பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 3

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

தமிழ்ச்செல்வன்


இனவெறியாளர் கால்டுவெல்
ஏறக்குறைய அதே சமயத்தில் தமிழகத்தைப் பெரிதும் பதம் பார்த்தவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்கிற ஸ்காட்டிஷ் பாதிரி. எலிஸா மால்ட் என்கிற தன் மனைவியுடன் திருநெல்வேலியில் தங்கிய கால்டுவெல் கடுமையான மதமாற்றத்தில் ஈடுபட்டார். இவருடைய மனைவியும் தமிழ் பெண்களை மதமாற்றம் செய்வதில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” ((A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages. Harrison: London, 1856) என்ற நூலை எழுதியதால் பெரிய தமிழ் அறிஞராகத் திராவிட இனவாதிகளால் போற்றப்படுகிறார். தன்னுடைய எழுத்துக்களின் மூலம் பிராம்மண துவேஷம் எனும் விஷத்தைக் கக்கியவர் கால்டுவெல். பிராம்மண துவேஷத்தை ஆரம்பித்து வைத்தவர் ஸீகன்பால்கு என்றால் அதைத் தமிழகம் முழுவதும் பரப்ப வழிவகுத்தவர் கால்டுவெல் என்றால் அது மிகையாகாது. பிராம்மணர்களின் வைதீக வழிபாடு முறைகளும், தேவர்களின் (மறவர்குலத்தினர்) தேசபக்தியும் வீரமும் இவரின் கடும் விமரிசனங்களுக்கு உள்ளாயின. ஏன், தான் பெரிதும் மதம் மாற்றிய நாடார் சமூகத்தினரைப் பெரிதும் அவமதித்தவர் கால்டுவெல். “திருநெல்வேலி நாடார்கள்” (Tinnevelly Shanars – Printed by Reuben Twigg at the Christian Knowledge Society’s Press, Church Street, Vepery, Madras in 1849). என்கிற நூலில் நாடார்களின் வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு முறைகளையும் கடுமையாக விமரிசனம் செய்திருந்த காரணத்தால், அவர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகிப் பின்னர் திருநெல்வேலியிலிருந்து உதகமண்டலத்திற்குச் சென்று தன் வாழ்வின் இறுதி வரை அங்கேயே இருந்தார். . (Ref: – http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell )
ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் புனைந்த முழுப் பொய்யும், புளுகும், புனைச்சுருட்டுமான ‘ஆரிய-திராவிட’ இனக்கோட்பாடுகளை உண்மையான சரித்திரம் எனப்புகுத்தி தமிழ் இந்துக்களை பிளவு படுத்தி மதமாற்றம் செய்தவர். இன்றைய திராவிட இனவெறியாளர்கள் இந்தப் புளுகுகளை விவிலியமாக ஏற்றுக்கொண்டு தமிழகத்தை எந்த அளவிற்கு நாசமாக்கிக் கொண்டிருக்க முடியுமோ அந்த அளவிற்கு நாசமாக்கிக்கொண்டிருக்கின்றனர். “திராவிட இனவெறி” என்கிற விஷ விதையைத் தமிழ் மண்ணில் நன்கு ஊன்றியவர் இந்தப் பாதிரி கால்டுவெல் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
“ஆர்ய”, “த்ராவிட” ஆகிய இரண்டு சொற்களுமே சமஸ்கிருத சொற்கள் தாம். சங்க இலக்கியங்களில் ‘ஆரிய’ என்ற சொல் நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ‘திராவிட’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. பதினேழாம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் ‘திராவிட’ என்ற சொல் தமிழில் பயனுக்கு வருகிறது; அதுவும் ‘மொழி’ என்கிற அர்தத்தில் தமிழைக் குறிக்கத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவத்திரு சபாபதி நாவலர் கூட தமிழ் மொழியைக் குறிக்கத்தான் அவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
மேலும் சங்க இலக்கியங்களில் ‘ஆரிய’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டபோதுகூட, ஆரியர் வேறு இனத்தவர் என்கிற அர்தத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் தென் திசையையும் (தென் பகுதியையும்) தென் பகுதி மொழிகளையும் குறிக்கப் பயன்பட்ட ‘திராவிட’ என்ற சொல்லை முதன்முதலில் வேண்டுமென்றே தவறாக ‘இனத்தைக்’ குறிக்கப் பயன்படுத்தியவர் கால்டுவெல் பாதிரிதான். ’திராவிட’ என்ற சொல்லை இனவெறியைத் தூண்டுவதற்கென்றே, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவேண்டும் என்றே உபயோகப்படுத்தியவர் கால்டுவெல்.
“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற நூலை இவர் இயற்றியதால் இவரை மொழிப்பற்று மிக்கவர் என்று தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன. ஆங்கிலேயர் அரசில் அதிகாரியாக இருந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் தான் முதலில் நம் அறிஞர்கள் (அந்தணர்கள்) இருவரின் உதவியுடன் தென்னக மொழிகளை ஆராய்ந்து திராவிட மொழிகள் என்கிற அனுமானத்தை (Dravidian Language Hypotheses) உருவாக்கி எழுதினார். அவற்றிலிருந்துதான் கால்டுவெல் பல விஷயங்களை எடுத்துத் தன்னுடைய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற நூலை எழுதியுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது.
கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஏன் இறங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள, ‘கணையாழி’ ஏப்ரல் 1997 இதழில் முனைவர் க.முத்தையா அவர்கள் எழுதிய ‘கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் அரசியல் பின்னணி’ என்கிற கட்டுரையைப் படிக்க வேண்டும்.
அதில், “பிரதேச வாதத்தை முக்கியப்படுத்தும் முயற்சியில் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) எட்கர் தர்ஸ்டன் (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்) கிலப்ர்ட் ஸ்லேட்டர் (இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு) ஆகியோர் இறங்கினர். இவர்களின் பிரதேச வாதத்திற்குத் தனியான அரசியல் காரணங்களும் உண்டு…
கால்டுவெல்லின் ஒப்பியல் அறிவு திராவிட மொழி ஆய்வுகளில் சில, அரசியல் உள்நோக்கத்தோடே பயன்படுத்தப் பட்டுள்ளது…
அவர் வருகையின் நோக்கம் தென்னிந்திய மக்களை எப்படியாகிலும் சமய மாற்றம் செய்து அவர்களைக் கிறுத்துவர்கள் ஆக்குவதேயாகும். அவருக்கு இடப்பட்ட சமயப் பணியில் வெற்றியும் கண்டார். தாம் இடையான்குடி கிராமம் வருவதற்கு முன்னர் ஆறாயிரமாக இருந்த திருநெல்வேலி கோட்டக் கிறுத்துவ மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட காலத்தில் ஒரு இலட்சமாக்கியப் ‘பெருமை’ அவரையே சாரும்…
அவர் ஆய்வை ஊன்றிப் படிக்கும்போது தமிழின் தொன்மையை நிறுவுவதை விட, தமிழர்களின் தனித்தன்மையை விளக்குவதைவிட, சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத இகழ்ச்சி, ஆகியனவற்றை விளக்குவதே தம் ஆய்வின் நோக்கமாக்க் கொண்டுள்ளார். இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தம் ஆய்வில் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்…
இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எண்ணங்கள் மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறுத்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்கு உணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்ச்சியில் இறங்குகிறார்.
இம்முயற்சியின் முதற்கட்டப் பணியாக ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார் அவருக்கு முன்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்கும் பொதுச் சொல்லாகத் திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. கால்டுவெல்லுக்கு முன் ரபர்ட்-டி-நொபிலி இம்மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டுள்ளார்…
கால்டுவெல் செய்த மிகப்பெரும் தவறு மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டதுதான். இணக்கமான மொழிகளின் அடிப்படையில் இனங்களை வரையறுப்பது வரலாற்று விதிகளுக்கு முரணானது.” என்று தெளிவாக்க் கால்டுவெல் பாதிரியின் உள்நோக்கம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. [திராவிட மாயை (இரண்டாம் அத்தியாயம்; பக்கம் 26-28) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010].
தமிழ் ஹிந்துக்களிடையே பிரிவையும் பகையையும் ஏற்படுத்தி, சம்ஸ்கிருத மொழியின் மீதும் ஹிந்து மதத்தின் மீதும் துவேஷத்தை வளர்த்துவிட்டு, ஆரிய-திராவிட கோட்பாட்டைப் பற்ற வைத்து, தமிழகத்தில் பிரிவினையைத் தூண்டி, தேச ஒற்றுமையைக் குலைத்தவர் தான் கால்டுவெல். மற்றபடி இவர் மொழிப்பற்று உள்ளவர் என்றும் இவரால் தமிழ் மொழி பயன்பெற்றது என்றும் திராவிட இனவாதிகள் கூறுவது, கடந்த அறுபது ஆண்டுகளாக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் மொழி வளர்ந்துள்ள லட்சணத்தைப் பார்த்தாலே நன்கு விளங்கும். இவர்களின் கூற்று வெறும் பொய்ப்பிரசாரமேயன்றி வேறில்லை.
நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமையன்று, “வித்தாக விளங்கும் மொழி” என்கிற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், பட்டிமன்றங்கள் மூலம் தமிழகத்தில் நன்கு அறிமுகமான பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள், “ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிப்புச் செய்ய வேண்டுமென்றால் அப்பிரதேசத்தின் மொழியைக் கைப்பற்ற வேண்டும். அவ்வாறு கிறுத்தவர் செய்ததாக வரலாறுகள் உள்ளன. ‘அவர்கள் எங்கள் நாட்டுக்கு வரும்போது எங்களிடம் நிலம் இருந்தது அவர்கள் கையில் வேதப் புத்தகம் (பைபிள்) இருந்தது; இப்போது எங்கள் கையில் வேதப் புத்தகம் இருக்கிறது, அவர்கள் வசம் எங்கள் நிலம் உள்ளது’ என்று ஆப்பிரிக்கர்கள் பேசுகின்ற நிலைமை இன்று உள்ளது. கிறுத்துவர்கள் கால் வைக்கிற இடமெல்லாம் இது தான் வரலாறு” என்று கூறினார். கால்டுவெல் போன்ற பாதிரிமார்களைக் கொண்டாடிய மாநாட்டில் உண்மையை மறைக்காமல் பேசிய அவரின் தைரியம் பாராட்டுக்குறியது. மேலும் நம் நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் விதத்தில் கோவில்கள் கட்டப்படும் முறையையும் அவற்றின் பெருமைகளைப்பற்றியும் அவர் பேசியது, கிறுத்துவமும், திராவிட இனவாதமும், கலைஞர் புகழாரமும் பிரதானமாக இடம்பிடித்திருந்த மாநாட்டில், அபூர்வமாக வீசிய தமிழ்த்தென்றல்களில் ஒன்றாக இருந்தது.
மேலும் பாதிரிகளும் தமிழ் பற்றும்
மேற்குறிப்பிட்ட பாதிரிகள் மட்டுமல்லாமல் இன்னும் பல பாதிரிகள் தமிழகத்தில் இறங்கி ஹிந்துக்களிடையே பிளவு ஏற்படுத்தி கிறுத்துவத்தை ஸ்தாபிக்க முயற்சி மேற்கொண்டுள்ள வரலாறுகள் பல ஆதாரங்களுடன் இருக்கின்றன.
ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட கிழவன் சேதுபதி மன்னன் ஆட்சியின்போது, ஜான் டி பிரிட்டோ என்கிற போர்ச்சுகீசிய பாதிரி மதமாற்றத்தில் ஈடுபட்டு மன்னன் அரண்மனையிலேயே அவன் நெருங்கிய உறவினர்களையும் மதமாற்றம் செய்து பின்னர் மன்னனால் தண்டிக்கப் பட்டுள்ளார். இந்த வரலாற்றை ஆதாரங்களுடன் தஞ்சையைச் சேர்ந்த வெ.கோபாலன் அவர்கள் தன் கட்டுரையில் எழுதியுள்ளார். (http://www.tamilhindu.com/2010/06/truth-behind-john-de-britto-history/)
“டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் உரைநடை நூல்கள்” – தொகுதி 3-ல் 520-523 பக்கங்களில், தியாகராச செட்டியாரிடம் ஒரு ஐரோப்பிய பாதிரி, யாப்பிலக்கணம் படித்துள்ளதாக்க் கூறி, ஒரு திருக்குறளை சில இடங்களில் திருத்தி, அதை அவரிடம் காட்டியபோது, செட்டியார் தலையில் அடித்துக்கொண்டு கோபமுற்று, அவரைத் திட்டி விரட்டிய சம்பவம் விவரிக்கப் பட்டுள்ளது.
தியகராஜச் செட்டியார் இருப்பிடம் தேடி வந்த அப்பாதிரியார், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும் – என்கிற குறளில் எதுகை நன்றாக அமையவில்லை. அதனால் இரண்டாவது அடியை ‘மக்களாற் காணப்படும்’ என்று திருத்தினேன். அந்தத் திருத்தம் எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது பார்த்தீர்களா?” என்று கேட்டுள்ளார். தலையில் அடித்துக்கொண்டு காதைப் பொத்திக்கொண்ட செட்டியார், “திருவள்ளுவரைவிடப் புத்திசாலியாகிவிட்டீரோ! குறளைத் திருத்த வேண்டுமென்ற இந்த ஞானம் உமக்கு எப்படி ஏற்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! உம்முடைய கையில் சிக்கிச் சீர் குலையவா அதைத் திருவள்ளுவர் இயற்றினார்? எச்சத்தாலென்பதை மக்களாலென்று திருத்தினாராம்! எச்சமென்பதும் மக்களென்பதும் ஒன்றாகுமா? இந்த வித்தியாசம் தெரியாதவருக்குக் குறளைக் கையிலே தொடுவதற்குக்கூட யோக்கியதை இல்லையே! இந்த மகாபாதகச் செயலைச் செய்தவர் முகத்தில் விழிப்பதே பாவம்” என்று கண்டிக்க, துரை வேறு வழியின்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்.
திருக்குறளில் முதல் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தின் முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்பதை “ஆதி சிகர முதற்றே உலகு” என்று ஒரு ஆங்கிலேயப் பாதிரி திருத்தி அச்சிட்டதைக் கேள்விப்பட்ட மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர், அப்பாதிரியாரிடமிருந்த அத்தனைப் பிரதிகளையும் விலை கொடுத்து வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
அன்று திருக்குறளைத் திருத்தத் துணிந்த கிறுத்துவர்கள் இன்று அவருக்கே ஞானஸ்நானம் செய்துவைக்கவும் துணிந்து விட்டனர். சென்னையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்கிற ஒரு கிறுத்துவ தீவிரவாத எவாங்கலிக்கர், தமிழகத்தில் உள்ள ஆதிக்கச் சர்ச்சுகளின் (குறிப்பாக மயிலைக் கத்தோலிக்க சர்ச்சு) ஆதரவுடன், திருவள்ளுவர் புனித தாமஸின் சீடர் என்றும் திருக்குறளில் உள்ள கருத்துக்கள் விவிலியத்தில் உள்ள கருத்துக்களே என்றும் அயோகியத்தனமான பொய்ப்பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார். கேரள மற்றும் தமிழக கத்தோலிக்கச் சபைகளும், கோடிகளைக் கொட்டிப் புனித தாமஸின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போவதாகவும், அதில் அவருக்கும் திருவள்ளுவருக்கும் இருந்த குரு-சிஷ்ய உறவைக் காட்டப்போவதாகவும் அறிவித்தனர். பின்னர் சென்னையில் நடந்த அத்திரைப்படத்தின் துவக்க விழாவில் திருவள்ளுவரைப் பற்றி நன்கு அறிந்தவரும் குறளோவியம் படைத்தவருமான தமிழக முதல்வர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தது கவனிக்கத் தக்கது. (Ref: – http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1221 and http://www.newstodaynet.com/col.php?section=20&catid=29&id=8961 )
(தொடரும்…)

Series Navigation

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்