நினைவுகளின் சுவட்டில் – (50)

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

வெங்கட் சாமிநாதன்


ஓன்றிரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் மாமா, “இனிமே நீ கோல்மூரி போகவேண்டம். சீனு வேலை செய்யற ஆ·பீஸிலே ஒரு டைபிஸ்ட் தேவையாம். உனக்குத் தான் இப்போ டைப் பண்ண வந்துடுத்தே. சீனு உன்னைப் பத்தி சொன்னானாம். கோல்மூரி போய்ட்டு வந்த மாதிரி மத்தியான சாப்டுட்டு நீ சீனு ஆ·பீசுக்கு போகலாம். சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும், பாதி நாள் வேலை பாத்தா போறும். ரொம்ப தூரம் கூட இல்லை. கோல்மூரிக்கு போற பாதி வழிலேயே இருக்கு. நீயும் ஒரு ஆ·பீஸிலே வேலை செய்யக் கத்துக்கலாம். அங்கே உனக்கு சம்பளமும் கிடைக்கும்.” என்றார். எனக்கு சந்தோஷம் தான் முதல் தடவையா சம்பளம் கிடைக்கப் போறதே.

அதுவும் ஒரு கண்ட்ராக்டரின் ஆ·பீஸ் தான். ஒரு வங்காளி தான் கிட்டத்தட்ட பாகவதர் மாதிரி க்ராப். வங்காளிகள் பாணியில் பஞ்சகச்சம். வேஷ்டியின் கொசுவம் நீளமாகத் தொங்கி தரையை வருடிக் கொடுக்கும். அதை அள்ளிச் சுருட்டி தன் பஞ்சாபி குர்தாவின் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்வான். அவன் இஷ்டம் போல் வருவான். வந்ததும் இரு கால்களையும் தூக்கி நாற்காலியில் வைத்து சாய்ந்துகொள்வான். ஏதும் எழுதும்போது மேஜையின் மீது தலை குனிந்திருக்குமே தவிர கால்களை நாற்காலியை விட்டு எடுக்கமாட்டான். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவன் இல்லாத போது அப்படி உட்கார்ந்து பார்க்க முயல்வேன். முடியாது. என் தவிப்பைப் பார்த்து சீனுவுக்கு சிரிப்பு தாங்காது. ஆனால் அந்த வங்காளி என்னிடம் அதிகம் வேலை வாங்கியதும் கிடையாது. தன் அதிகாரத்தைக் காட்டியதும் கிடையாது. சீனுவிடம் வேலையைக் கொடுத்துவிட்டு எனக்கு வேலை கொடுப்பதை சீனுவிடம் விட்டுவிடுவான். சீனுவும் வேலை பழகட்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பான். அனேக நேரம் வங்காளி இல்லாத போது சீனு வுடன் வம்பு பேசியே பொழுது கழிந்து விடும்.

முதல் தடவையாக அந்த ஆ·பீசில் வேலைக்குச் சேர்ந்த பிறகு தான் தூரத்தில் தெரியும் ஒரு சினிமா ஹாலைப் பார்த்தேன். அந்த சினிமா ஹாலின் போஸ்டரில் தான் சுரையா என்ற ஹிந்தி நடிகையின் பெயரும் தெரியவந்தது. இதற்கு முன் மதுரையில் பார்த்த அன்மோல் கடி என்ற படத்தில் அவள் துணை நடிகையாக அறிமுகமாயிருந்தாள். அன்மோல் கடியில் ஹீரோயின் நூர்ஜஹான். அவள் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டாள். இப்போது சுரையா தான் பிரமாதப் பட்டுக்கொண்டிருந்தாள். பாடவும் தெரிந்த கடைசி ஹிந்தி ஹீரோயின். அப்போது தான் தேவ் ஆனந்தும் ஹிந்தி பட உலகில் ஹீரோ வாக அறிமுகமாகிறார்.

இதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது சினிமா பார்த்து அல்ல. ஜெம்ஷெட்பூரில் இருந்த ஆறு மாத காலத்தில் நானோ, மாமாவோ அல்லது யாருமோ ஒரு சினிமா கூட பார்க்கப் போனதில்லை. அவர்களுக்கு அதில் ஏதும் பிடித்தம் இருக்கவில்லை. முன்னர் சினிமா பைத்தியமாக இருந்த எனக்கும் சினிமா பார்க்காத இந்த ஆறுமாத காலம் ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை.

பிஸ்டுபூரில் மாமாவின் வீட்டுக்கு முன் ஒரு திறந்த புல்வெளி. அந்த புல்வெளியைச் சுற்றி நான்கு புறங்களிலும் வீடுகள். ஆனால் வலது புறத் திருப்பத்தின் முனையில் ஒரு பெரிய கட்டடம். அந்தக் கட்டடம் தான் பிஸ்டுபூர் வாசிகளுக்கான ரெக்ரியேஷன் க்ளப். அதில் பில்லியர்ஸ் டேபிள் இருக்கும். டேபிள் டென்னிஸ் ஒரு புறத்தில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஒரு ரீடிங்க் ரூமும் உண்டு. அதில் தினசரி வாரப் பத்திரிகைகள் என நிறைய ஒரு நீண்ட பெரிய மேஜையில் பரவிக்கிடக்கும். அங்கு எனக்கு தமிழ் பத்திரிகைகளும் கிடைத்தன. அங்கு வழக்கமான ஆனந்த விகடன், கல்கி தவிர அமுதசுரபி என்ற பத்திரிகையும் இருந்தது. அமுத சுரபி என்ற தமிழ் பத்திரிகையை நான் அங்கு தான் முதலில் பார்த்தேன். அந்த பத்திரிகை தான் எனக்கு சாண்டில்யன் என்ற தமிழ் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்தது. அப்போது அவர் அதில் ஜீவபூமி (என் ஞாபகம் சரிதானா?) என்ற ஒரு சரித்திர தொடர்கதை எழுதி வந்தார். ராஜஸ்தான அரசர்களைப் பற்றியது. பின்னர் நமக்கு குமுதம் பத்திரிகையில் தெரியவந்த சாண்டில்யனின் எழுத்துச் சிறப்புகள் அற்ற சரித்திரக் கதை அது. இங்கு கிடைத்த அமுதசுரபி அறிமுகம் தான் பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு நான் ஹிராகுட்டுக்குப் போனபோது அங்கும் தொடர்ந்த அமுதசுரபியில் தான் லா.ச.ராமாம்ருதம் எழுத்து எனக்கு அறிமுகம் ஆனதை முக்கியப்படுத்திச் சொல்லவேண்டும். சனி, ஞாயிறு திங்களிலும் மற்ற நாட்கள் மாலையில் எனக்குக் கிடைக்கும் நேரத்தை, வீட்டுக்கு வெகு அருகாமையில் இருந்த அந்த கட்டிட ரீடிங்க் ரூமில் தான் செலவழித்தேன் என்று சொல்லவேண்டும்.

வீட்டுக்கு எதிரான அந்த மைதானம் தான் பிஸ்டுபூரின் பெரியார் திடல். அல்லது தில்லியின் ராம் லீலா மைதான். அல்லது மதுரையின் தமுக்கம் மைதானம். ஒரு நாள் அங்கு அந்த மைதானத்தையே நிறைத்த ஒரு பெரிய கூட்டம். டாடா இரும்பாலைத் தொழிலாளர்களின் கூட்டம். அங்கு அன்று ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஜான். மலையாளி. அவர் தான் அந்த பெரிய தொழிற்சங்கத்தின் செயலாளர். மிக சரளமாக, தெளிவாக ஹிந்தியில் பேசியதாகச் சொன்னார்கள். மாமாவும் இன்னும் அவரது அண்டை விட்டு நண்பர்களும் ஜானின் பேச்சைக் கேட்டுக்கொண்டே தங்களுக்குள்ளும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜானுக்கு தொழிலாளர்களிடையே மாத்திரம் அல்ல, பீஹார் மாநில முதல் மந்திரியும்ம் (அனு கிரஹ நாராயண் சின்ஹா என்று நினைக்கிறேன்) தொழில் மந்திரியும் அவரைப் பொருட்படுத்தும் செல்வாக்கில் இருந்தவர் என்று அவர்கள் பேச்சில் தெரிந்தது.

புதிய இடத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆனதும், அந்த வங்காளி, “உனக்கு சம்பளம் கொடுக்கணுமே, எவ்வளவு வேணும்?” என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை. என்னையும் சீனுவையும் மாறி மாறிப்பார்த்தான். “சரி இப்போ 75 ரூபா கொடுக்கறேன். அப்பறம் உனக்கு நல்ல அனுபவம் வந்த பிறகு கூடக் கொடுக்கறேன். சரியா?” என்றான். எனக்கு அதுவே பெரிய தொகையாகப் பட்டது. பேசாமல் வாங்கிக் கொண்டேன். வீடு திரும்பியதும் மாமாவிடம் பணத்தைக் கொடுத்து இன்று சம்பளம் கிடைத்தது ரூ 75. என்று சொன்னேன். “நீ சம்பாதிச்சது. நீயே வச்சுக்கோ. சந்தோஷம். ஸ்வாமி முன்னாலே வச்சு நமஸ்காரம் பண்ணு. நாளைக்கு அப்பாக்கு 50 ரூபாய் மணி ஆர்டர் பண்ணு. அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார். மணி ஆர்டர் பண்ணத் தெரியுமோ உனக்கு?” என்று கேட்டார். “சீனு பக்கத்திலே இருக்கானே” என்றேன். அப்பாவுக்கு பணமும் அனுப்பி கடிதமும் எழுதினேன். முதல் சம்பளம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சந்தோஷமாக இருக்கும்.

பிஸ்டுபூரிலேயே, டைப் ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் இருந்த திசையில் இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு கோயில், இருந்தது. அதற்குப் போயிருந்தோம். கணேஷ் மந்திர் என்று தான் சொன்ன ஞாபகம். கற்பக்கிரஹம் சின்னது தான். ஆனால் அதற்கு எதிரே இருந்த கூடம் மிகப் பெரியது. மிக அமைதியான, புனிதம் தோற்றும் இடம். வயிற்றுப் பிழைப்புக்காக எந்த பரதேசம் சென்றாலும் அங்கு தமக்கு என ஒரு கோவிலைத் தமிழர் கட்டிக்கொள்வதில் தவறுவதில்லை. அதோடு அந்தக் கோவில் தமிழ் நாட்டை விட புனிதமாகவும் சுத்தமாகவும் இருப்பது ஒரு சிறப்பான அம்சம். எந்த விசேஷம் காரணமாக கோவிலுக்குச் சென்றோம் என்று ஞாபகமில்லை. நான் ஜெம்ஷெட்பூருக்கு வந்த ஒரு வாரம் பத்து நாடகளுக்குள்ளேயே அந்தக் கோவிலுக்குப்போகும் முகாந்திரம் கிடைத்துவிட்டது. வேஷ்டியும் மேலே போர்த்திய துண்டுமாகத்தான் நாங்கள் சென்றோம். மாமா எதைச் செய்தாலும் மிகுந்த சிரத்தையும் ஒழுங்குமாகச் செய்பவர். அர்ச்சனை, பூஜை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, என் பக்கம் திரும்பி, ” உனக்குத் தெரிந்த ஸ்லோகம் ஏதாவது சொல்லேன்” என்றார் மாமா. அப்பா மிக வைதீகர் என்ற காரணத்தால் எனக்கும் அதெல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைத்தார் போலும். அதெல்லாம் நான் படித்ததில்லை. எனக்கு சமஸ்கிருதமும் தெரியாது, அப்பா படிக்கும் க்ரந்த எழுத்தும் தெரியாது. தன் பிள்ளைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று அப்பா விரும்பியதும் கிடையாது. ‘தெரியாது,’ என்று சொல்ல அந்த சூழலில் மிகவும் கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தெரியாது தானே. ‘தெரியாது’ என்று பலஹீனமாகச் சொன்னதும், அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. இப்படி ஒன்றுமே தெரியாத ஒரு பிள்ளைக்கு என்ன என்னதான் சொல்லிக்கொடுத்து கரையேற்றுவது என்று அலுத்துக்கொண்டாரோ என்னவோ.

நான் அங்கிருந்த ஆறு மாதகாலத்தில் நடந்த சில வேடிக்கையான சம்பவங்களைச் சொல்ல வேண்டும். அப்பு மாமவுக்கு இரண்டு தம்பிகள். ஒரு தம்பி, சதாசிவமோ, சாம்பசிவமோ, பம்பாயில் இருப்பவர். கடைசித் தம்பி, குழந்தை என்று தான் கூப்பிடுவார்கள் அவரை, எங்களுக்கு அவர் குழந்தை மாமா. அப்போது உமையாள்புரத்திலோ பாபுராஜபுரத்திலோ கணக்குப் பிள்ளையாகவோ என்னவோ இருந்தார். நல்ல திடகாத்திரமான மனிதர். இடுப்பில் பஞ்சகச்சமும் கட்டுக்குடுமியோடும் தான் காட்சியளிப்பார். அவ்வளவாக வசதியில்லாதவர். ஆனால் அது வெளித்தெரியாது. எப்போதும் தமாஷாகப் பேசிக்கொண்டிருப்பார். அவர் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகத்தான் இருக்கும். அவர் அண்ணாவைப் பார்க்க ஜெம்ஷெபூர் வந்திருந்தார். ஊரிலிருந்து மாமவுக்குக்கொடுக்க நிறைய சாமான்கள் கொண்டு வந்திருந்தார். அதாவது அண்ணா வடக்கே இருந்துகொண்டு வாய்க்கு ருசியாக சாப்பிடமுடியாமல் என்ன கஷ்டப்படுகிறாரோ என்ற நினைப்பில் கொண்டுவந்தது. அது அப்பு மாமாவுக்குப் பிடிக்காத விஷயம். அதோடு குழந்தை மாமா கொண்டுவந்த ஐட்டங்களில் ஒன்று கொல்லையில் இருந்த இரண்டு மூன்று புளிய மரங்களிலிருந்து இறக்கிய புளி. “ஏண்டா இதையெல்லாம் தூக்கிண்டு வந்தே? இங்கே என்ன புளியும் அப்பளமும் கிடைக்காது உனக்கு யாருடா சொன்னா?” என்று கோபித்துக்கொண்டார். அதை குழந்தை மாமா எங்கே காதில் போட்டுக்கொண்டார்? “இதெல்லாம் ஒரு பாரமா? வரப்போ பாக்கறவா எல்லாம் இந்தக் குடுமியைப் பாத்து, “இன்னமுமா குடுமியோட இருக்கேள்? ஆச்சரியா இருக்கே?” ன்னு கேக்காதவா இல்லை. பாக்கறவா எல்லாம் கேக்கறா, பாக்கறப்போல்லாம் கேக்கறா? என்னமாடா இந்தக் குடுமிக்கு ஒரு ஆபத்துமில்லாமே பத்திரமா ஊர் போய்ச் சேரப்போறோம்னு கவலையா இருக்கு எனக்கு?” என்று அவர் பாணியில் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு சொன்னபோது எல்லோரின் சிரிப்பும் அடங்க வெகுநேரமாயிற்று. மாமாவும் தான். அந்தச் சிரிப்பில் அவர் கோபம் எல்லாம் எங்கோ போயிற்று.

ஒரு நாள் ஏதோ பெண்களுக்கான விசேஷ நாள் போலும். பிஸ்டுபூரிலேயே வேறோர் வீட்டில் எல்லா வீட்டுப் பெண்களும் கூடி நடத்தும் பூஜையோ என்னவோ, சரியாக ஞாபகமில்லை. மாமியை அழைத்துப் போக வந்தார்கள். குழந்தையைத் தான் எங்கே விட்டுப் போறதுன்னு தெரியலைன்னு ஒவ்வொர்த்தரும் சொல்ல, “ஏன்? எங்க சாமா இருக்கானே அவர் பாத்துப்பான். என்ன அதிகம் போன இரண்டு மூணு மணிதானே. அதுக்குள்ளே வந்துடுவோமே, அவனுக்கும் குழந்தைகள்னா கொள்ளைப் பிரியம்,” என்று மாமி சொல்லவே, இதைத் தான் எதிர்பார்த்தது போல, அக்கம் பக்கத்திலிருந்த வீட்டு மாமிகள் எல்லாம் ஒவ்வொருவராக தம் குழந்தைகளை என்னிடம் விட்டுச் சென்றார்கள். மாமியிடம் அந்த மாதிரி ஒரு புகழ்மாலை கிடைத்தது சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் விளைவுகள் அவ்வளவு சந்தோஷகரமாக இருக்காது என்பது பின்னர் தெரியவந்தது. நாலைந்து குழந்தைகள். எல்லாம் மூன்று வயது நான்கு வயதுக் குழந்தைகள். கொஞ்ச நேரம் அவற்றோடு விளையாடிக்கொண்டிருந்ததும், அதுகளின் சிரிப்பும் எல்லாம் சுகமாகத்தான் இருந்தது. சுகமான தருணங்களுக்கு எப்போதுமே ஆயுள் கம்மி ஆயிற்றே. ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடித்துவிட்டதோ என்னவோ அது அழ ஆரம்பித்து விட்டது. உடனே அதை சமாதானப்படுத்த கொஞ்ச நேரம் பிடித்தது. அதை சமாதானப் படுத்தும் முயற்சியில் மடியில் வைத்து விளையாடவே இன்னொன்றுக்கு அது பொறுக்காமல் மடியில் இருந்ததை அடிக்க ஆரம்பித்தது. இதற்குள் இன்னொன்று மற்றொன்றை என்னமோ சீண்டி விட அதுவும் அழ ஆரம்பித்தது. இப்படி ஒன்றை சமாதானப் படுத்த இன்னொன்று ஆரம்பிக்க….ஒரு கட்டத்தில் இரண்டு மூன்று அழ, நாலாவது அம்மாவை நினைத்துக்கொள்ள…… இரண்டு மணி நேரம் நான் பட்ட பாடு…. குழந்தைகள்னா சாமாவுக்கு கொள்ளைப் பிரியம் என்று ஏன் பெயர் வாங்கினேன், அதை ஏன் மாமி ஊர் அறிய தண்டோரா போடவேண்டும் என்று நொந்துகொண்டேன். இதன் பிறகு என் வாழ்க்கையிலேயே ஒரு குழந்தைக்கு மேல் baby sitting பொறுப்பு எனக்கு வந்ததில்லை என்பது நிம்மதி அளிக்கும் விஷயம். எல்லா மாமிகளும் திரும்பி வந்த போது, புயல் வீசி ஓய்ந்து அமைதி நிலவிய கட்டம். சில குழந்தைகள் தூங்கி விட்டன. ஒன்று என் மடியில். இன்னும் ஒன்று ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது. “பரவாயில்லையே உங்க சாமா நன்னா பாத்துக்கறானே. இனிமே எங்கியாவது போகணும்னா சாமா கிட்டயே விட்டுட்டுப் போகலாமே, ” என்றாள் ஒரு மாமி.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்