குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1)வட அமெரிக்க பிக்ஹூகவுன்சிலின் தலைவர் டாக்டர் முஸ்ம்மில் ஹெச் சித்தீகி பெண்நபிமார்கள் எவரேனும் அனுப்பப்பட்டுள்ளனரா என்ற ஒரு கேள்விக்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கிறார்.
இக்கேள்வியை கானடாவைச் சார்ந்த ஹீபர் என்பவர் கேட்க 16 ஆகஸ்ட் 2005 ல் இந்த பதில் கூறப்பட்டுள்ளது.

அல்லா பல நபிமார்களையும் தூதர்களையும் வெவ்வேறுபகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு வெவ்வேறு காலங்களில் அனுப்பியுள்ளான். இதில் சிலரது பெயர்கள் மட்டும்தான் குரானில் சொல்லப்பட்டுள்ளது.அல்முமீன் 40:78,அந்நிஸா 4:164 வசனங்கள் இதனை தெளிவாக சொல்லிச் செல்கின்றன.

ஆனால் யூசுப் 12:109 அந்நஹல் 16:43 மற்றும் அல் அன்பியா 2:7 ஆகிய குரான் வசனங்களை பொதுவில் நபிமார்களாகவும், தூதர்களாகவும் ஆண்களே அனுப்பப் பட்டுள்ளனர் என்ற அர்த்தத்தில் பலர் குறிப்பிடுகின்றனர்.ஆனால் இதில் பயன்படுத்தப்படும் ரிஜால்(Rijal) என்ற சொல் ஆண்களை மட்டும் குறிப்பிடுவது எனவும் கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் இது உண்மையல்ல.
ஏனெனில் குரானின் மற்றும் பல வசனங்களில் பயன்படுத்தப்படும் ரிஜால் என்ற சொல் ஆண்,பெண் இருபாலரையும் குறிப்பிட்டுச் சொல்கிறது.

சூரத்துல் அரப் 7:46
மேலும் அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஒரு உறுதியான தடுப்பு இருக்கும்.அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள்.

சூரத்துல் அத் தவ்பா 9:109
தொடக்க நாளிலிருந்து இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கிற பள்ளிவாசல்தான் நீர் தொழுவதற்கு மிகவும் தகுதியானதாகும்.தூய்மையுடன் வாழவிரும்பும் மனிதர்கள் அங்குள்ளனர்.

எனவே இந்த இரு வசனங்களிலும் ரிஜால் என்ற சொல் ஆண்பெண் இருபாலரையுமே சேர்த்துச் சொல்லும் சொல்லாகவே முன்வைக்கப்படுகிறது.
2)தமிழில் இந்த ரிஜால் என்ற பதத்தை இருவேறு மொழி பெயர்ப்பாளர்கள் எப்படி அணுகி உள்ளார்கள் என்று பார்ப்போம்
மவ்லவி பிஜே அவர்களின் குரானிய தமிழ் மொழி பெயர்ப்பில் ரிஜால் என்ற சொல்லை ஆண்கள் என்றே குறிப்பிடுகிறது.இப்பிரதி மொழி பெயர்ப்பு மொழிபெயர்ப்பாளரின் மனோபாவத்தின் சாயல் என உறுதிப்படுத்தலாம்.
ஆனால் இதற்கு மாறாக
இமாம் மெளதூதியின் உர்து மொழி வாயிலாக தமிழ் பெயர்ப்பு செய்யப்பட்ட குரானில் மேற்குறிப்பிட்ட அனைத்து வசனங்களிலும் ரிஜால் என்பதற்குஆண்கள் என்ற சொல் பயன்படுத்தப்படவே இல்லை. மனிதர்கள் என இருபாலாரையும் குறிப்பதாகத்தான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இதுவே குரானில் ஆண்மைய நீரோட்ட வாசிப்புக்கு மாற்றாக பெண்ணிய வாசிப்புக்கான சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.
ரிஜால் என்ற சொல் ஆண்பெண் என இருபாலரையும் குறிப்பதே யூசுப் மற்றும் அந்நஹல் அத்தியாயங்களில்பொருத்தமாக இருப்பதையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்
யூசுப் 12:109
உமக்கு முன்னர் பல ஊர்கவாசிகளிலிருந்தும் அவர்களின்பால் நாம் வஹி அறிவிக்கின்ற மனிதர்களைத் தவிர வேறு எவர்களையும் தூதுவர்களாக அனுப்பவில்லை.
அந்நஹல் 16:43
உமக்கு முன்னர் மனிதர்களையே தவிர வேறு நாம் அனுப்பவில்லை.அவர்களின் பால் நாம் வஹி அறிவித்தோம்.
அல் அன்பியா 21:7
மேலும் உமக்கு முன்னர் அவர்களளவில் மனிதர்களை அன்றி வேறெவரையும் நாம் தூதராக அனுப்பவில்லை.
எனவே ரிஜால் என்ற சொல் ஆண் பெண் என இருபாலினங்களை குறிக்கும் சொல்லாகவும் மனிதர்கள் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.
3)லெபனானைச் சார்ந்த டி.டி.கரானோவ் ஒரு கேள்வியில் பெண்நபிமார்கள் உள்ளனரா என்ற ஒரு வினாவை எழுப்பியுள்ளார்.இதற்கு ஜசர் அவ்தா ஒரு விளக்கத்தை அளிக்கிறார்.

சில அறிஞர்கள் பெண்நபிமார்கள் இல்லை என்று கூறுவதற்கு காரணமாக நபிமார் எனப்ப்பட்டவர்கள் முழுமை பெற்ற மனிதர்களாக இருக்கவேண்டும் எனவும் பெண்கள் முழுமை பெற்றவர்கள் ஆக முடியாது எனவும் கருதுகின்றனர்.இமாம் இப்னுகதீர் தனது குரானிய விளக்க உரையில் இதனை தெரிவிக்கிறார்.இப்படியாக கூறப்படும் கருத்துக்களை அப்படியே உண்மை என்று ஏற்றுக் கொள்ளமுடியாது.ஆனால் பல புகழ் பெற்ற அறிஞர்கள் பெண்நபிமார்கள் இருந்துள்ளதை வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர்.

இமாம் அல்குர்துபி தனது குரானிய விளக்க உரையில் கூறுகிறார்
பெண்நபி அனுப்பப்படவில்லை என்பதற்கும் கொள்கைரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. எனினும் யார் யாரை நபிமார்களாக அடையாளப்படுத்துவது என்பதில் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன என்கிறார்.

இமாம் அல்குர்துபியின் கருத்தாக்கம் என்பதே நபித்துவம் அல்லது தூதுத்துவத்திற்கு அடிப்படை வஹி எனும் கருத்தாக்கமாகும் ஆண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கும் இது அனுப்பப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறார்.குரானிய வசனங்களில் மர்யம் பற்றிய பதிவுகளை முன்வைத்து (19:16 – 19)இதனை விளக்குகிறார்.

மர்யத்தைப்பற்றி இந்த வேதத்தில் விவரித்துக் கூறுவீராக. தம் குடும்பத்தைவிட்டு கிழக்கிலுள்ள ஒரிடத்திற்கு அவர் ஒதுங்கச் சென்றபோது அவர்களைவிட்டும் ஒரு திரையை அவர் ஆக்கிக் கொண்டார்.அப்போது அவரிடம் நம்முடைய ரூஹை அனுப்பினோம். நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார்…. நிச்சயமாக நானோ தூய்மையான ஒரு ஆண்குழந்தையை உமக்கு நன்கொடையாக அளிப்பதற்காக வந்துள்ள உம் இறைவனின் தூதர்தான் என்றார்கள்.
இதன்வழியாக நபித்துவம் பெற்ற பெண்நபியாக அன்னை மர்யத்தை இமாம் குர்துபி குறிப்பிடுகிறார்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்