இந்திய வரலாற்றை மாற்றிய 27 வருட போர் – பகுதி 1

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

கேதார் சோமன்


இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சிதைக்கப்பட்ட இந்திய வரலாற்றையே பயில்கிறார்கள் . இந்திய வரலாறு பற்றிய எந்த வித பெருமிதமோ அல்லது கௌரவமோ அற்றதாக ஆக்கப்பட்ட மொன்னையான வரலாற்று நிகழ்வுகளின் கோர்வையாக வரலாற்றுப் பாடம் இருக்கிறது. மற்ற எதனையும் விட முக்கியமாக இந்திய சுதந்திர போராட்டத்தைப் பற்றியதாகவும், அதில் இந்திய தேசிய காங்கிரஸின் பங்கு பற்றியதாகவும் வரலாற்றுப் பாடம் இருக்கிறது. காந்தி மற்றும் நேரு ஆகியோர் செய்த சின்ன சின்ன விஷயங்களையும் பயில்கிறோம். மற்ற ஆயிரக்கணக்கானவர்கள் வெறும் பெயர்களை மட்டுமே அறிகிறோம். பலர் பெயர்கள் கூடக் குறிப்பிடப் படுவதில்லை.
என்னுடைய பிரச்னை காந்தி நேரு ஆகியோரை பற்றி அல்ல. அவர்கள் மாமனிதர்கள். ஆயினும், பெரும் வரலாற்று ஓட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, பிற முக்கியமான நிகழ்வுகள் பின்னடைவு கொள்கின்றன.
ஆகவே, இந்திய வரலாற்றையும் இந்திய துணைக்கண்டத்தையும் பிரம்மாண்டமாக மாற்றி அமைத்த முக்கியமான ஒரு போரை பற்றி நாம் பேசுவதில்லை, அறிந்திருக்கவும் இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை. இந்த போரே இந்தியாவின் போர்களிலேயே மிகவும் முக்கியமான போர். அந்த காலத்தில் சராசரி ஆயுள் என்பது வெறும் 30 வருடங்களாக இருந்த போது 27 வருடங்களாக நடந்த இந்த போர் ஒரு தலைமுறையின் வாழ்நாள் முழுவதும் நடந்திருக்கிறது என்பதை அறியலாம். இந்த மாபெரும் போருக்குள் நடந்த சண்டைகள் மட்டுமே நூற்றுக்கணக்கில் இருக்கும். இதுவும் இந்தியாவின் பரந்த புவித்தளம் முழுவதும் நடந்திருக்கிறது. மஹாராஷ்டிரா, குஜராத், மத்ய பிரதேஷ், கர்னாடகா என்ற நான்கு முக்கிய மாநிலங்களில் இடைவிடாது நடந்திருக்கிறது இந்த மாபெரும் போர். காலம், இதற்கான செலவு, மனித இழப்பு, பொருள் இழப்பு ஆகிய்வற்றை கணக்கிலெடுத்துப் பார்த்தால், இந்திய வரலாற்றில் இதற்கு இணையான போர் வேறு எதுவும் இல்லை.
இது 1681இல் முகலாய பேரரசர் அவுரங்கசீப் மராத்தா அரசின் மீது படையெடுத்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. இது 1707இல் அவுரங்கசீப்பின் இறப்போடு முடிவடைகிறது. தன்னிடம் இருந்த அனைத்தையும் இந்த போருக்காக அவுரங்கசீப் செலவழிக்கிறார். இறுதியில் அனைத்தையும் இழக்கிறார்.
இந்தப் போரில் வீரதீர பராக்கிரமங்களை பட்டியலிடும் ஆவல் இயல்பாகவே எழக்கூடும். ஆனால் இந்தப் போர்களின் பின்னணியில் இருந்த அரசியலைப் புரிந்து கொள்வது தான் மிக சுவாரஸ்யமான விஷயம். ஒவ்வொரு போருக்குப் பின்னாலும் அரசியலே இருக்கிறது. ஒவ்வொரு போரையும் அரசியலே நடத்துகிறது. போர் என்பது அரசியலின் மற்றொரு வடிவமே. இந்தப் போரும் விதிவிலக்கல்ல.அதனை தொடரின் இறுதியில் ஆராயலாம்.
சிவாஜி தன் வாழ்நாள் முழுவதும் செய்த ஓய்வு ஒழிவு அற்ற உழைப்பின் பலனை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடைந்தார். தக்காணத்தில் (மஹாராஷ்டிரா, கர்னாடகா) உறுதியாக மராத்தா பேரரசை நிறுவி வைத்தார். கொங்கணிலும் சஹ்யாத்ரிகளிலும் நூற்றுக்கணக்கான கோட்டைகளை நிர்மாணம் செய்து வைத்தார். இவை அவரது அரசின் பாதுகாப்பின் முதுகெலும்பாகும். அதே நேரத்தில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத உறுதியான கப்பல்படையையும் அவர் உருவாக்கி இந்தியாவின் மேற்கு கடற்கரை முழுவதையும் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தக்காணத்தில் இருந்த சுல்தானேட்டுகளின் மீது கடுமையான அழுத்தத்தை உருவாக்கினார். ஐரோப்பாவிலிருந்து தடவாளங்களை இறக்குமதி செய்வதையும், அரேபியாவிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்வதையும் தடுத்தார். சிவாஜிக்கு எதிராக பலமுறை இந்த சுல்தானேட்டுகள் ஒருங்கிணைந்து போர் தொடுத்தனர். ஆனாலும் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
வடக்கு எல்லையில், பல ராஜ்புத் அரசர்கள் முகலாய பேரரசுக்குக் கீழ் தங்களை சிற்றரசர்களாக ஒப்புவித்துக்கொண்டிருந்தனர். அவுரங்கசீப் தனது சகோதரர்களைக் கொலை செய்தும், தனது தந்தையை சிறையிலடைத்தும் பேரரசராக ஆகியிருந்தார். ராஜ்புத் அரசர்கள் முகலாய அரசுக்கு அடங்கியும், தெற்கில் தக்காண சுல்தானேட்டுகள் பலவீனமாகவும் ஆன நிலையில், ஔரஙசீப் மராட்டா பேரரசைக் குறி வைத்ததில் வியப்பில்லை.
சிவாஜி 1680இல் இறந்த போது, மராத்தா பேரரசு தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்தை விட மிகப்பெரியதாக இருந்தது. அதன் அனைத்து திசைகளிலும் எதிரிகளே இருந்தனர். வடக்கு கடற்கரையில் கோவாவில் போர்ச்சுகீசியர்கள், பம்பாயில் பிரிட்டிஷ்காரர்கள், கொங்கணில் சித்திகள், கர்னாடகாவில் தக்காண சுல்தானேட்டுகள் ஆகியோர் இருந்தனர். ஒருவராலும் நேரடியாக தனியாக மராத்தா பேரரசை எதிர்கொள்ள முடியாமல் இருந்தனர். மராத்தியப் பேரரசை எதிர்க்கும் வலுக் கொண்டதாக அவுரங்கசீப்பின் முகலாய பேரரசு மட்டுமே இருந்தது.
அவுரங்கசீப்போ ஒரு மதவெறியராக இருந்தார். சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரான மதசகிப்புத்தன்மையற்ற கொள்கையாலும், நடவடிக்கையாலும் ராஜ்புத் அரசர்களும் சீக்கியர்களும் அந்நியப்ப்பட்டிருந்தார்கள். அவர் ஆட்சிக்கு வந்ததும், அவரது ஆட்சியில் இந்துக்களின் வாழ்க்கையை வாழும் நரகமாக்கி இருந்தார். ஜிஸ்யா போன்ற கடுமையான வரிகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. பல்லக்கில் இந்துக்கள் பிரயாணம் செய்வது தடைசெய்யப்பட்டது. இந்து கோவில்கள் உடைக்கப்பட்டன. கட்டாய மதமாற்றம் அரசாங்க தூண்டுதலில் வேகமாக நடைபெற்றது. அவுரங்கசீப் இஸ்லாமிய சட்டமான ஷரியாவை அரசாங்க சட்டமாக்க முயன்று தோல்விஅடைந்தார். இது போன்ற முயற்சிகள் ராஜ்புத் அரசர்களையும் சீக்கியர்களையும் ஒதுங்க வைத்தன. இதனால், அவுரங்கசீப் தெக்காணத்திற்கு படையெடுக்க சென்றபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
1681 செப்டம்பரில் மேவார் அரசகுலத்தோடு சண்டையை நிறுத்திக்கொண்ட அவுரங்கசீப் தெக்காணத்துக்குக் கிளம்பி சென்று அங்கு மராத்தா பேரரசை அழிக்க முயன்றார். மராத்தா பேரரசு தோன்றி 50 வருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. முகலாய அரசரின் சேனையில் ஐந்து லட்சம் போர்வீரர்கள் இருந்தனர். இந்த சேனை மராத்தா அரசின் போர்வீரர்களை விட ஐந்து மடங்கு பெரியது. தவிர முகலாய அரசரிடம் ஏராளமான குதிரைப்படைகள், ஆயுதங்கள், பீரங்கிகள், யானைப்படைகள் இருந்தன. இது தவிர தன்னிடம் இருந்த கஜானாவில் ஏராளமான பொருளையும் வைத்திருந்தார். போர்ச்சுக்கீசியர்கள், பிரிட்டிஷ்காரர்கள், சித்திகள், கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்கள் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒருங்கிணைந்த படையினால் மராத்தா பேரரசை முழுவதும் சுற்றி வளைத்து அழிக்க திட்டமிட்டார். இப்படிப்பட்ட ஒருபக்கம் அதிக பலம் கொண்ட ஒரு போர் எப்படி முடியும் முடிந்திருக்கக் கூடும் என்று ஊகிப்பது கடினமல்ல. ஏறத்தாழ மராத்தா அரசு கூட்டமைப்பு (Maratha confederacy) நோக்கி ஒரு அழிவுப்புயல் நகர்ந்தது எனலாம்.
இந்த புயலின் வழியில் ஏராளமான உயிர்ச்சேதமும் அழிவும் தெக்காணத்தில் முடிவற்றதாக நீண்டது. ஆனால், இதன் முடிவில் என்ன நடந்தது என்பது எல்லா கற்பனையையும் எல்லா தர்க்கத்தையும் தோற்கடிப்பதாக இருந்தது. எல்லா புறங்களிலும் வசதி வாய்ப்பற்றவர்களாக இருந்தும் மராத்தியர்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள். தன்னிடமிருந்த கஜானா, ராணுவம், ஆயுதம், அதிகாரம், எண்ணற்ற காலாட்படை இருந்தும், ஆக்கிரமிக்க முனைந்த முகலாயப் பேரரசருக்கு, தங்களது சுதந்திரத்துக்காகப் போராடும் மனிதர்களது வைராக்கியத்தை குறைத்து மதிப்பிடவே முடியாது என்ற உன்னத பாடம் படிப்பிக்கப்பட்டது.
(தொடரும்)
இணைப்பு

Series Navigation

கேதார் சோமன்

கேதார் சோமன்