முஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இந்திய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுக்கொரு முறை நடத்தப்படுகிறது. சமூகபொருளாதாரஅம்சங்களானவாழிடம்,வயது,இனம்,கல்வி,மதம்,மொழி,சாதி(எஸ்ஸி.எஸ்டி)அடிப்படைவிவரங்கள் திரட்டப் படுகின்றன.மக்கள் நல்வாழ்வு சார்ந்த திட்டமிடுதலுக்கு இவை மிகவும் அடிப்படையாக தேவைப்படுகின்றன.2011 பிப்ரவரி 9 – 28 காலகட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
சுமார் 2.5 மில்லியன் களப்பணிகணக்கெடுப்பாளர்களின் வழி இந்தியாவில் 6,50,000 கிராமங்கள், 5500 நகரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இவ்விவரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.இக் கணக்கெடுப்பில் சாதிரீதியான விவரங்கள் சேர்க்கப்படவேண்டும் என்ற குரலை அனைத்து அரசியல் கட்சிகளும் பேசுகின்றன.விஹெச்பி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இக்கோரிக்கைக்கு எதிராக உள்ளன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரால் இப்பிரச்சினை தொடர்பான
கேவியேட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மே13 தேதியன்று சாதி அடிப்படையில் கணக்கெடுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும்,இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலருக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.மத்திய அரசு நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் களுக்கு 27.5 சதவிகிதம் கல்வி,வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் உரிய முறையான பிற்படுத்தப்பட்டபிரிவினர்குறித்த புள்ளிவிவர அறிக்கையை கோரி உள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் முறையான சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாதது ஒரு பின்னடைவாகவே இருந்து வந்துள்ளது.

இந்தியாவில்வாழும் தலித்முஸ்லிம்களின் உரிமைகளையும்,குரல்களையும் பதிவு செய்யும் வகையில் இந்தியன் தலித் முஸ்லிம்ஸ் வாய்ஸ்( IDMV) ஜூலை 22 , 2008-ல் உருவாகியுள்ளது. இது ஜனநாயக் ரீதியான ஒரு பரந்துபட்ட விவாததளத்தை முன்னிறுத்துகிறது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று 1950 களில் மறுதலிக்கப்பட்ட உரிமையைமீண்டும்திரும்பப்பெறுதலாகும்.தலித்முஸ்லிம்களையும் பட்டியலில் உள்ள சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் சேர்த்திடவும் இதற்குதடையாக இருக்கிற இந்திய அரசியல் சாசனபிரிவு 341 – ல் திருத்தம் கொண்டுவரவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.இந்திய அரசியல் சாசன பிரிவு 341 முஸ்லிம் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. இந்து சமய அடிப்படையில் பட்டியலில் உள்ள சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு உள்ள இட ஒஅதுக்கீட்டு உரிமையை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமய தலித்களுக்குவழங்க மறுப்பது,சட்டத்தின் முன் அனைவரும் சமமென்கிற அரசியல் சாசனபிரிவு14,சமய அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளை தடை செய்கிற இந்திய அரசியல்சாசன பிரிவு15, எந்த ஒரு சமயத்தை ஏற்றுக் கொள்ளவும் ,செயல்படுவதற்குமான சுதந்திரத்தை தந்துள்ள அரசியல்சாசனபிரிவு 25 ஆகியவற்றிற்கு எதிரானதாக இருப்பதாக அறிவிக்கிறது.
1950களில் அரசியல்சாசன ஆணையில் இடம்பெற்ற முஸ்லிம் அர்சால் அல்லது முஸ்லிம்தலித் பிரிவினர்களை இதில் அடையாளப்படுத்தவும் இவ்வமைப்பு உரிமை கோருகிறது. அந்த வகையில் நட்( Nutt) பக்கோ(Bakkho) பத்தியாரா(Bhatiyara) குஞ்ரா(Kunjra )துனியா(Dhunia) கலால்(Kalal)தப்லி(Dafali) கலால்கார்(Halakhor)டோபி(Dhobi) லால்பெகி(Lalbegi) கோர்கான்(Gorkan) மீர்சிகார்(Meershikar) சீக்(Cheek) ரங்கிர்ஸ்(Rangrz) தர்ஸி(Darji) மோசிஸ்(Mochis) முக்ரிஸ்(Mukris)மற்றும் கருடிஸ்(Garudis) ஆகிய உட்பிரிவுகள் முஸ்லிம்தலித்களின் வரிசைப்பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
இஸ்லாம் சமய அடிப்படையில் இந்துமத வர்ணவகைப்பட்ட சாதீயத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றபோதிலும் சாதீயக் கூறுகளைப் போன்றே சமூகப் படிநிலைகள் இந்திய முஸ்லிம்களிடத்தும் வேரூன்றியுள்ளதை மறுத்துவிடமுடியாது.இந்துக்களால் பாதிப்படையும் தலித்துகளைப்போலசமூகரீதியாகமுஸ்லிம்தலித்களும்பாதிப்படைந்துள்ளார்கள்.பொருளாதாரரீதியாகவும் கல்வியிலும்,கலாச்சார அளவிலும் மிகவும் பலவீனமான நிலையில் முஸ்லிம்கள் உள்ளார்கள்
ஈத் பெருநாளில்கூட பொதுவான முஸ்லிம்கள் தலித்முஸ்லிம்களோடு இணைந்து உணவு உண்ணுவதற்கும் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் வழியற்று ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இந்நிலை தீர்க்கப்படவும், அரசியல்ரீதியான அதிகாரத்தை பெறுவதற்குதலித்மற்றும்இதரபிற்படுத்தபட்டமுஸ்லிம்களின்பிரதிநிதித்துவம்,கமிஷன்கள்,அரசுநிறுவனங்கள்,முஸ்லிம் அமைப்புகளில் வழங்கப்படவேண்டும்.மதசார்பற்ற கட்சிகள் அரசியல்ரீதியாக இந்த முன்னுரிமையை வழங்கவேண்டும்
மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டு கொள்கையில் தலித்முஸ்லிம், மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க தகுந்த சட்டரீதியான உரிமை அளிக்கப்படவும் வேண்டும், தலித்முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதான தவறான விவாதங்களை சரிப்படுத்தவும் வேண்டியுள்ளது.பெரும்பகுதிமுஸ்லிம்கள் சமூக பொருளாதாரம், கல்வி,சுகாதாரம் மற்றும் அரசியல் நிலைகளில் பின் தங்கியுள்ள நிலையில் முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை, சமூகநீதி,ஏற்கெனவே நிலவுகிறது என்பது தவறான வாதமும் அணுகுமுறையுமாகும்.
இது பற்றி சமூகவியலாளர் முகமது ஷஹான் ஷஹா அன்சாரி மேலும் குறிப்பிடும்போது பின் தங்கிய முஸ்லிம்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் வாய்ப்புகளை ஏற்படுத்திதருவதும், முஸ்லிம்பிரிவுகளுக்குள்ளே சாதிக்கலப்பு திருமணங்களை ஊக்குவிப்பதும், ஆணாதிக்க மேலாண்மைக்கு எதிராக இஸ்லாம் கூறும் பெண்ணுக்கான சம் உரிமைகளை நிலைநாட்டுவதும் அவசியமாகும் என்கிறார்.

இவ்விவாதங்களிடையே முஸ்லிம் சமூகங்களின் அறிஞர்கள் வேறுவிதமான கருத்தை முன்வைக்கின்றனர்.சிறுபான்மை முஸ்லிம்களின் முக்கியப் பிரச்சினையாக முஸ்லிம்கள் அனைவரையும் விடுபடாமல் கணக்கெடுப்பில் சேர்க்கவேண்டும் என்பதாகவே உள்ளது.வடமாநிலங்களில் உருது மொழி பேசும் முஸ்லிம்களின் பகுதிகளில் உரிய கணக்கெடுப்பு படிவங்களில் இவ்விவரங்கள் பூர்த்தி செய்யப்படாமல் தனித்தாள்களில் குறிப்பெடுத்துவிட்டு முஸ்லிம்களை சேர்க்காமல் விட்டுவிடுகிறார்கள். எனவே கணக்கெடுப்பு படிவத்தில் கணக்கெடுக்கப்பட்ட குடும்பத்தின் கையெழுத்தோ விரல் அடையாளமோ வாங்கப்படும் விதத்தில் கணக்கெடுப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவரவேண்டுமென்று தெரிவிக்கின்றனர்.

இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன.முந்தைய கணக்கெடுப்பு விவரம் 120 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதாக தெரிவிக்கின்றன.தேசிய அளவிலான ஆங்கிலப் பத்திரிகையாள நிறுவனம் இவ்வெண்ணிக்கையை 140 லிருந்து 200 மில்லியன் எனக் கணக்கிடுகின்றனர். முஸ்லிம் பத்திரிகை நிறுவனங்களோ 220 முதல் 250 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக அறிவிக்கின்றனர்.இத்தகைய முரண்பாடுகளைக் களைவதற்காக முஸ்லிம் கணக்கெடுப்புப் பகுதிகள் அரசியல்காரணங்களால் கணக்கெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இந்தியக் கணக்கெடுப்பில் இந்துக்கள், சீக்கியர்கள்,பெளத்தர்கள் இடையே சாதியப்பிரிவுகள் இருப்பதால் சாதிக்கணக்கெடுப்பு தேவை. ஆனால் முஸ்லிம்களிடையே சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. எனவே முஸ்லிம்சாதிகள் குறித்த கணக்கெடுப்பு தேவையில்லை என்பது போன்ற ஒரு கருத்தியல் தோற்றத்தைமுஸ்லிம்தலைவர்களில் சிலர் உருவாக்க முனைகின்றனர். இது மிகவும் தவறான நிலைபாடாகும்.

தெற்காசியாவில் வாழும் முஸ்லிம்கள் பிற சாதிகளிலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பிறகு அதன் தொடர்ச்சியாக சாதிப்படிநிலைகள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் உருவாகியுள்ளது. பாகிஸ்தானிய முஸ்லிம் அறிஞர் மெளலானா அஷ்ரபலிதான்வி, முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் சாதிப்படிநிலை அமைப்பு நிலவுவதாகவும் நகர்ப்புறப் பகுதிகளைவிட கிராமப்புற பகுதிகளில் திருமணத்தின்போது இப்பிரச்சினைப்பாடு முக்கியமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.

மஹாராஷ்டிரா மாநிலம்ஜல்னாவைச் சார்ந்த முகமது ஷப்பிர் அன்சாரி இந்திய முஸ்லிம்கள் சாதியின் பிடிமானத்திலிருந்து விடுபடமுடியவில்லை என்பதையும் அஷ்ரப் எனப்படும் உயர்சாதி முஸ்லிம் குழுவின் ஆதிக்கங்களுக்கு எதிராக அஜ்லப் எனப்படும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் போராட்டம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. என்கிறார். அகில இந்திய முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அமைப்பின்மூலமாக தொடர்ந்து இயக்கங்களை நடத்திவருகிறார்.

முஸ்லிம்களிடையே சாதிப்பிரிவுகள் நிலவுவதை வெளிப்படுத்தும் போது ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பும் இதர முஸ்லிம் இயக்கங்களும் கருத்தியல்ரீதியான தாக்குதலை செய்கின்றன. காலங்காலமாக சாதிப்படிநிலை இருப்பதையும் முஸ்லிம் கல்வியாளர்களே சாதியத்திற்கு ஆளாகி உள்ளதையும் இவர்கள் தவறி விடுகிறார்கள்
தனது அனுபவத்தில் நிகழ்ந்த சம்பவமாக தனது இரண்டாவது மகளின் திருமண ஏற்பாட்டிலிருந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த செய்யது குடும்பத்தினர் விலகியதற்கு காரணம் தான் ஜுலாஹா எனும் நெசவாளர் பிரிவைச்சார்ந்தவர்கள் என்பதே ஆகும் என அவர் குறிப்பிடுகிறார்

2008 ல் லக்னோவைச் சேர்ந்த சமூகவியலாளர் மசூத் ஆலம்பலாஹி முஸ்லிம்களும் இந்திய சாதீயமும் ஆய்வில் மார்க்க அறிஞர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே சாதிப்படிநிலை உருவான வரலாற்றை சுட்டிக் காட்டுகிறார். 13 ம் நூற்றாண்டில் டில்லி சுல்தானிய அரசாட்சியின் தோற்றத்திற்கு காரணமான குதுபுதீன் ஐபெக் ஆட்சிகாலத்து மதவியல் அறிஞர்கள் முஸ்லிம்களை அஷ்ரபுகள், அஜ்லபுகள் என இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தினர்.

செய்யதுகள்,ஷேக்குகள்,முகலாயர்கள், பதான்ஸ்கள்
ஆகியோர்கள் அஷ்ரபுகளாக அழைக்கப்பட்டனர். குரைஷி(கசாப்பு தொழில்) ஜுலாஹா(நெசவாளர்) தர்ஸி(தையலர்)
உள்ளிட்ட பிரிவினர் அஜ்லபுகளாக குறிக்கப்பட்டனர். டோபி(வண்ணார்)
நயீஸ்(நாவிதர்)மோஸி(செருப்புதைப்பவர்)லால்பெகிஸ்(துப்புரவுதொழிலாளர்)
உள்ளிட்ட மிகவும் அடித்தள் ஒடுக்கப்பட்ட பிரிவினர் அர்சால்களாகினர். இப்பிரிவினையை இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மெளலானா அஷ்ரப் அலி தான்வி உறுதிப்படுத்தி செய்யதுகளின் மேலாண்மையை ஏற்றுக் கொள்கிறார்.
நீ செய்யது ஆக இருக்கிறாய்
மிர்சாவாக ஆப்கானாக இருக்கிறாய்
நீ எல்லாமுமாக இருக்கிறாய் ஆனால் முஸ்லிம்

என புகழ்பெற்ற கவியான அல்லாமா இக்பாலின் கவிதைவரிகளும் இந்த வகை சாதியப் பிரிவின் நினைவுத் தடமாகவே வெளிப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏறத்தாழ 24 மில்லியன் கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பழங்குடி மக்களாக உள்ளனர்.கிறிஸ்தவப் பழங்குடிகளாக மதம் மாறிய இம்மக்கள் ஏற்கெனவே பழங்குடி மக்கள் பெறுகின்ற கல்வி,வேலைவாய்ப்பு உரிமைகளிலிருந்து புறந்தள்ளப்பட்டிருக்க்றார்கள். தற்போதைய கணக்கெடுப்புப்பிலும் பழங்குடியினர் பட்டியலில் கிறிஸ்தவப் பழங்குடிகள் செர்க்கப்படவில்லை என்பதும் கவனத்திற்கொள்ளவேண்டிய பிரச்சினையாகவே உள்ளது.

.

1931 ல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆணையர் ஹூட்டன் தனது பதிவில் சாதியை உண்மையாக மக்களிடமிருந்து தெரிந்து கொள்வதில் ஏற்படும் இடர்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.அப்போதைய கண்க்கெடுப்பில் தென்பட்ட கருத்தாக்கம் சமஸ்கிருதமயமாக்கம்/உயர்சாதிமயமாக்கம் என்பதாக இருந்தது.
அடித்தளசாதியைச் சார்ந்த ஒருவர் தன்னை உயர்சாதியாக காண்பித்துக் கொள்வது. ஆனால் தற்போதைய சூழலிலோ சமஸ்கிருதமய நீக்கம்/உயர்சாதிமயநீக்கம் (டெ சன்ச்க்ரிச்டிசடிஒன்) என்பதான கருத்தியல் செயல்பாடு நிகழ்கிறது.மண்டல்கமிஷனின் அமுலாக்கத்திற்குப் பிறகு இது தீவிரமாகியுள்ளது.

முஸ்லிம்களை மதம் என்ற ஒற்றை அடையாளத்தில் குறிக்கப்படமுடியாது. இந்தியச் சூழல்களில் முஸ்லிம்கள் அஷ்ரப்,அஜ்லப்,அர்சால் பிரிவுகளில் உள்ள உட்சாதிப் பிரிவுகளின் அடையாளங்களும் கணக்கில் கொள்ளப் படவேண்டும்.

வட இந்தியாவில் அர்சால்முஸ்லிம்கள் 35 சதவிகிதமும் அஜ்லபுகள் 65 சதவிகிதமும் அஷ்ரபுகள் ஐந்து சதவிகிதமும் உள்ளனர். அஜ்லப்களில் த்ர்ஸி,ஹுலாஹி,பக்கீர்,குஞ்சரா,ஹஜ்ஜம்,டோபி,பர்ஹி பாதியா,ரங்ரெஸ் உல்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.அர்சால் முஸ்லிம்களில் ஹலால்கார்,பனார்,ஹிஜ்ரா,கஸ்பி,லால்பெகி,மெஹ்தார்,மெளக்தா உள்ளிட்ட அடித்தள தொழில் செய்யும் முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்திய அரசியல்சாசனம் 15(4) மற்றும் 16(4) படியும் பிரிவு ஏழின்படியும் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்கீழ் வெளியுடப்பட்ட நான்குசதவிகித இட ஒதுக்கீட்டு ஆணையில் ஆந்திரபிரதேச ஆளுநர் மாநிலத்தில் வசிக்கும் கூட்குலா,லட்டாப்,பிஞ்சாரி,நூர்பாஷ்,மற்றும் மெஹ்தார் தவிர்த்த முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் ஏ,பி,சி,டி க்கு அடுது இ பிரிவில் சேர்த்திருந்தார். இதில் மொத்தம் 15 வகைப்பட்ட முஸ்லிம் பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

அச்சுகாட்டல்வான்டுலு,அத்தர்சைபுலு,முஸ்லிம்டோபி,பக்கிர்,கரேடிமுஸ்லிம்,கோசாங்கிமுஸ்லிம்,குட்டிஎளகுவாலு,ஹஜம்,லெப்பை,போர்வாலே,குறைஷி,செய்க்,சித்தி,துரகாகஷா,உள்ளிட்ட முஸ்லிம் பிரிவுகள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த்யன. இதில் இதர முஸ்லிம் பிரிவுகலான செய்யது,மொகல்,பதாந்ச்,இரானி,அரபு,போரா,ஷியாஇமாமி இஸ்மாயிலி,கட்சிமாமூன்,ஜமாயத்,நவாயத் மற்றும் இவை சார்ந்த முஸ்லிம் உட்பிரிவினர்களும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இடம்பெறாத முஸ்லிம் குழுக்களாகும்.

மேற்குவங்க அரசும் ரங்கநாத்மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் பத்து சதவிகித இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அறிவித்துள்ளது.நந்திகிராமத்தில் முஸ்லிம்கள்மீதான இடதுசாரி அரசு நடத்தியநிலப்பறிப்புவன்முறைக்கும் முஸ்லிம்களின்மீதான தாக்குதல்களுக்கும் மாற்று சமரசமுயற்சியாக இந்த இட ஒதுகீட்டை மதிப்பீடு செய்யவும் படுகிறது.

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்குவங்க மாநில மொத்த மக்கள்தொகையில் 25.25 சதவிகிதத்தின்ர் முஸ்லிம்களாக உள்ளனர்.இந் நிலையில் இந்த பத்துசதவிகித இடஒதுக்கீடு போதாது இருபதுசதவிகித இடஒதுக்கீடு தேவை என ஜமாஅத் உலமா இ ஹிந்த்,அகில இந்திய மில்லி கவுன்சில் மொஜாதிதியா நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் கோருகின்றன.
தற்போது மேற்குவங்க அரசு இந்த பத்துசதவிகித ஒதுக்கீட்டை 12 முஸ்லிம்சாதி உட்பிரிவுகளுக்கு வழங்கியுள்ளது. ஏறத்தாள 16.83 லட்சம் முஸ்லிம்கள் இப்பிரிவுகளில் வருகிறார்கள். எனினும் 37 முஸ்லிம் உட்பிரிவுகள் உள்ளதாக அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.
மேற்குவங்க அரசின் முஸ்லிம் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் பிஸ்தி(தண்ணீர் சுமப்பவர்) சாமர்(தோல்தொழிலாளி)சித்திரக்கார்(பெயின்டர்) தப்லி(டிரம்செய்பவர்) ஜமதார்(துப்புரவாளர்)மல(படகோட்டி)மெதார்(துப்புரவுதொழிலாளி)நிகரி(மீன் விற்பனையாளர்) ஹஜ்ஜம்(நாவிதர்)ஜுலாஹா(நெசவாளர்)உள்ளிட்ட தொழில் பிரிவினர் இடம் பெறுகின்றனர்.

தமிழகஅரசுஆணையின்படிலெப்பை,தக்கினிமுஸ்லிம்,மரைக்காயர்,ராவுத்தர்,மாப்பிள்ளை,பட்டாணி,காக்கா,சேட்,சையது,ஷேக்,பீர்,தாவூத்,அன்சாரி,நவாப் உள்ளிட்ட முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து வருகிரார்கள். இவர்களுக்கு தனி இட ஒதுக்கீடாக 3.5 சதவிகிதம் நடைமுறையில் இருந்து வருகிறது.

முஸ்லிம்களில் ஷியா,ஸுன்னி,ஸுன்னிகளுக்குள்ளேயே வகாபிகள்,தர்காமுஸ்லிம், சுன்னத்துல்ஜமாஅத்தினர்,தப்லீகினர் தவிர்த்து அகமதியாகள் எனும் காதியானிகள், அஹ்லேகுரானிகள் உள்ளிட்ட சில பிரிவினர்களும் உள்ளனர்.
அண்மையில் சென்னையில் முஸ்லிம் மையவாடியில் புதைக்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண்ணின் மய்யித்து(பிணம்) சில முஸ்லிம் அடிப்படைவாதிகளால் தோண்டி எடுக்கப்பட்டு வேறிடத்தில் கொண்டுபோய் புதைக்குமாறு வன்முறை செய்தார்கள்.இதற்கு காரணம் அந்த முஸ்லிம் பெண் காதியானி(அகமதியா) பிரிவைச் சார்ந்தவர் என்பதாகும்.

இதுபோல் மற்றுமொரு சம்பவமும் நடந்துள்ளது. எகிப்திய அறிஞர் கலிபாரஷாதியைப் பின்பற்றும் அஹ்லேகுரானி(குரான்மட்டும் போதும் எனும் பிரிவினர்) தூயவடிவில் குரானைத்தருகிறோம் என இருவசனங்கள் தணிக்கை செய்யப்பட்ட தமிழ்குரானை வெளியிடுவதாக அறிவிப்பு செய்திருந்தனர்.அதிலும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காவல்துறை துணையோடு அந்நிகழ்ச்சியை நடைபெறவிடாமல் தடுத்தனர்.காதியானிகளும், அஹ்லேகுரானிகளும் தங்களை முஸ்லிம்கள் என்றே கூறுகின்றனர். இந்நிலையில்தர்காமுஸ்லிம், வகாபி,ஷியா ஸுன்னி,ஷாபி,ஹனபி,மாலிகி,ஹம்பலி,அகமதியா(காதியானி)அஹ்லேகுரானி என்பதான பல கொள்கை உட்பிரிவுகளும் இருப்பதால்தமிழ்சூழலில் முஸ்லிம்களின் தொழில் சாதி, கொள்கை உட்பிரிவு சார்ந்து கணக்கெடுப்பு நடத்துவதும் அவசியமாக இருக்கிறது.

மேலும் தமிழகத்திலும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டபிரிவினர்,மிகவும் பிற்படுத்தப்பட்டவர், முஸ்லிம்தலித்துகள் எனவும் அடையாளம் காணவேண்டிய அவசியம் இருக்கிறது.சச்சார் அறிக்கையின் பின்னணியிலும்,ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் இவர்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தலித்களிலிருந்து இஸ்லாத்திற்கு வந்த நவமுஸ்லிம்கள், (தலித்முஸ்லிம்கள்) முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே ஒசா எனப்படும் நாவிதர்களாகவும்,இதரர்களாகவும் இருக்கும் முஸ்லிம்தலித்கள்,நெசவோடும்,சாயப்பட்டறை தோல்தொழில், கைவினைத்தொழிலோடு தொடர்புடைய லெப்பைகளான மிகவும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்,மரைக்காயர்கள்,ராவுத்தர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்புமுஸ்லிம்கள் என ,சாதி ,தொழில்,சமூக, பொருளாதார வாழ்நிலை சார்ந்து மதிப்பீடு செய்வதற்கு அடிப்படைத்தரவுகளாக முஸ்லிம்பிரிவு,தொழில் , சாதி, சாதிஉட்பிரிவு சார்ந்த முஸ்லிம்கள் குறித்த கணக்கெடுப்பு மிகவும் முக்கியத் தேவையாக உள்ளது.
நன்றி
உன்னதம் ஜூன் 2010

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்