நினைவுகளின் சுவட்டில் -(48)

This entry is part 37 of 38 in the series 20100523_Issue

வெங்கட் சாமிநாதன்


காலையில் எழுந்ததும் முதல் வேளையாக, “இங்கே டைப் ரைட்டிங் ஷார்ட் ஹாண்ட் இன்ஸ்டிட்யூட் இருக்கு. பக்கத்திலே தான். நடந்தே போயிடலாம். அது கத்துக்கணும் நீ. கத்துண்டா தான் எங்கேயும் வேலை கிடைக்கும். அதை நடத்தறவர் எனக்குத் தெரிஞ்சவர் தான். அவருக்கு எப்படி சௌகரியம்னு தெரியாது. போய் கேட்கலாம். காலம்பறவும் சாயந்திரமும் ஒரொரு மணி நேரம்னு வச்சுக்கலாம். போய்ப் பார்ப்போம் அவரை. சேத்துப்பார்னா இன்னிக்கே உன்னைச் சேர்த்துடறேன். சேத்துட்டு நான் அப்பறமா நான் ஆ·பீஸ¤க்குப் போறேன்,” என்றார். பின் இரண்டு நிமிஷம் கழித்து, “இல்லே ரெண்டு நாள் ரயில்லே வந்திருக்கே. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டுட்டு அப்புறமா போகலாமா?” என்று கேட்டார். “நான் இன்னிக்கே போகலாம். அப்படி ஒண்ணும் களைப்பா இல்லே” என்றேன். “சபாஷ், அப்படித்தான் இருக்கணும்” என்றார் சந்தோஷமாக.

பின் என்ன? சேர்ந்தாயிற்று. மாடியில் தான் இன்ஸ்டிட்யூட்டும் அவர் வீடும். ஐந்தாறு மெஷின்கள். முன்னால் உட்கார்ந்து டைப் செய்துகொண்டிருந்த நாலைந்து பேர். ஷார்ட் ஹாண்ட் படிக்கும் இன்னுமொரு நாலைந்து பேர். “இவன் தான் என் மருமான். ஊரிலேர்ந்து வந்திருக்கான். இவனையும் கவனிச்சுக்குங்கோ. கொஞ்சம் சங்கோஜப் பேர்வழி.” என்று மாமா சொல்ல, அதற்கு, “அதுக்கென்ன நாளானா சரியாப் போயிடும் இப்பத்தானே ஊர் விட்டு வந்திருக்கான். தூர தேசம். பாஷை புதுசு. நாமளும் அப்படித்தானே இருந்தோம்.” என்றார் அவர்.

காலையில் ஒரு மணிநேரம் டைப் ரைட்டிங் என்றும் சாயந்திரம் ஏழு மணிக்கு மேல் ஷார்ட் ஹாண்ட் சொல்லிக்கலாம் என்றும் சொன்னார். ஒரு மெஷின் காலியானதும் என்னை உட்கார வைத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். “சரி பாத்துக்குங்கோ. நான் வரேன். ஆ·பீஸ¤க்குப் போகணும்” என்று மாமா கிளம்பிவிட்டார்.

அவர் சொல்லிக்கொடுத்தபடி a s d f என்று அடிக்க ஆரம்பித்தேன். என் பக்கத்திலிருந்து வந்த சப்தத்தைக் கேட்டு, பக்கத்திலிருந்த மற்றவர்கள் என் பக்கம் பார்க்கவே, “ரொம்ப ஓங்கி அடிக்காதே. மெதுவா அடி. முதல்லே அப்படித்தான் இருக்கும். ஆனால் இப்பவே கவனமா இருந்தா தானே சரியாயிடும்.” என்றார். எல்லாரும் அவருக்கு சின்ன பசங்கள். கண்டிப்பு, அன்பு, அக்கரை எல்லாம் கலந்திருந்தது அவரிடம். புதிதாக ஏதோ கற்றுக்கொள்கிறோம் என்ற சுவாரஸ்யம். புது அனுபவமாகவும் இருந்தது.

ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. நான் டைப் செய்ததைப் பார்த்தார். “பரவாயில்லை. நாளைக்குப் பார். சரியாயிடும்.” என்று ஆதரவாகச் சொல்லி, சாயந்திரம் ஏழு மணிக்கு வரியா, இல்லே மாத்தணுமா? என்று கேட்டார். “ஏழு மணிக்கே வரேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

சாயந்திரம் போனேன். பிட்மன் ஷார்ட் ஹாண்ட் புஸ்தகம் ஒண்ணு வாங்கிகோ என்ன? என்று சொல்லி ஆரம்பித்தார் இதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. இரண்டிலும் என்ன எனக்கு நிம்மதி அளித்தது என்ன என்றால், எதையும் திரும்பத் திரும்பப் படித்து உருப்போட்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு மணி நேரம் எழுதுவதோ, டைப் செய்வதோ அத்தோடு சரி. பின் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். மற்ற பள்ளிப் பாடங்கள் போல அது நாள் முழுதும் துரத்துவதில்லை.

சாயந்திரம் வீடு திரும்பியதும், மாமா கேட்டார். “எப்படி இருந்தது சாமா? கஷ்டமா இருக்கா?” என்று. “இல்லை எனக்கு சுவாரஸ்யமாத்தான் இருக்கு. இதெல்லாம் எனக்கு புதுசு இல்லியா? அப்புறம் வேலைக்குப் போகணும்னா இதெல்லாம் தெரிந்து தானே ஆகணும்? என்றேன். மறுபடியும் ஒரு “சபாஷ்” கிடைத்தது. “சாப்பிட வரலாம் என்றாள் மாமி. “இன்னிக்கு ரொட்டிடாப்பா. இனிமே ராத்திரி ஒரு வேளை ரொட்டி சாப்பிட பழகிக்கோ என்ன?” என்றாள் மாமி. சுடச் சுட ரொட்டியும் சப்ஜியும் ருசியாகத் தான் இருந்தது. இலேசாக குளிர் ஆரம்பித்துவிட்ட பருவம் அது.

சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, மாமா சொன்னார். “நாளைக்கு ஒண்ணு செய். காலம்பற இன்ஸ்டிட்யூட்டிலேருந்து திரும்பி வந்ததும் சாப்பிடு. சாப்பிட்டுட்டு வெளீலே வா. என். ரோடு முனையிலேர்ந்து வலது பக்கம் நேரே இன்ஸ்டிட்யூட்டுக்குப் போறே இல்லையா? அப்படிக்கில்லாம இப்போ இடது பக்கம் திரும்பி நேரா வா. ஒரு மைல் நடந்தேன்னு வச்சுக்கோ. இடது பக்கம் டவுன் அட்மினிஸ்டிரேஷன் ஆ·பீஸ்-னு போர்டு போட்டிருக்கும். அங்கே வந்து என் பேரைச் சொல்லிக் கேட்டு என் ரூமுக்கு வா. என்ன வரயா?. இனிமே தினம் அங்கே ஒரு மணி நேரம் என்ன தான் நடக்கறதுன்னு பார். என்னமோ ஆ·பீஸ்ங்கராளே, மாமாவும் இன்னம் மத்தவாளும் என்னதான் பண்றான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? நீயும் அதைத் தானே பண்ணப் போறே? என்ன வரயா, இல்லே சிரமமா இருக்கா? படுத்துத் தூங்கணுமா?” என்றார் சிரித்துக்கொண்டே. “வரேன்,” என்று நானும் சிரித்துக்கொண்டே சொன்னேன்.

மறு நாள், இன்ஸ்ட்டியூட்டிற்குப் போய் வந்ததும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன் புதிய ஊரில் நடந்து புதிய இடங்களைப் பார்ப்பது சுகமாகத்தானே இருக்கும். அதுவும் தினம் 11 மைல் பள்ளிக்கு நடந்து போய்வந்தவனுக்கு ஒரு மைல் தூரம் பெரிய விஷயம் இல்லை. டவுன் அட்மினிஸ்டிரேஷன் அலுவலகக் கட்டிடமும் வந்தது. கேட்டுக்கொண்டு மாமாவின் அறைக்குச் சென்றேன். அறைச் சுவரில் தொங்கிய போர்டைப் பார்த்ததும் அவர் தான் அட்மினிஸ்டிரேடிவ் ஆ·பீஸர் என்று தெரிந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். உள்ளே மாமா யாரோடோ பேசிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்ததும், மாமா என்னைக் காட்டி ‘இது என் மருமான் ஊரிலிருந்து வேலை தேடி வந்திருக்கிறான்.” என்று சொன்னார். பேசிக்கொண்டிருந்தவர் எழுந்து நின்று கைநீட்டி ‘welcome, happy to meet you” என்று வரவேற்றார். நானும் அவருடைய நீட்டிய கையுடன் கைகுலுக்கினேன், புன்னகையுடன். “உட்கார்’ என்று சொல்லி அவருடன் பேசி முடித்துவிட்டு என் பக்கம் திரும்பினார். “குட், சரியா வந்துட்டயே. பாத்தியா, நீ சின்ன பையன்னும் பார்க்காமே உனக்காக எழுந்து நின்று, ‘welcome’ சொன்னாரில்லையா? அது போல நீயும் இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே எழுந்து நின்னு மரியாதை கொடுக்கணும், புரிஞ்சுதா? எழுந்து நின்னு கைகொடுத்தா மட்டும் போறாது. thank you-ன்னாவது ஒரு வார்த்தை சொல்லணும்” என்றார். பின் இரண்டு பேரை மணி அடித்து வரவழைத்தார். ஒருவர் வந்தார். தமிழர். நல்ல சிகப்பு பாரி உடம்பு. நெற்றியில் சந்தனம்.”இவர் தான் டைப் செக்ஷன் இன்சார்ஜ்” என்று அறிமுகப்படுத்தி வைத்தார். சொன்னார், “இவன் என் மருமான். ஊரிலேருந்து வேலை வேணும்னு வந்திருக்கான். கொஞ்ச நாளைக்கு உங்க கிட்டே இருக்கட்டும். டைப் ரைட்டிங்குக்கு நேத்திலேருந்து போறான். சும்மா ஆ·பீஸ்னா என்னன்னு தெரியட்டும்னு கூப்பிட்டேன். உங்க ரூம்லே ஒரு சேரைப் போட்டு உக்காத்தி வையுங்கோ. பார்த்துப் பழகிக்கட்டும். ஏதாவது கேட்டான்னா என்னன்னு சொல்லுங்கோ.” என்றார். அதே போல இன்னொருவரையும் அறிமுகப்படுத்தினார். அவர் தமிழரில்லை. “இங்கே ஒரு மணி நேரம், டைப் செக்ஷன்லே ஒரு மணி நேரம் சும்மா உக்காந்து போய் பார், ஏதாவது கேக்கணும்னு தோணித்துன்னா கேள்.” என்று சொல்லி அனுப்பினார்.
மாமா அவர் வகையில் எனக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார் என்று பின்னால் அது பற்றி நினைப்பு வரும்போது தோன்றிற்று. இரண்டாம் நாளோ என்னவோ, ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு, திடீரென, நீ கொஞ்சம் ‘புக் கீப்பிங்க்’ என்னன்னு தெரிஞ்சிண்டா நன்னாருக்கும். எங்கியாவது அக்கௌண்ட்ஸிலே தான் வேலை இருக்குன்னு வச்சுக்கோ, நீ அதுக்குப் போகலாமில்லியா?” என்று எனக்கு அவரே அந்த பாடமும் ஆரம்பித்தார். அது கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடந்தது. எப்படி ஒவ்வொரு வரவும் செலவும் எந்தெந்தக் கணக்கில் சேர்ப்பது, எப்படி வெவ்வேறு கணக்குகளை ஆரம்பிப்பது, என்று பின்னால் கடைசியில் ‘பாலன்ஸ்ஷீட்’ எப்படி போடுவது என்பது வரை சொல்லிக்கொடுத்து விட்டார். நிறைய அக்கறை மாத்திரமல்ல, பொறுமையும் கொண்டவர் என்று தெரிந்தது. எனக்கு மிகக் கஷ்டமாக இருந்தது இந்த மாமாவின் இந்த ‘புக் கீப்பிங்க் க்ளாஸ்’கள் தான். புரிந்து கொள்ளவும் வேண்டும், அவரிடம் திட்டும் வாங்கக் கூடாது என்றால் கஷ்டமாகத்தான் இருந்தது. இதை எனக்கு சாத்தியமாக்கிக் கொடுத்தது அவர் பொறுமை. கடுமை காட்டாமல் கண்டிப்புடன் இருப்பது அவருக்கு இயல்பாகக் கைவந்த ஒன்று எனத் தோன்றியது.

அவர் வீட்டில் வரவேற்பு அறையில் அந்தக் கால ரேடியோ பெட்டி ஒன்று இருந்தது. மேலே சுவற்றில் ஒரு திகம்பர ஸ்வாமிகளின் பெரிய படம் ஒன்று. அது யாரென்று இப்போது நினைவில் இல்லை. அடுத்து மகாத்மா, பின் கஸ்தூர்பா இருவரின் முகச் சித்திரங்கள், பென்ஸிலால் வரையப்பட்டவை கண்ணாடி போட்டு சட்டமிட்டு மாட்டப் பட்டிருந்தன. வந்த ஒரு சில தினங்களில், ஒரு நாள் அதைப் பார்த்துக்கொண்டிருந்த போது, “என்ன பாக்கறே, நன்னா இருக்கா? நான் தான் வரைஞ்சேன்.” என்றார் சிரித்துக்கொண்டே. பின் தொடர்ந்து, “நீ வரைவியோ? ” என்றும் கேட்டார். “எனக்கா வரையத் தெரியாது. ஆனால் ஒரு படத்தைப் பார்த்து சுமாரா காபி பண்ணிடுவேன்” என்றேன். மறு நாள் அவர் மாலை வீடு வந்த போது, அவரிடம் நான் காபி செய்திருந்த சுபாஷ் போஸ் படத்தைக் காண்பித்தேன். பெரிய அளவில் அல்ல. சிறிதாக, ஒரு சின்ன நோட்புக்கில் வரையக்கூடிய அளவில். 3″ x 4″ அளவில். “அட, பரவாயில்லையே!” என்று சந்தோஷமும் ஆச்சரியமுமாக பார்த்து, பின் அது கார்பன் வைத்து காபி செய்ததா? என்று கேட்டார். நான் காபி செய்த ஒரு புத்தகத்தில் இருந்த படத்தைக் காண்பித்தேன். இரண்டும் வேறு வேறு அளவில் இருந்ததைப் பார்த்து, “இரு இன்னிக்கு ராத்திரி உனக்கு அளவு எடுத்து காபி பண்ணக் கத்துக்கொடுக்கறேன்.” என்றார். அன்று இரவு சாப்பாடு எல்லாம் ஆன பிறகு, ஒரு டிராயிங்க் பேப்பர் எடுத்துக்கொண்டு வந்து காபி செய்ய ஒரு பத்திரிகையில் வந்த ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு அவர் பையன் சதாசிவத்தின் காம்ப்ஸ், ஸ்கேல் எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார். “இதோ பார், இப்படி அளவெடுக்கணும்” என்று அளவெடுத்து அதை காபி செய்யப் போகும் பேப்பருக்குத் தகுந்தவாறு எப்படி பெரிதாக்கிக்கொளவது என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்து விட்டார். அளவெடுத்து பென்சிலால் புள்ளி வைத்துக்கொண்டு பின் ‘அவுட் லைன்’ ஒன்று வரைந்து கொள்ளவேண்டும் என்று படிப் படியாக சொல்லிக்கொடுக்க நானும் செய்து கொண்டு வந்தேன். ஆனால் இந்த அளவெடுப்பதெல்லாம் எனக்கு போர் அடித்தது. ஆனால் அதை அவரிடம் சொல்லவோ காட்டிக்கொள்ளவோ இல்லை. இவ்வளவு சிரத்தையும் அக்கறையும் கொண்டவரிடம் எப்படிச் சொல்வது? மறு நாள் சனிக்கிழமையோ ஞாயிற்றுக் கிழமையோ, அவருக்கும் சரி, எனக்கும் நாள் பூராவும் விடுமுறை. காலை ஆகாரம் ஆனதும், “வா, போகலாம். ஆர்ட் ஸ்கூல் ஒண்ணு இங்கே இருக்கு. நீ வரைஞ்சயே, அதை எடுத்துக்கோ” என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.

வெங்கட் சாமிநாதன்/6.11.09

Series Navigation<< முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships)விநோதநாம வியாசம் >>

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்