நினைவுகளின் தடத்தில் – (46)

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

வெங்கட் சாமிநாதன்



வரும் ஒரு புகைவண்டியின் விசில் சப்தம் கேட்டது. தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் தூரத்தில் புகைவண்டியும் தெரியத் தொடங்கியது. பட்டணம் போகும் வண்டிதான். நான் சண்முகத்தைப் பார்த்தேன். சண்முகம் ஒரு புன்னகையோடு, “கூற்றுவனின் கூக்குரல்” என்றான். இருவரும் அப்பா சாமான்களோடு நின்றிருக்கும் இடத்திற்குச் சென்று பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டோம். அன்றைய சந்திப்பில், அப்போது இது தான் அனேகமாக கடைசி சந்திப்பும் என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திப்பில் என்ன பேசினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. “கூற்றுவனின் கூக்குரல்” என்று வரும் புகைவண்டியின் விசிலைக் குறித்து சண்முகம் சொன்னது தான் நினைவில் இருக்கிறது.

இருண்டு வரும் நேரம். நிற்கும் புகைவண்டியில் எந்தப் பெட்டியிலும் இடமிருக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் ரிசர்வேஷன் என்றெல்லாம் ஒன்றும் இருந்ததில்லை. நாளை காலை விடிந்த பிறகு தான் மதராஸ் போய்ச் சேர்வோம். அது எனக்கு முதல் இரவு நேரப் பிரயாணம். இருவருமே உட்கார்ந்து கொண்டே தூங்கியிருப்போம். கொடை ரோடிலிருந்து கும்பகோணம் வரை பகல் நேரங்களில் ஒன்றிரண்டு முறை அதற்கு முன் பிரயாணம் செய்திருக்கிறேன். சுமார் எட்டு மணி நேரம் ஜன்னல் வெளியே பார்த்துக்கொண்டே பொழுது போகும் மிக ஆச்சரியத்துடனும், சுவாரஸ்யத்துடனும். அவையெல்லாம் என் நினைவில் நன்கு பதிந்திருக்கின்றன. ஆனால் இந்த இரவுப் பயணம் பற்றி எந்த நினைவும் இல்லை. கும்பகோணம் ரயில் நிலயத்தில் சண்முகத்தோடு நின்று கொண்டிருந்ததும், பின் மறு நாள் காலையில் சென்னை பார்க் ஸ்டேஷனிலிருந்து பெட்டியைத் தூக்கிகொண்டு அப்பாவோடு எதிரில் இருக்கும் செண்டிரல் ஸ்டேஷனுக்கு நடந்து கொண்டிருந்ததும் தான் ஞாபகத்தில் இருக்கின்றன. கும்ப கோணத்திலிருந்து புறப்பட்ட ரயில் எழும்பூர் சென்று நின்றுவிடும். அதன் பின் மின்சார வண்டியில் ஏறித் தான் பார்க் ஸ்டேஷனை வந்தடையமுடியும். அப்படி வண்டி மாறியதாகவோ, எழும்பூரிலிருந்து செண்டிரல் போவது எப்படி என்று அப்பா யாரையும் விசாரித்ததாகவோ நினைவில் இல்லை.

செண்டிரல் ஸ்டேஷன் பிரும்மாண்டத்தைப் பார்த்து மலைத்துப் போனேன். இவ்வளவு பெரிய நிலையம், நிறைய ரயில்கள் இந்தியா முழுதுக்கும் எல்லாத் திசைகளிலும் போகும் இங்கிருந்து தான். கல்கத்தா மெயில் எப்போது கிளம்பும், எங்கிருந்து கிளம்பும் என்று விசாரித்துக் கொண்டோம். மாலை ஐந்து அல்லது ஆறுமணி வாக்கில் என்று தெரிந்தது. கிளம்பும் ப்ளாட்·பார்ம்மும் தெரிந்தது. சாமான்களை ஒருவர் பார்த்துக்கொள்ள மற்றவர் பல்தேய்த்துவிட்டு வந்தோம். அங்கேயே இருந்த ரெஸ்டாரண்ட்டில் நான் இட்லி காபி சாப்பிட்டேன். அப்பா சாப்பிடவில்லை. சாப்பிட மாட்டார். அவர் இனி நாளைக் காலை உடையாளூர் போய்ச் சேர்ந்து, குளித்து, பூஜை யெல்லாம் முடித்துக்கொண்டு சாப்பிட மணி பதினொன்றாகிவிடும். வீடு தவிர வேறு எங்கும் சாப்பிடமாட்டார். குளித்து,மடியாக வேஷ்டி கட்டிகொண்டு பூஜை செய்த பிறகு, அதேபோல் அம்மாவும் குளித்து விட்டு சமைத்தால் தான் சாப்பிடுவார். அது அவரது நியம நிஷ்டை சார்ந்தது. என்றும் எந்த கஷ்டத்திலும், எந்த நிலையிலும் அவர் இந்த ஆசாரத்தை விட்டதில்லை. அவரது ஆசாரம்மும் நியமங்களும் அவரை வருத்துமே தவிர, மற்றவரை துன்புறுத்துவதில்லை.

அறுபதுகளில் நடந்த விஷயம் இது. என் தங்கை சொல்ல எனக்குத் தெரிந்தது. ஒரு தடவை தெரிந்த நண்பர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர் ஹைதராபாத் போயிருக்கிறார். போகும்போது ஒன்றும் சிரமமிருக்கவில்லை. கல்யாண கோஷ்டியினர் ஒரு சமையல்காரரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தனர். வண்டியிலே அப்பா குளித்து பூஜை செய்துவிடமுடியும். சமையல் காரருக்கும் அப்பாவோடு இன்னும் சிலரின் ஆசாரம் பற்றித் தெரியும். சிரமம் இருக்கவில்லை. கல்யாண வீட்டிலும் கல்யாண சாப்பாட்டை சாப்பிடுவது அப்பாவின் ஆசாரத்துக்கு ஒத்துவராது. அவர் போன்றவர்களுக்கு தனியாகத் தான் சமையல் நடக்கும். அது கல்யாண விருந்தாக இராது என்பது நிச்சயம். ஆனால் அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் திரும்பி வரும்போது அப்பா தனியாகத் தான் திரும்பினார். மற்றவர்கள் திரும்ப சில நாட்கள் ஆகும் என்ற காரணத்தினால். ஆக, அவர் கிளம்பிய நாள் மதியம் கல்யாணவீட்டில் சாப்பிட்டது தான். ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு எவ்வளவு நேரப் பிரயாணம் என்று இப்போது சொல்லத் தெரியவில்லை. சென்னை வரும் வரையில் அவர் வழியில் எதுவும் சாப்பிடவில்லை. செண்டிரலில் வந்திறங்கிய போது இலேசான காய்ச்சல் போல இருந்திருக்கிறது. அத்தோடு மின்சார ரயிலில் பிடித்து க்ரோம்பேட்டை வந்து இறங்கி ஸ்டேஷனிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்துக்கு மேலிருக்கும் ராதாநகர் மெயின் ரோடின் கோடியில் இருந்த தங்கையின் வீட்டுக்கு நடக்க வேண்டும். நடந்து வந்திருக்கிறார். உடனே குளித்துவிட்டு, பூஜையையும் முடித்துக்கொண்டு சாப்பிடலாம் என்ற எண்ணம். ஆனால் வீடு பூட்டியிருக்கிறது. பக்கத்தில் விசாரித்தால், பக்கத்து வீட்டு சினேகிதிகளுடன் என் தங்கை மாட்டினி ஷோ பார்க்கப் போயிருக்கிறாள். அவள் இனி வர மணி ஐந்தோ, ஆறோ ஆகும். வாசல்படியில் தலையில் கைவத்தபடியே சுரதோடு உட்கார்ந்து விட்டார். என் தங்கைக்கு என்ன தெரியும், அப்பா இந்த நேரத்துக்கு வந்து காத்திருப்பார் என்று? அவள் திரும்பி வந்த போது அப்பா சுரத்தோடு பூட்டிய கதவுக்கு வெளியே தலையில் கைவைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாள். பின் என்ன. அப்பாவுக்கு சுரம் தான். குளிக்காமல் சாப்பிட மாட்டார். வெந்நீர் போட்டு அப்பாவுக்குக் கொடுத்துவிட்டு, தானும் குளித்து, வேறு புடைவை கட்டிக்கொண்டு சமைத்திருக்கிறாள். அப்பா பூஜை செய்யும் நேரத்தில்.. பிறகு தான் அப்பா சாப்பிட்டிருக்கிறார். அவ்வளவு தீவிரமாக கண்டிப்புடன் ஆசாரத்தைக் கடைப்பிடிப்பவர். அந்தக் கண்டிப்பு மற்றவர்களுக்கு மட்டுமல்ல. தனக்கும் தான். அது தன்னை எவ்வளவு வருத்தினாலும் சரி.

இந்தத் தீவிரமும், கண்டிப்பும் எனக்கு பின்னாட்களில் தான் தெரியவந்தது. இந்த மாதிரியான சோதனைகள் அப்பாவுக்கு நேர்ந்தது என்னை ஜெம்ஷெட்பூருக்கு அனுப்ப பட்டணம் வந்த போது தான். அதுதான் கிராமத்தை விட்டு, வீட்டின் சூழலை விட்டு வெளியே வந்த முதல் நீண்ட பிரயாணம். மற்றவையெல்லாம் சில மணி நேரங்களில் முடிந்து விடக்கூடிய பக்கத்து கிராமங்களுக்கு அல்லது வலங்கைமான், கும்பகோணம் போன்ற இடங்களுக்குச் சென்றது தான். அவரை நான் நிலக்கோட்டையில் இருந்த வரை நிலக்கோட்டைக்கு வந்து கூட பார்த்ததில்லை. இதெல்லாம் பற்றி நான் அப்போது கூட நினைத்துப் பார்க்கவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் தான் இப்படி நடந்தது என்று தங்கை எனக்குச் சொன்ன பிறகு தான் நான் அது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

செண்டிரல் ஸ்டேஷனைத் தான் எவ்வளவு நேரம் சுத்திப் பார்த்துக் கொண்டிருப்பது? நான் வெளியே போய்ட்டு வரேனே என்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன். அப்போதெல்லாம் இவ்வளவு வாகனப் போக்குவரத்தும் நெரிசலும் இருந்ததில்லை. வெகு சுலபமாக ரோடைக் கடக்க முடியும். எதிரே ஜெனரல் ஹாஸ்பிடல், டாக்டர் ரங்காச்சாரி சிலை கம்பீரமாக வரவேற்க. இவ்வளவு அகலமான ரோடையோ, பெரிய கட்டிடங்களையோ பார்த்ததில்லை. ரோடின் இருபுறமும் பெரிய பெரிய கட்டிடங்கள். கோட்டை நோக்கி போகும் ரோடு வழியே மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது ஒவ்வொரு கட்டிடம் முன்பும் கொஞ்ச நேரம் நின்று, அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இடது பக்கமும் ஒரு ரோடு போகிறதே, அது எங்கே கொண்டு போய் விடுமோ, முன் பின் பழகியிராத புதிய இடத்தில் சில மணி நேரமே இருக்கப்போகிற இடத்தில் இதெல்லாம் வேண்டாம் என்று தோன்றிற்று. அப்பா ஞாபகம் வரவே ஸ்டேஷனுக்குத் திரும்பினேன். அவர் வரும் போகும் வண்டிகளையும் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “நாழியாச்சேடா, பசிச்சா சாப்பிடு என்றார்.” அப்பா சொன்னதும் பசிக்கறாப்போலத் தான் இருந்தது. அம்மா கட்டிக்கொடுத்த பொட்டலங்கள், புளியோதரை, தயிர் சாதம், வடாம் எல்லாம் இருந்தன. இதெல்லாம் நேற்றைய பழையது. அப்பா சாப்பிட மாட்டாரே என்று பட்டது. “நீங்க பழங்களாவது சாப்பிடலாமேப்பா” என்றேன். ‘சரிடா பாத்துக்கலாம். நீ சாப்பிடு என்றார்.”

சாப்பிட்டு விட்டு மறுபடியும் ஒரு சுற்று. திரும்பினால் அப்பா காலை நீட்டி படுக்கைமேல் தலைவைத்து கண்ணயர்ந்திருந்தார். நான் பக்கத்தில் உட்கார்ந்து சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போதும் சுறுசுறுப்பாக, எல்லோரும் எங்கோ விரைந்துகொண்டிருக்கும் இடம். பார்த்துக் கொண்டே இருந்தால் பொழுதும் போகத் தான் செய்தது. எவ்வளவு நேரம் ஆயிற்றோ, அப்பா கண்விழித்தார். “நேரம் ஆயிண்டிருக்குடா, போய் டிக்கட் வாங்கிண்டு வந்துடலாம். நீ இங்கேயே இரு. நான் வரேன் என்று போனார். “டாடா நகர், கல்கத்தா மெயில்னு சொல்லணும்பா” என்று ஞாபகப் படுத்தினேன். அப்போதெல்லாம் முன்னாலேயே ரிசர்வ் செய்வது என்பதெல்லாம் இருந்ததில்லை. டாடா நகருக்கு டிக்கட் வாங்குவது, செண்டிரலிலிருந்து எழும்பூருக்கு டிக்கட் வாங்குவது போலத்தான். என்ன கூட்டமானாலும் இடம் இல்லை என்று சொல்லமாட்டார்கள். கொஞ்ச நேரத்தில் அப்பா திரும்பி வந்தார் டிக்கட்டுடன். டிக்கட்டைக் காண்பித்தார். டாடா நகர் ரூ 33-ஓ என்னவோ போட்டிருந்ததாக ஞாபகம். அவ்வளவு தான். இன்னும் அதிகம் இரண்டு மணி நேரம் தான். இடம் பார்த்து வண்டியில் உட்காரந்து விடலாம். “ஜாக்கிரதையா வச்சுக்கோ, தொலைச்சுடாதே. ராத்திரி தூங்கப்போ ஜாக்கிரதையா இருக்கணும்? என்றார். இதை அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு எத்தனை தடவை சொல்வாரோ. கவலை இருக்கத்தான் செய்யும். இரண்டு இரவு கழிந்து மூன்றாம் நாள் சாயந்திரம் தான் டாடா நகர் போய்ச் சேர்வேன். அது வரை சாமான்களை, கையில் இருக்கும் பணத்தை, டிக்கட்டை எல்லாம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். புதிய பொறுப்பு. இதுவரை பார்த்திராத அனுபவம். மூன்றாம் நாள் சாயந்திரம் வரை உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, சாப்பிட்டு…..

சாமான்களை எடுத்துக்கொண்டு கல்கத்தா மெயில் நிற்கும் ப்ளாட்·பார்முக்குப் போய் உட்கார காலி இடம் இருக்கும் பெட்டியைத் தேடி உட்கார்ந்து கொண்டேன். இடம் கிடைத்தது. பெட்டியை வேணும்னா பக்கத்திலேயே வச்சுக்கோ. என்றார் அப்பா. நான் அதை ஜன்னலுக்குப் பக்கத்தில் சீட்டிலேயே வைத்துக்கொண்டு, அதன் மேல் கைவைத்துச் சாய்ந்து கொண்டேன். வண்டியும் நிரம்பத் தொடங்கியது. நெரிசல் இல்லை. தாராளமாக உட்கார்ந்துகொள்ளலாம்.

‘போன உடனே லெட்டர் போடுடா. மறந்துடாதே” என்றார் அப்பா. வண்டி கிளம்பியது. அப்பா கவலையோடு பார்த்துக்கொண்டே நின்றவர் நின்றவாறே பின் நகர்ந்து கொண்டே பார்வையிலிருந்து மறைந்தும் விட்டார். எனக்கு புதிய அனுபவம் என்று உற்சாகமாகவும் இருந்தது. புதிய அனுபவம் என்ற காரணத்தால் கவலையாகவும் இருந்தது. எல்லோரையும் விட்டுப் பிரிந்து செல்கிறோம் என்ற துக்கமும் ஒரு புறம்.

வெங்கட் சாமிநாதன்/27.10.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்