மொழிவது சுகம்: நாமார்க்கும் குடியல்லோம்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



“காலையில் எழும்ப வேண்டியது
ஒரு கோணியோடு
ஒரு தெருவு நடந்தால் போதும்
கோணி நிறைந்துவிடும்
காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன
தலை நிமிர்ந்து வாழலாம்”

என்கிற வரிகளும், “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை” என்ற வரியும் தமிழர்களைப் பற்றிய சித்திரமாக கவிஞர் மு. சுயம்புலிங்கத்தினால் சுட்டப்படுகிறது. அவரவர்க்கு ஒரு கோணி கைவசம் இருக்கிறது, நிரம்புகிறது. தலை நிமிர்ந்து வாழ்கிறோம். சுதந்திரமென்றும் சொல்லிக்கொள்கிறோம். கோணி மனிதர்களுக்கு மாத்திரமல்ல தன்மானமிக்க ஆனைகளுங்கூட மேடை தானமாகக் கிடைத்தால் கால் மடக்கி, பணிவு காட்டும் சுதந்திரம். தார்மீகச் சுந்திரமா? சட்டம் தரும் சுதந்திரமா என்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. நாம் பிழைக்கிறோம் என்பது முக்கியம். மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ, எனக்கேட்கும் துணிச்சல்மிக்க எழுத்தாளர்கள் தமிழுக்குச் சாத்தியமா? என்ற கேள்வி கவிஞர் சுயம்புலிங்கத்தின் கவிதைகளை வாசித்த பிறகு எழுகிறது.

மரிதியய் கம்பனுக்கு வேண்டியவர்(இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரைக் குறித்து எழுதியிருந்தேன், இக்கட்டுரையை அதன் தொடர்ச்சி எனலாம்). பிரெஞ்சில் இன்றைய தேதியில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்: கறுப்பரினம், பெண்மணி என்பது இலக்கியத்திலும் கோட்டாவை வற்புறுத்தி அடையாளம் பெற நினைப்பவர்களுக்கு உதவக்கூடிய தகவல். 2009ம் ஆண்டுக்கான கொன்க்கூர் இலக்கிய பரிசினை, நியாயமானத் தேர்வில் வென்றவர். ஆனாலும் அப்பெண்மணி பரிசுக்குரியவரல்ல என்ற விமர்சனம் வந்தது. விமர்சித்தவர்கள் அப்பெண்மணியின் எழுத்தாளுமையையோ, பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த அவரது நூலையோ கேள்விக்குட்படுத்தவில்லை, அவரது பிரெஞ்சு அடையாளத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார்கள். தற்போது பிரெஞ்சு அதிபராக உள்ள நிக்கோலாஸ் சர்க்கோசியினுடைய கடந்த கால செயல்பாடு பிரான்சு நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருந்ததென்ற குற்றசாட்டு உண்டு. நகரின் பின் தங்கிய பகுதிகளில் வாழ்ந்த கறுப்பரின மக்களும், அரபு மக்களும் குறிப்பாக இளைஞர்கள் அவரை இனவெறியாளரென்றே சித்தரித்திருந்தார்கள். அவர் உள்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அறிவு ஜீவிகளை முகஞ்சுளிக்க வைத்தன. சர்க்கோசி 2007ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது கறுப்பரினத்தை சேர்ந்த அறிவுஜீவிகள், கலையுலக பெருமக்கள், பாடகர்கள் எனப் பலர் அவருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்படி சர்க்கோசியின் எதிரணியிலே இடம்பெற்றவர்களுள் மரி தியய்யும் ஒருவர். அதிபர் தேர்தல் முடிவு சர்க்கோசிக்கு ஆதரவாக இருந்தது. வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்டார். நிக்கோலாஸ் சர்க்கோசி ஒரு மிருகம், அத்தகைய மனிதரின் கீழ்வந்த பிரான்சும் எனது நம்பிக்கையை இழந்துவிட்டது, இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன், என்ற கூறி பிரான்சு நாட்டைவிட்டு வெளியேறியவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் தமது கணவருடன் வசித்து வருகிறார்.

மரி தியய்க்கு பரிசளித்திருக்கக்கூடாதென்று சொல்ல நினைத்த எரிக் ராவுல் என்ற ஆளும் கட்சி உறுப்பினர்: “2009ம் ஆண்டிற்கான கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கென அறிவிக்கபட்ட முடிவு தவறானது. தேர்வுக்குழுவினர் சரியான நபரை தேர்வு செய்ய தவறிவிட்டனர். பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் அடையாளம் கொண்டவராகவும் அதன் பெருமைகளை போற்றுகிறவராக இருக்க வேண்டும். அதற்கு மாறாக இப்பெண்மணி (மரி தியைய்) நமது (பிரான்சு) நாட்டையும் நமது அதிபரையும் சிறுமைபடுத்தி பேசியிருக்கிறார். விமர்சித்து இருக்கிறார். இவ்விடயத்தில் நமது கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்” என்றார். அவருக்கு ஆதரவாக குரல்கொடுக்க அதிபரின் துதிபாடிகளும் முன் வந்தனர். ஆனாலும் இப்பிரச்சினையில் கலை பாண்பாட்டுதுறை அமைச்சரும், பரிசு அளித்த கொன்க்கூர் அமைப்பும், தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளர்களும், பரிசுபெற்ற எழுத்தாளர் பெண்மணியும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதில் பிரெஞ்சு மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

மரிதியய் பெண்மணியை பரிசுக்குரியவராகத் தேர்வுசெய்த படைப்பாளிகள் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூச்சலை வன்மையான கண்டித்தனர். “அரசியல் வாதிகள் ஓய்ந்த நேரங்களில் இலக்கியமென்றால் என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். இலக்கிய பரிசினை ‘மிஸ் பிரான்சு’ தேர்வு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மரிதியய் என்ன எழுதியிருக்கிறார் எனப்பார்த்து பரிசினை அளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப்பார்த்து பரிசுவழங்குவதில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படி பேசக்கூடாது அப்படி பேசக்கூடாது என்று தெரிவிப்பதன்மூலம் இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள். சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்? என்ற கேள்வியையும் அரசாங்கத்தைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக எழுத்தாளர்களும் களத்தில் குதித்தனர்.

கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு வருவோம். இவர் பெயர் பிரெடெரிக் மித்தரான் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரானின் சகோதரர் மகன். இடது சாரி சிந்தனையாளர், எழுத்தாளர், கலை விமர்சகர். தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட சர்க்கோசி ஆட்சிக்கு வந்தவுடன், எதார்த்தவாதியானார். உலக அரசியலில் இனி தீவிர வலதுசாரிகளுக்கோ அல்லது தீவிர இடது சாரிகளுக்கோ இடமில்லை என்ற உண்மையை சர்க்கோசியும் அறிந்திருந்த காரணத்தால், தமது கட்சி அமைச்சரவையில் இடதுசாரி சிந்தனைவாதிகள் பலரை சேர்த்துக்கொண்டார். அவர்களுள் பிரடெரிக் மித்தரானும் ஒருவர். கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பதவி அவருக்குக் கிடைத்தது. வலது சாரி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதும் அவரது இடதுசாரி சிந்தனையை எவரும் சந்தேகித்ததில்லை.

போலந்தில் பிறந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவருமான பிரபல திரைப்பட இயக்குனரான ரோமன் போலஸ்கியை (Rosemary’s Baby, Chinatown) சமீபத்தில் ஸ்விஸ் காவல்துறை கைது செய்தது. அவர் கைது செய்யப்பட காரணம் 1977ம் ஆண்டு திரைப்படமொன்றை இயக்குவதற்காக அமெரிக்காவில் தங்கி இருந்தபொழுது இளம்வயது பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் பாலியியல்குற்றச்சாட்டு. இப்பிரச்சினையில், ரோமன் போலஸ்கி ஒரு பிரெஞ்சு குடிமகனாகவும் இருந்ததால் அமெரிக்காவைக் கண்டித்து பிரடெரிக் மித்தரான் அறிக்கை வெளியிட்டார். முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரு வழக்கில் வெறும் குற்றசாட்டுகளின் அடிப்படையில் ஒரு சாதாரண மனிதரைபோல ரோமன் போலஸ்கிபோன்ற கலைவிற்பனரை கைது செய்யவேண்டும், விசாரணைக்குட்படுத்தவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பது நியாயமல்ல என்றார். இவரது அறிக்கையை பலரும் கண்டித்தார்கள். போலன்ஸ்கியின் தவறை நியாயப் படுத்துகிறார் என்றார்கள். எனினும் அமைச்சர் ரோமன் போலஸ்கியை உணர்வு பூர்வமாக ஆதரித்ததைப் பலரும் சிலாகித்தார்கள். எனவே அமைச்சரின் கருத்து எழுத்தாளர் மரிதியய்க்கு ஆதரவாக இருக்குமென்று நம்பினார்கள். ஆனால் நடந்தது வேறு. ஓடோடிச்சென்று ரோமன் போலஸ்கியை ஆதரித்தவர், எழுத்தாளருக்கு ஆதரவாக ஒரே ஒரு வார்த்தை..ம் இல்லை. எழுத்தாளருக்கு உண்டான பேச்சு சுதந்திரம் எழுத்தாளரை விமர்சிக்கிறவர்களுக்கும் உண்டு எனக்கூறி தமக்கு அமைச்சர் பதவி அளித்த சர்க்கோசிக்கு விசுவாசமாக நடந்துகொண்டார். “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை” என்ற கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரிக்கொப்ப.

பிரான்சு நாட்டையும், அதிபரையும் விமர்சனம் செய்துவிட்டு, பிரெஞ்சு இலக்கிய பரிசினை வாங்குவது தவறு என்ற ஆளும் கட்சியின் விமர்சனத்தை பரிசுபெற்ற பெண்மணி மரி தியய் எப்படி எடுத்துக்கொண்டார். “இங்கே பாருங்கள் எனக்குப் பரிசினைக்காட்டிலும் பேச்சு சுதந்திரம் முக்கியம், அதிபர் சர்க்கோசி குறித்தும், அவர் நிர்வாகத்தின் கீழுள்ள பிரான்சு குறித்தும் எனக்கு இப்போதும் ஒரே அபிப்ராயந்தான். பரிசுக்காக அதிபரிடமோ, பிறருடனோ சமரசம் செய்துகொள்ள நான் தயாரில்லை”, எனக் கறாராகச்சொல்லிவிட்டார்.

“தனது எண்ணத்தையும் கருத்தையும் சுதந்திரமாகத் தெரிவிப்பதே மனித உரிமைகளுள் மிகவும் உன்னதமானது” என 1789ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 26ந்தேதி மனித உரிமை பிரகடனத்தின் பிரிவுக்கூறு எண் 11 தெரிவிக்கிறது. அதன்படி ஒரு குடிமகன் சுதந்திரமாக பேசவும், எழுதவும், எழுதியதைப் பிரசுரிக்கவும் அது வழிவகுக்கிறது. ‘நான் சிந்திக்கிறேன் எனவே வாழ்கிறேன்’ – ‘Je Pense donc je suis’ என்பார் ரெனே தெக்கார்த். ‘எழுதுகிறேன் எனவே சுதந்திரமாக இருக்கிறேன்’, என்பது எனது சொந்தப் புரிதல். எழுத்து வெளியைப்போல ஒரு சுதந்திர உலகம் இருக்க முடியாது. எழுத்து என்னை வசீகரித்ததற்கும் பிரதான காரணம் இதுவே. சுதந்திரம் என்ற சொல் தனி மனிதன், சமூகம் என்ற இரு முனைகளுக்கும் கயிற்றில் நடக்க முயல்கிற கழைக்கூத்தாடியொருவனின் கவனத்தைப் பெற்றது. இரு முனைகளும் ஒத்துழைக்கவேண்டும். சில சில்லறைவிதிகளென்ற கம்பைக் கையிலேந்தியபடி பிசகாமல் அடியெடுத்து வைக்கும் வித்தை. சுதந்திரத்தினை இருவகையில் தனிமனிதன் பிரகடனபடுத்தமுடியும்: எதிர் தரப்பு அதிகாரத்திற்கு அடிபணிவதில்லை, கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை, இச்சைக்கு இணங்குவதில்லையென எதிர்வினைகளூடாக தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பதென்பது ஒரு வகை. எனது எண்ணம், எனது சிந்தனைகள், எனது முடிவுகளென சொந்த விருப்பத்தை பூர்த்திசெய்வதன் ஊடாக சுதந்திரத்தைப் போற்றுவதென்பது இன்னொருவகை. இரண்டிற்கும் நோக்கமொன்றுதான்: நாமார்க்கும் குடியல்லோம்.

__________________________________________

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா