ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1

This entry is part of 34 in the series 20100704_Issue

தமிழ்ச்செல்வன்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் கோவையில் நடந்து முடிந்த தி.மு.க பெருங்கூத்தில், பின்லாந்து நாட்டு சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியாளரும் மொழிவல்லுனருமான பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பாடீல் “கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கினார். விருதுடன் (பாராட்டுப் பத்திரம்), ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலையும் ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டன.
சமீப காலங்களில் பல ஆராய்ச்சியாளர்களாலும், வல்லுனர்களாலும் “ஆரியர் படையெடுப்பு / ஆரியர் குடியேற்றம்” கோட்பாடுகள் ஆதாரமற்றவை, நிராகரிக்கத் தக்கவை என்று அகழ்வாராய்ச்சி / தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாகவும், வரலாற்று ரீதியாகவும் மற்றும் அறிவியல் பூர்வமான மரபணு ஆராய்ச்சி மூலமும் நிரூபித்துள்ளனர். இருப்பினும், இன்று வரை அந்தக் கோட்பாடுகளை ஆதரித்து வருகிறவர் அஸ்கோ பர்போலா. ஒரு காலத்தில் ஆங்கிலேயரால் புனையப்பட்ட ஆரியப் படையெடுப்புக் கோட்பாடுகளைப் பெரிதும் ஆதரித்து வந்த மார்க்ஸீய வரலாற்று ஆசிரியர்கள் கூட அதனால் பிரயோசனமில்லை என்றுணர்ந்து, அவற்றை நிராகரித்து வருகின்ற தற்போதைய காலக்கட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த திராவிட இனவெறியாளர்கள் மட்டும் தமிழ் மக்களை ஏமாற்றி ஹிந்துக்கள் என்கிற கூட்டமைப்பிலிருந்து அவர்களை விலக்கி, ‘ஹிந்து’ என்கிற அடையாளத்தைத் துறக்கச் செய்து, ‘தமிழ்’ என்கிற அடையாளத்தை ஏற்படுத்தித் தனியாக பிரிக்கும் நோக்கத்துடன், காலாவதியான ஆரிய-திராவிட இனக்கோட்பாடுகளைத் திரும்பத் திரும்ப பிரசாரம் செய்து வருகின்றனர்.
சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியிலும் மற்றும் கல்வெட்டுக்கள் பற்றிய ஆராய்ச்சியிலும் மிகச் சிறந்து விளங்கும் வல்லுனர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூட, காலாவதியாகிப் போன ஆரிய-திராவிட கோட்பாடுகளை இன்னும் ஆதரித்து வருபவர் தான். கடுமையான ஆராய்ச்சிகள் மேற்கொண்டதனால் விளைந்த அவரின் சிறப்புமிகு கண்டுபிடிப்புகள், அவற்றை நம்பகத்தன்மையில்லாத திராவிட நாகரீகத்துடன் அவர் இணைப்பதால், பொலிவிழந்து நீங்கா கறை பெற்று விடுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ அவர் திராவிட நாகரீகம் பற்றிய தன்னுடைய கருத்துக்கள் மூலம் தமிழகத்துத் திராவிட இனவெறியாளர்களுக்கு உதவி வருகின்றார். அவருடைய பலவருடகால ஆராய்ச்சியையும் உழைப்பையும் அங்கீகரித்துப் பாராட்டும் வண்ணம் தி.மு.க அரசு இவ்வாண்டு அவருக்கு “திருவள்ளுவர் விருது” அளித்து கௌரவித்துள்ளது.
ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும் அஸ்கோ பர்போலா அவர்களுக்கும் நீண்ட நாள் தொடர்பும் நட்பும் இருப்பதாலும், தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதன்மையான உயர்மட்டக் குழுவில் உப தலைவராக அவர் இருப்பதாலும், தமிழ்ச் செம்மொழி விருதிற்கு அஸ்கோ பர்போலா பெயரை அவர் தான் பரிந்துரை செய்திருப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அஸ்கோ பர்போலா அவர்களும் தன் கண்டுபிடிப்புகளை ஆரிய-திராவிட இனக்கோட்பாடுகளுடன் இணைப்பதால், தி.மு.க அரசாங்கமும் அவருடைய பரிந்துரையை ஏற்றுக் கொண்டு பர்போலாவுக்கு விருது அளித்துள்ளது என்று கூறப்படுகிறது. தற்செயலாகத் தோன்றினாலும், முக்கியமானதாக, விருது ஏற்பு உரையில் பர்போலா அவர்கள், “சிந்து பற்றிய புரியாத புதிர்களுக்குத் திராவிடத் தீர்வுகள்” என்கிற என்னுடைய கண்டுபிடிப்புகளுக்குத் தமிழக முதல்வரின் விருது அளிக்கபடுவது, அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்ட விருது என்கிற அர்தத்தில் கருதப்படலாம்” என்று கூறியுள்ளார்.
ஆரிய-திராவிட கோட்பாடுகள் நம்பகத்தன்மையில்லாதவை, ஆதாரமற்றவை, என்று தூக்கியெறியப்பட்ட பின்னும் அவற்றை ஆதரிக்கின்ற ஒரு வல்லுனருக்கு, அவற்றினால் பயன்பெறக்கூடிய ஒரு திராவிட இனவெறி அரசாங்கம் விருது கொடுத்து கௌரவிக்கிறது என்றால், அது கண்டிப்பாக அரசியல் காரணங்களுக்காகத் தான் இருக்க வேண்டும் என்று நடுநிலையாளர்களால் அர்த்தம் கொள்ளப்படும் என்பது தெளிவு. அதையே தான் பர்போலா அவர்களின் விருது ஏற்புப் பேச்சும் உறுதி செய்கின்றது.
கிறுத்துவ மதத்தைப் பரப்பவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு தமிழகத்திற்கு வந்திறங்கிய பாதிரிமார்களுள் ஒருவரான ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. சங்க கால இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்து இடைக் கால இலக்கியங்களிலும் நூல்களிலும் கூட ’திராவிடம்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இல்லை. மண்ணின் மைந்தர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் கிறுத்துவ பாதிரியான கால்டுவெல் அவ்வார்த்தையை பிரயோகித்துள்ளார் என்பதும் உண்மை. ஒரு பக்கம் அரசியல் நிறுவனமான ஆங்கிலேய அரசு, மண்ணின் மைந்தர்களைப் பிரித்து ஆள்வதற்காக, ஆரிய-திராவிட கோட்பாடுகளைப் பயன் படுத்தியது என்றால், மறுபக்கம் மத நிறுவனங்கள் நம் பூர்வீக மொழியைக் கைபற்றி, கலாசாரத்தை அழித்து, நம் தேசத்தை கிறுத்துவமயமாக்க அதே கோட்பாடுகளைப் பயன்படுத்தின.
ஒரு பூமியை ஆக்கிரமிக்க கிறுத்துவ நிறுவனங்கள் மூன்று நிலைகள் கொண்ட வழியைப் பின்பற்றுகின்றன. முதலாவதாக அப்பூமியின் மக்கள் பேசும் மொழியைக் கற்றல், கைப்பற்றல்; இரண்டாவதாக அப்பூமிக்கே உறிய கலாசாரத்தை அழித்தல்; மூன்றாவதாக அரசியல் சக்தியைப் பெறுதல். கிறுத்துவம் ஒரு மதமன்று; அது ஒரு அரசியல் கோட்பாடு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சொல்லப்போனால், அதை ஒரு மதம் என்று கருதுவதே பெரிய தவறு. கிறுத்துவ தேசங்களிலிருந்து கிறுத்தும் இல்லாத தேசங்களுக்குச் செல்லும் பாதிரிமார்களின் முக்கிய வேலையே, பூர்வீக மொழிகளைக் கற்று, அம்மக்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் தெரிந்துகொண்டு அழிப்பதற்காக அம்மொழியில் இயற்றப்பட்டுள்ள இலக்கியங்களையும் நூல்களையும் கற்று, பின்னர் அரசியல் சக்தி பெறுவதற்கான சூழ்நிலையைத் தங்களின் அரசியல் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி வைப்பது, ஆகியவை தான்.
தமிழகத்திற்கு வந்திறங்கிய ராபர்டு கால்டுவெல் உள்ளிட்ட அனைத்து கிறுத்துவ மிஷனரிகளும் தங்களை “தமிழ் மொழிப் பற்றாளர்கள்” என்று காட்டிக் கொண்டார்கள். அவர்களின் பொய்யான தோற்றத்தை அப்பாவித் தமிழ் இந்துக்களும் அடக்கமும் எளிமையும் கொண்ட தமிழ் இந்து அறிஞர்களும் முழுமையாக நம்பினர். ஸ்காட்லாந்து பாதிரியார் கால்டுவெல் சென்னையில் 1838-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கால் வைப்பதற்கு முன்பே, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஆண்டர்ஸன் என்கிற மிஷனரி “பொதுச் சபை பள்ளி” (General Assembly School) என்கிற பள்ளிக்கூட்த்தை 1837-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பித்துவிட்டார். வெள்ளைக் கிறுத்துவர்களால் ‘கருப்பு’ நகரம் என்று அழைக்கப்பட்ட மதராஸில், ஆர்மீனியன் தெருவில் 59 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அப்பள்ளியின் கிளைகளை காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லூர் மற்றும் மதராஸின் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் துவக்கிய ஜான் ஆண்டர்ஸன், தன் கூட்டாளிகளான ராபர்ட் ஜான்ஸ்டன், ஜான் பிரெய்ட்வுட் மற்றும் அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட பி.ராஜகோபால் ஆகியவர்களுடன் சேர்ந்து அப்பள்ளிகளைப் பராமரித்து வந்ததோடு மட்டுமல்லாமல், சில படித்த உள்ளூர்வாசிகளையும் மதமாற்றம் செய்து ஆசிரியர்களாக நியமித்தனர். இந்தப் பள்ளி தான் நாளடைவில் வளர்ந்து “மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரி” ஆனது என்பது முக்கியமாக்க் குறித்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். (Ref: – http://www.mcc.edu.in/index.php?option=com_content&task=view&id=30&Itemid=56).
ஆங்கிலேய அரசின் ஆதரவால் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரி தலைசிறந்த கல்வி நிறுவனமாக வளர்ந்தது. உள்ளூர்வாசிகளில் மேல்மட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களெல்லாம் அக்கல்லூரியில் படிப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். ஸ்காட்டிஷ் பாதிரி கால்டுவெல் மதமாற்ற வேலைகளில் உச்சத்தில் இருக்கும்போது, சூரிய நாராயண சாஸ்திரி, சுவாமி வேதாசலம் போன்ற தமிழறிஞர்கள் இளமைத் துடிப்புடன் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியில் தமிழ் துறையில், ஒருவர் பின் ஒருவராக, ஆசிரியர்களாகச் சேர்ந்தார்கள். கல்லூரியில் உள்ள கிறுத்துவ சூழ்நிலை காரணமாகவும், கால்டுவெல் போன்ற பாதிரிகளின் பொய்ப்பிரசாரங்களின் காரணமாகவும், பிராம்மணரான சூரிய நாராயண சாஸ்திரி சமஸ்கிருதத்தின் மீது வெறுப்படைந்து தன் பெயரைப் “பரிதிமாற் கலைஞர்” என்று மாற்றி வைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், “தனித் தமிழ் இயக்கம்” என்கிற ஒரு இயக்கத்தையும் ஆரம்பித்தார். தமிழ் மொழியில் உள்ள சமஸ்கிருதக் கலவையை நீக்கி, சமஸ்கிருத வார்த்தைகளையும் அப்புறப்படுத்தி, வேறு மொழிகளின் கலப்படமற்ற சுத்த மொழியாக தமிழ்மொழி விளங்கவேண்டும் என்பதே அவ்வியக்கத்தின் நோக்கம். அவரைப் பின்பற்றிய சைவ சமயப் பற்றாளரான சுவாமி வேதாசலமும் “மறைமலை அடிகள்” என்று தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு தனித் தமிழ் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். இருவரும் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்களாகவும் ஒருவர் பின் ஒருவராகப் பணியாற்றினர்.
பரிதிமாற் கலைஞர் தன்னுடைய 33 வயதில் காசநோய் காரணமாக மரணமடைந்த பின்பு, மறைமலை அடிகள் ஈ.வெ.ரா. தொடங்கிய “சுயமரியாதை இயக்கம்” என்கிற ”பகுத்தறிவாளர்” இயக்கத்துடன் இணைந்து பணியாற்றினார். தான் தீவிர சைவ சமயத்தவராக இருந்தாலும், சுய மரியாதை இயக்கத்தவர்களின் நாத்திகக் கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவராக இருந்தாலும், ‘சம்ஸ்கிருத எதிர்ப்பு’ மற்றும் ‘பிராம்மண எதிர்ப்பு’ ஆகிய நிலைகளில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார் மறைமலை அடிகள். கிறுத்துவ மிஷனரிகள் எப்பொழுதும் இனவெறிக் கோட்பாடுகளின்படி நடப்பவர்கள். இனவெறிக்கும் கிறுத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதன்படி அவர்கள், “பிராம்மணர்கள் ஆரியர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள். திராவிடர்களான தமிழர்கள் தான் இம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள்” என்று தமிழகத்தில் இனவெறியைப் பரப்பியவர்கள் கிறுத்துவ மிஷனரிகளே.
சுயமரியாதை இயக்கம் பின்னர் திராவிட இயக்கமாகியதும், ஈ.வெ.ரா நீதிக் கட்சியிலிருந்து வெளிவந்து திராவிடர் கழகம் ஆரம்பித்ததும் வரலாறு. அவர் இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரத்தை வரவேற்கவில்லை என்பதும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியைத் தமிழகத்தில் மட்டுமாவது தொடரவேண்டும் என்று அவர்களிடம் மன்றாடினார் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி போன்ற திராவிட இனவெறியாளர்களுக்கு கால்டுவெல் பாதிரி கடவுள் போல. மேலும் அவரின் கருத்துக்கள் இவர்களுக்கு வேதவாக்கு. ஆகவே, அவருடைய திராவிட இனவெறிக் கோட்பாடுகளின் அடிப்படையில் தனித் திராவிட நாடு (தனித் தமிழ் நாடு) வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள். இவிடத்தில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை “தமிழ்ப் பிரிவினைவாதம்” என்பதே கிறுத்துவரால் கிளப்பிவிடப்பட்டு, நாத்திகம் பேசிய திராவிட இனவெறியாளர்களால் அரசியல் காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது, என்பதாகும். சொல்லப்போனால், தமிழகத்தையும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளையும் சேர்த்து மொத்தமாக “தமிழ் கிறுத்துவ தேசம்” அமைக்க வேண்டும் என்பது கிறுத்துவ நிறுவனத்தின் நெடுநாள் குறிக்கோள் ஆகும். இந்த நோக்கத்திற்காகத் தான் ”தமிழ் ஈழம்” கோரிக்கையையும் அந்த கோரிக்கையை வைத்த விடுதலைப் புலிகளையும் கிறுத்துவ நிறுவன்ங்கள் பூரணமாக ஆதரித்து வந்தன. இன்னும் ஆதரித்து வருகின்றன.
தமிழர் திரவிட இனத்தவர் என்னும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு, ”ஆரிய” பிராம்மணர்களை எதிர்த்து இன வெறியும் மொழி வெறியுமாக திராவிட இனவெறியாளர்கள் மேற்கொண்ட பிரசாரம், கிறுத்துவர்களால் முழுவதுமாக ஆதரிக்கப்பட்டு, 1967-ல் காங்கிரஸ் கட்சித் தோற்கடிக்கப்பட்டு திராவிட இனவெறியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறினர். இன்று வரை அவர்களை தேசியக் கட்சிகளால் கீழிறக்க முடியவில்லை. ஆனால் இன்றோ, இவர்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு இத்தாலியப் பெண்மணியின் அதிகாரத்தில் கட்டுப்பட்டு இருக்கிறது. அந்தப் பெண்மணி திராவிட இனவெறியாளரான கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால், மத்தியிலும் மாநிலத்திலுமாக கிறுத்துவ நிறுவனங்கள் சக்தி பெற்று விளங்குகின்றன. எனவே, காலாவதியாகிப்போன ஆரிய-திராவிட இனவெறிக் கோட்பாடுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க எண்ணும் ஒரு கிறுத்துவ ஆராய்ச்சியாளருக்கு விருது வழங்கியதில் வியப்படைய என்ன இருக்கிறது?
ஐராவதம் மகாதேவன் அவர்கள் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியது இது முதல் முறையன்று. அவர், சென்ற ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க ஹார்வார்டு பல்கலையிலிருந்து சமஸ்கிருத “அறிஞர்” மைக்கேல் விட்ஸல் என்கிற ஜெர்மானியரை சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கும், சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும், ரிக் வேதம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றுவதற்காக அழைத்து வந்திருந்தார். ஹிந்து எதிர்ப்புக் கொள்கைகளுக்குப் பெயர்போன மைக்கேல் விட்ஸல் சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் சமஸ்கிருதக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினார்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ்ஹிந்து.காம் இணைய தளம் மைகேல் விட்ஸலுக்கு ஐந்து கேள்விகளை அனுப்பியது. கேள்விகளைப் பெற்றுக்கொண்டு உறுதியும் செய்து அவற்றிற்குப் பதிலளிப்பதாகவும் வாக்களித்த அவர், பலமுறை நினைவூட்டியபோதும் தனக்கு அதிகமாக வேலைகள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இன்று வரை இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்த அவர், மற்ற மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. மீண்டும் பலமுறை தொடர்பு கொண்ட பிறகும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவரால் பதிலளிக்க முடியவில்லையோ என்று தான் தோன்றுகிறது. (Ref: – http://www.tamilhindu.com/2009/07/questions-to-michael-witzel/ ).

அவர் எதற்காக அழைத்து வரப்பட்டார் என்பதும் தெரிவிக்கப்பட்வில்லை. பாரத நாட்டில் இல்லாத சமஸ்கிருத அறிஞர்களா? ஏன், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் இல்லாத வேத விற்பன்னர்களா? அவர்களை விட மைக்கேல் விட்ஸல் ரிக் வேதத்தைப் பற்றி என்ன சொல்லிவிட முடியும்? சரி போகட்டும். ஐராவதம் மகாதேவன் அவர்கள் மைக்கேல் விட்ஸலை சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கும் அழைத்துச் சென்றார். அது ஒரு கிறுத்துவ நிறுவனம். ( http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html )
செட்டிநாட்டைச் சேர்ந்த கொட்டையூர் என்ற ஊரில் ரோஜா முத்தையா என்பவர் பல ஆண்டுகள் பாடுபட்டு பல்லாயிரக்கணக்கான நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் சேகரித்து வைத்திருந்தவர். நாளடைவில் அவற்றைச் சரியாகப் பராமரிக்க இயலாத காரணத்தாலும், நிதி நிலைமை சரியாக இல்லாத காரணத்தாலும், அனைத்து நூல்களையும் அமெரிக்காவின் சிகாகோ பல்கலை நூலகத்திடம் விற்றுவிட்டார். பின்னர் சிகாகோ பல்கலை நூலகம் அவர் பெயரிலேயே ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைத் துவங்கியது. அனைத்துத் துறைகளுக்கான தமிழ் நூல்களைச் சேகரித்து தமிழ் கல்வி பயிலும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது ரோஜா முத்தையா நூலகம். (http://www.visvacomplex.com/RojaMuthiah1.html)
கோவையில் தமிழ் பெயரில் நடத்தப்பட்ட தி.மு.க மாநாடு முடிந்த கையோடு அஸ்கோ பர்போலாவைச் சென்னைக்கு அழைத்து வந்த ஐராவதம் மகாதேவன் அவர்கள், 28 ஜூன் திங்கட்கிழமை அன்று அதே ரோஜா முத்தையா நூலகத்தில் பர்போலாவின் ”சிந்து சமவெளி குறியீடும் காட்டுக் கழுதையும்” என்கிற தலைப்பிலான உரையை ஏற்பாடு செய்திருந்தார். மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த காலஞ்சென்ற திரு.கிஃப்ட் சிரோமணி என்கிற கிறுத்துவப் பேராசிரியரின் முதல் நினைவுச்சொற்பொழிவான அவ்வுரை நிகழ்ச்சியை மெட்ராஸ் கிறுத்துவ கல்லூரியே வழங்கியது. திருமதி.ராணி சிரோமணி தலைமை ஏற்க, மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியின் முதல்வர் அணிந்துரை ஆற்ற, பர்போலா தன்னுடைய ஆராய்ச்சி உரையை நிகழ்த்தி முடித்தார். மைக்கேல் விட்ஸல் வருகையின் போது ஏற்பட்ட அனுபவங்களால், கேள்வி நேரத்தை மிகவும் குறைத்து கேள்வி எண்ணிக்கைகளையும் கட்டுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பிற்கிணங்க, ஐராவதம் மகாதேவன் அவர்கள் செயல்பட்டார். ஆகவே, கேள்விகள் தயார் செய்து வந்திருந்த அறிஞர்கள் சிலர் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
(தொடரும்)

Series Navigation