அலுவலகங்கள் எல்லாம் அந்த் ஷெட்டுக்குள். ஒவ்வொருத்தரின் கீழும் மூன்று நான்கு செக்‌ஷன்கள் அதற்கான செக்‌ஷன் ஆபீஸர்கள் ஒவ்வொரு செக்‌ஷன் ஆபீஸர் கீழும் ஏழெட்டு பத்துபேர் உதவியாட்கள். இதெல்லாம் நான் சொல்லக் காரணம் அங்கு நடந்த விவகாரங்கள் எனக்கு மிகவும் வேடிக்கையாகவும் பைத்தியக்காரத்தன மாகவும், இது தானா இந்த்ப் பெரிய பெரிய அதிகாரிகள் எலலாம் செய்யும் காரியங்கள்! என்று என்னை நினைக்க வைத்தது தான்.

நான் இருந்த செக்‌ஷனில் இரண்டு டைப்பிஸ்டுகள். நான் ஒருத்தன். எனக்கு பத்து வயது மூத்தவனாக ஒரு மிஹிர் குமார் பிஸ்வாஸ் என்று ஒரு வங்காளி. என் செக்‌ஷனுக்கு அதிகாரி, தேஷ் ராஜ் பூரி என்னும் செக்‌ஷன் ஆபீஸர். அங்கு இருக்கும் குமாஸ்தாக்கள் இரண்டு சூப்பிரண்டெண்டெண்ட் என்சினியர்களுக்கு கடிதங்கள் எழுதுவார்கள். அது திருத்தப்பட்டு எங்கள் டேபிளுக்கு வரும் அது டைப் செய்யப்பட்டு தேஷ் ராஜ் பூரி சரி பார்த்து சீஃப் என்சினீயரின் பிஏ –யின் கையெழுத்துக்குப் போகும். அது எங்கள் செக்‌ஷனுக்கு கையெழுத்தாகி திரும்பி வரும். பின் அதை ஒரு டெஸ்பாட்ச் குமாஸ்தா பதிவு செய்து அதே ஷெட்டில் இருக்கு அடுத்த ரூமுக்கு அனுப்பி பெற்றதற்கு அங்கு குமாஸ்தாவின் கையெழுத்து வாங்கி வர ஒரு ப்யூன் இங்குமங்கும் போய் வருவான். அதே போல மற்ற அறைகளிலிருந்து மற்ற அறைகளுக்கு கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். இதே நாள் பூராவும் வருஷம் பூராவும் ஒரே ஷெட்டுக்குள் இருக்கும் பல ஆபீஸர்களுக்கிடையே கடிதங்கள் பரிமாறிக் கொள்வது தான் இந்த என்சினீர்களின் வேலையா?. இதற்குத் தான் இவ்வளவு பெரிய குடியிருப்பும், பவர் ஸ்டேஷனும், கடைகளுமா? இதற்குத் தான் 100 கோடி செலவாகும் என்று தில்லி அரசாங்கம் இவர்களைத் தேர்ந்தெடுத்து இங்கு அனுப்பியுள்ளதா? இப்படி ஒருத்தருக்கொருத்தர் கடிதங்கள் எழுதிக் கொண்டால், அணை எப்படிக் கட்டப்படும்? எல்லாம் ஒரே பைத்தியக் காரத்தனமாகப் பட்டது. குழ்ந்தைகள் விளையாட்டு மாதிரி இருந்தது.
ஏன் அடுத்த ரூமில் இருக்கும் மற்ற என்சினீயர்க்ளை கூப்பிட்டு, ”என்ன்ய்யா பண்றே, என்ன சமாசாரம்?” என்று கேட்டு பதில் பெற்றால் என்ன? என்று தோன்றிற்று ஆனால் இந்தக் கடித்ப் பரிமாறலின் ஒவ்வொரு க்ட்டத்திலும் எல்லோரும் ரொம்பவே சீரியஸாக் அந்தக் கடிதங்களைத் தயாரித்தார்கள். நேரில் பேசிக்கொள்ள வேண்டிய ஒரு சின்ன விஷய்த்தை ஏன் இவ்வளவு பெரிசு படுத்தி அமர்க்களப் படுத்துகிறார்கள்? என்று நான் அப்போது நினைத்தேன். மற்ற பொழுதெல்லாம் இவர்கள் நன்றாகத் தானே பேசுகிறார்கள்! அப்படியிருக்க ஆபீஸ் நாற்காலியில் உட்கார்ந்து ஃபைலைப் பிரித்த உடன் இவாகளுக்கு என்ன ஆகிவிடுகிறது? என்று எனக்குத் திகைப்பாயிருந்தது.

சின்ன விஷயம். வைத்திய்நாதனுக்கு வேலை கிடைத்து விட்டதா? என்று நான் உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு அடுத்த ரூமில் இருக்கும் ராஜாவுக்கு குரல் கொடுப்பேனா, இல்லை ஒரு ஆபீஸும் எட்டு வேலை யாட்களும் வைத்துக் கொண்டு அவருக்கு லெட்டர் எழுதிக்கொண்டிருப்பேனா?

‘என்ன சாமா? ஆபீஸெல்லாம் எப்படி இருக்கு.? சிரமமா இருக்கா? பிடிச்சிருக்கா? என்று கேட்டார். ”எனக்கு என்னவோ ஒண்ணும் புரியலை. பைத்தியகாரத்தனமா இருக்கு,” என்றேன் “என்ன?” என்று கேட்டார். சொன்னேன். ராஜாவும் சீனிவாசனும் சிரித்தார்கள். “இப்போ அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள் போனப்பறம் வேலை தொடங்கிடும். மற்ற என்சினீயர்கள் எல்லாம் அவங்க வேலை இடத்துக்கு ஆபீஸை மாத்திண்டு போயிடுவாங்க. அப்போ ஒரே ஷெட்டுக்குள்ளே பரிமாறல் நடக்காது. வேறே வேறே ஊர்லே இருக்கற வேறே வேறே ஆபீஸ்களுக்குள்ளே எழுதிப்பாங்க. அப்போ நேர்லே பேசி முடியாது. அப்புறம் என்ன நடக்கறது, நடககலை ங்கறதுக்கு ரிகார்ட் வேண்டாமா? அதான். பின்னாலே உனக்குப் புரியும்.” என்றார். ” நீ அப்பாக்கு லெட்டர் போடறே இல்லையா? ஊர்லே இருந்தா அவரோடே நேர்லே பேசிக்கலாம். ஆனா, இப்போ?” என்று விள்க்கினார். சரி என்று தலையை ஆட்டினேன. ஆனால் புரிந்ததாகச் சொல்லமுடியாது. ஒரு ஷெட்டுக்குள் இருந்துகொண்டு செய்யும் இந்தப் பைத்தியக்காரத்தனம் புரியத்தான் இல்லை. இப்படித்தான் உலகம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.

புதிய இடத்தில் பொழுது அன்னிய உணர்வு இல்லாது சுகமாகக் கழிந்தது. வைத்திய நாதனுக்கு ச்ங்கீதத்தில் நல்ல ரசனை. பாடமாட்டான். ஆனால், நல்ல ஞானம். ஒரு நாள் இரவு வீட்டுக்குத் திரும்பி வரும்போது யார் வீட்டு ரேடியோவிலோ யாருடைய கச்சேரியோ கேட்டது. அந்த சமயம் வயலின் வாத்திய ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. “ராஜமாணிக்கம் வாசிக்கிறார் பாரு,” எப்ப்டிடா சொல்றே? என்று எங்களுக்கு ஆச்சரியம். “கேட்டா தெரியாதா என்ன” என்று வெகு அலட்சியமாக, ஆனால் வெகு சாதாரண பாவனையில் சொன்னான். இது ஒன்றும் பெரிய பிரம்ம வித்தை இல்லை என்ற பாவனையில்.

நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எல்லோரும் எனக்கு மூத்தவர்கள். வந்த சில நாட்களிலேயே அன்று ஞாயிற்றுக் கிழமை. வெயில் கொளுத்திற்று. கோடை காலம் தொடங்கிவிட்டது, இனி போகப் போக அதிகமாகும் என்றார் ராஜா. “மகா நதி பக்கத்திலே தானே இருக்கு. இவ்வளவு பக்கத்திலே இவ்வளவு பெரிய ஆறு ஓடறப்ப்போ குளிக்கறதுக்கு மகாநதிக்கே போகலாமே?” என்று. எல்லோரும் கிளம்பினோம். அதிக தூரம் போக வேண்டிருக்கவில்லை. ஆனால் எனக்கு மகாநதியின் பிரும்மாண்டத்தைப் பார்ப்பது ஒரு பெரும் அனுபவமாக இருந்தது. முதலில் எடுத்த உடனேயே தெரிந்தது, மிக உயர்ந்த கரையிலிருந்து கீழே இறங்க் வேண்டியிருந்தது தண்ணீரில் கால் வைக்க. ஆற்றின் எதிர்க்கரையே தெரியவில்லை. இம்மாதிரியான, சமுத்திரம் போன்று அகன்று விரிந்து பாயும் ஒரு நதியைப்பார்த்ததே இல்லை. எனக்குத் தெரிந்த காவிரி எல்லாம் இதற்கு முன் ஒரு கால்வாய் என்றே சொல்லவேண்டும். வைகை மதுரையில் இன்ன்ம் கொஞ்சம் அகன்று காணப்பட்டது. ஆனால் நான் இருந்த 1946-47 லேயே வைகையில் தண்ணீர் கிடையாது. இங்கு ஒரு பெரும் சமுத்திரம்போல அக்கரை எங்கிருக்கிறது என்று தெரியாது பெருக்கெடுத்து ஓடுகிறது மகா நதி. மகா நதி தான். ஆனால் நடுவில் ஒரு தீவு இருப்பது தெரிந்தது. ஆற்றில் வெள்ளம் வந்தால் அந்தத் தீவில் தெரியும் தென்னை மரங்கள் கூட மூழ்கி விடும் என்றார்கள். அந்தத் தீவைத் தாண்டினால் மறு கரை தெரியும்.

குளிக்க இறங்கினோம். கொஞ்ச தூரத்தில், சுமார் நூறு அடி தள்ளி, பெண்கள் கூட்டம். எல்லா வயசிலும் ஒன்றிரண்டு. குளித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி, அவர்கள் மார்பில் துணி இல்லை. ஆனால் அவர்கள் அது பற்றி சிந்தனையே இல்லாமல் வெகு சகஜமாகத்தான் இருந்தார்கள். ஏதும் . ஆனால் பின்னர் தான் வேடிக்கை இருந்தது. எங்களில் சிலர் கோவணம் கட்டிக் கொண்டு குளிக்க இறங்கினார்கள். அவர்களுக்கும் அதுதான் முதல் தடவை என்று சற்றுப் பின்னர் எங்களுக்குத் தெரிய வந்தது. கோவணம் கட்டிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து அந்த பெண்கள் கூட்டம் சிரிக்க ஆரம்பித்து. அவர்களுக்கு ஒரு பக்கம் வெட்கமாகவும் இருந்திருக்கிற்து. ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருந்திருக்கிறது அவர்களூக்கு. சிரிப்பை அடக்கவும் முடியவில்லை. ”என்ன இது? ஏன் சிரிக்கிறார்கள்?” என்று கேட்டேன். ராஜாதான் சொன்னார். அவர்தான் எங்களுக்குள் ஹிராகுட்டுக்கு பழம் பிரஜை ஆயிற்றே. அந்தப் பழ்ங்குடிப் பெண்கள் கோவணம் கட்டிக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் தான் ஆண்கள் கோவணம் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களுக்கு சிரிப்பு தாங்க்வில்லை.” என்றார். “சொல்லியிருக்கக் கூடாதா?” என்றார் கோவணம் கட்டியிருந்த ஆசாமி ஒருவர். ‘இந்த நேரத்துக்கு இங்கு பெண்கள் குளிக்க வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் ராஜா.

அதற்குப் பிறகு நாங்கள் அதிக தடவை மகா நதிக்கு குளிக்கச் சென்றதில்லை. அங்கு இருந்தது சுமார் ஒரு வருட காலம் தான். அதற்குள் எங்கள் அலுவலகம் எதிர்க்கரையில் இருந்த புர்லாவுக்கு மாற்ற்லாகிவிட்டது. புர்லாவில இருந்த எங்கள் குடியிருப்பிலிருந்து மகா நதி அதிக தூரம்.

அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருந்தது.. அந்த ப்ழங்குடி மக்கள் மிகவும் நல்லவர்கள். மற்றவர்களையும் தம்மைப் போல் நினைப்பவர்கள். நகர்புற சாமர்த்தியங்களும் ஏமாற்றுக்களும் பொய்களும் அவர்களை இன்ன்ம் பீடிக்கவில்லை. அவர்களைப் போல் தான் அப்பக்கத்து ஒரிஸா கிராம வாசிகளும்.

அலுவலகத்தில் ப்யூன் வேலை பார்ப்பவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அங்கு வேலைக்கிருப்பவர்கள் சீஃப் என்ஜினியரிலிருந்து சாதாரண குமாஸ்தா வரை ஒன்று பஞ்சாபிகள் பெருமபாலோர். அதற்கு அடுத்து வங்காளிகள், மலையாளிகள் பின்னர் தமிழ்ர்கள். குமாஸ்தா வேலையில் கூட ஒரியர்கள் மிகவும் சிலர் தான் இருந்தனர். ப்யூன்கள் வேலையில் தான் அவர்கள் பெருமபாலும் காணப்பட்டார்கள். “அவர்களுக்கு சொந்த வீடு(குடிசை தான்) நிலம் எல்லாம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு காசு வேண்டும். அதற்காகத்தான் வேலைக்கு வருகிறார்கள். வயிற்றுக்கு இல்லாமல் தவிப்பவர்கள் இல்லை அவர்கள்” என்றார். அலுவலகத்துக்கு வெளியே, ரோடோரம் பெண்கள் கடலை, கறிகாய், பழம் என்று சிறிய சாக்குத் துணி பரப்பி கடை வைத்திருப்பார்கள். எத்தனையோ தடவை நம்மிடம் இருக்கும் காசுக்கு மேல் ஏதும் வாங்கத் தோன்றினால், அல்லது தற்செயலாக கையில் காசு இல்லாது ஏதும் வாங்கக் கண்களில் பட்டு விட்டால், “அப்புறம் காசு கொடுங்கள்” என்று சொல்வார்கள். தெருவில் போகிறவனை எப்படி இவர்கள் நம்புகிறார்கள்? இதை வைத்துத் தானே அவர்கள் பிழைப்பு? “ என்று ராஜாவைக் கேட்டால்,அவர்களிடையே இம்மாதிரி எண்ணங்களே உதிப்பதில்லை. காசு கொடுத்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் நம்மிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளாமல் இருக்க வேண்டும்” என்பார்.

அவர்கள் ஏமாறித்தான் இருக்கிறார்கள். நான் ஹிராகுட்டுக்குப் போனது மார்ச், 1950-ல்.
அப்போது அணை வேலை எதுவும் தொடங்கப் படவில்லை. அதற்கு ஒரு வருடம் முன்புதான் மற்றவர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் வீடு கட்டும் பணி தான் முதலில் நடந்துகொண்டிருந்தது. அதற்கு முன் அங்கிருந்த ஒரு பழைய கடைத் தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் அங்கு துணிக்கடை வைத்திருந்த ஒரு மார்வாரிக்குச் சொந்தம் என்ற் தெரிந்தது. மற்ற கடைக்கார்கள் எல்லாம் வாடகை கொடுத்து கடை வைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல. அந்த மார்வாரி, வட்டிக்குக் கடன் கொடுத்துக்கொண்டிருந்தான். அந்த வழியில் அவனுக்கு அங்கிருந்த நிலங்கள் பெருமளவில் அவனுக்குச் சொந்தமாகியுள்ளதாகவும் சொன்னார்கள். எவ்வளவு காலமாக அந்த மார்வாரி அங்கிருந்தான். என்பது தெரியாது. அந்தப் பழங்குடி மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் மிகப் பழ்ம் குடி அந்த மார்வாரிதான் என்று தெரிந்தது. ஏதோ கண்காணாத் இடத்தில் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே என்று என் அம்மாவும் மற்றவர்களும் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதை நினைத்துக் கொண்டேன். இதற்கும் பத்துப் பதினைந்து வருடங்களுக்கும் முன், அணைக்கட்டு என்ற நினைப்போ திட்டமோ இல்லாத காலத்தில் அங்கு குடி பெயர்ந்து தன்னை ஒரு பெரும் பணக்காரனாக நிலைநாட்டிக்கொண்டுவிட்ட அந்த மார்வாரியைப் பற்றி என் அம்மா என்ன நினைப்பாள்? அல்லது அந்த மார்வாரியின் பெற்றோர்கள் சிந்தனை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்துக்கொள்வேன். அங்கிருந்த ஒரே துணிக்கடை அவனது தான். அங்கு வேண்டியவர்களுக்கு ஒரு அவசர்த் தேவைக்கு பணம் வட்டிக்குக் கொடுப்பவனும் அந்த மார்வாரி தான்.

நாங்கள் நிறையப் பேர் இருந்ததால், அவரவர்க்கு வேலை நேரம் மாறுவதால், யாராவது வீட்டில் இருப்பார்கள். வீட்டைப் பூட்டி சாத்தியமில்லை. எல்லோரும் ஒன்றாக எங்காவது வெளியே சென்றால் தான் வீடு பூட்டப் படும். தவறிப் போய் ஒரு நாள் வீடு திறந்தே கிடந்திருக்கிறது. எல்லாம் பத்திரமாகத் தான் இருந்தது. திறந்த வீட்டில் யாரும் நுழையவில்லை. பிறகு இந்த நம்பிக்கையால் கவனமின்மை வந்துவிட்டால், ஏதோ திருட்டுப் போவது கண்டு பிடித்தோம். யார் பையிலிருந்தாவது சில்லரை போகும். ஒன்றிரண்டு ரூபாய்கள். மற்ற பணம் நோட்டுகள் அப்படியே இருக்கும். வந்தவனுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே திருடியிருக்கிறான் என்பது தெரிந்தது. இந்த விவ்ரம் மற்றவர்கள் அனுபவத்திலும் இருக்கவே இது தமாஷாக பேச்வத்ற்கு ஒரு விஷயமாகப் போயிற்று. (தொடரும்)

வெங்கட் சாமிநாதன்/27.5.10

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்