மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இம்மாதம் பிரான்சு நாட்டில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் வால்-துவாஸ் பகுதியில் சோஷலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக தேர்தலில் நிற்பவர் அலி சூமரே. ஆளும் கட்சியான வலதுசாரிகள், அவரது பழைய வாழ்க்கையைத் தோண்டி எடுத்தார்கள். அலி சூமரேயின் எதிரணித் தலைவரான பிரான்ஸிஸ் தெலாத்ரு என்பவர் ஆலி சூமரே அடிக்கடி சிறைக்கு போகுமொரு குற்றவாளியெனக் கூறியதோடு அவர் மீதுள்ள குற்றங்கள், பெற்ற தண்டனைகளென ஐந்து சம்பவங்களைப் பட்டியலிட்டார். பிரச்சினை விசுவரூபமெடுத்தது. சாட்டப்பட்ட ஐந்து குற்றங்களில் ஒன்றுக்கு அலி சூமரே ஆறுமாத சிறை தண்டனைப் பெற்றிருப்பது தெரிய வந்தது. பத்தொன்பது வயதில் சக நண்பனொருவனுடன் சேர்ந்து செய்த திருட்டுக் குற்றத்திற்காக அத்தண்டனையைப் பெற்றிருந்தார். மற்றொரு வழக்கு தமது கடமையைச்செய்யவந்த காவல் அதிகாரியைத் தடுத்தது பற்றியது. இவ்வழக்கில் இரண்டுமாத சிறை விதிக்கபட்டிருந்தபோதிலும் மேல் முறையீடு செய்திருக்கிறார். இவை இரண்டைத் தவிர அலி சூமரே மீதான மற்ற குற்றசாட்டுகள் பொய்யானவையென தெரியவந்துள்ளன. முக்கியமாக ஆளும் வலதுசாரிகள் சொல்வதுபோல குற்றத்தைத் தொழில்படுத்திக்கொண்டவரல்ல. பிரான்சு நாட்டைப் பொருத்தவரை, குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டிக்கபட்டவர்கள் அரசு அலுவலங்களில் பணியாற்ற இயலாது ஆனால் தேர்தலில் நிற்கத் தடையில்லை, அலி சூமரே தேர்தலில் நிற்பதற்கு பிரெஞ்சு அரசியல் சட்டத்தின்படி எல்லா உரிமையுமுண்டு. 1999ம் ஆண்டு செய்த குற்றத்திற்கு உரிய தண்டனையை அனுபவித்துவிட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக திருந்தியும் வாழ்கிறார், இந்நிலையில் அவரைத் தொடர் குற்றவாளிபோலக் கருதி விமர்சிப்பது நாட்டின் நீதித்துறையின் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானதும், உள்நோக்கமும் கொண்டதென்பது அலி சூமரே தரப்பினரின் வாதம். எனினும் ஆளுங்கட்சியால் எழுப்பப்பட்ட இப்பிரச்சினைக்கு எதிர்க்கட்சியினரான இடது சாரிகள் மாத்திரமின்றி நடுநிலையாளர்களும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். பெருஞ் சர்ச்சையானது. அலி சூமரே மீதான குற்றச்சாட்டிற்கு அவர் கறுப்பர் என்பதும் ஒரு காரணம் என்றார்கள், அதனாலேயே அவரது கசப்பான கடந்தகாலத்தின் ஒரு பகுதியை பொது விவாதத்திற்கு கொண்டுவந்ததாகப் பேச்சு. இதில் உண்மை இல்லாமலில்லை. அலி சூமரேவை விமர்சித்த ஆளுங்கட்சி தலைவரே வழக்கொன்றில் தண்டிக்கபட்டிருக்கிறார். அடுத்த சில நாட்களில் ஆளுங்கட்சியின் பல தலைவர்கள் குற்றவியல் வழக்குகளில் தண்டனைப் பெற்றிருப்பதை இடதுசாரி ஆதரவாளர்கள் ஆதாரங்களுடன் தொலைகாட்சி விவாதங்களின்போது தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தம்மை இழிவுபடுத்தியதாக எதிரணிதலைவர்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இனி தண்டனைக் குற்றவாளிகளை தேர்தலில் நிற்க அனுமதிக்கப்படக்கூடாது, அவர்களைத் தடை செய்யவேண்டுமென்று ஒரு சிலர் கோரிக்கை வைக்க, சட்ட அமைச்சர் அப்படியொரு சிந்தனையே சரியல்ல, வேட்பாளரைக் குறித்து மக்கள் வழங்கும் தீர்ப்பே பிரதானமானது என்று அறிவித்திருக்கிறார். ஒரு வழியாகப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அண்மையில், சென்னையில் பொய்யான காவல்துறை அதிகாரியாக நடித்த பெண்மணியைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றன. தமிழ் தினசரிகளின் தலைப்புச்செய்திக்கு அவர் உரியவரல்ல என்பதுபோல அச்செய்திகள் இருந்தன. கடந்த காலத்தில் நடிகைகள் குறித்து தவறான செய்திகள் வெளியிட்டதற்காக ஆபாசமான மொழிகளால் பத்திரிகையாளர்கள் கண்டிக்கப்பட்டனர். இன்று வேறொரு செய்தி வேறொரு நீதி. நித்யானந்தாவுக்கு முதல் பக்கம் ஒதுக்கப்படுகிறது. நித்யானந்தாவும் பெண்மணியின் நடத்தையும் தமிழ்நாட்டையே பாழ்படுத்திவிட்டதுபோன்ற ஒரு மாயையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மஞ்சள் பத்திரிகைகளுக்கு வீடியோ காட்சிகளை வழங்கிய புண்ணியவானின் யோக்கியதைக் குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. சாமர்த்தியம் என்றதொரு வார்த்தை இப்போது எல்லாமொழியிலும் சிலாகிக்கப்படும் சொல். நித்யானந்தாவின் சாமர்த்தியத்தில் எங்கோ ஓட்டை விழுந்திருக்கிறது, அந்த ஓட்டையை அடைக்க எவ்வளவு நேரமாகும் ‘இடறிவிழுந்தது, கரடிவித்தைக்காட்ட’ என்று அறிவித்தால் முடிந்தது. தப்பும் வல்லமையுள்ள அத்தனைபேரும் உலகில் உத்தமர்கள். ‘அகப்பட்டால் கள்ளன்’ அவ்வளவுதான்.

1997ம் பிப்ரவரிமாதத்தில் ஆண்டு பிரான்சு நாட்டில் நடந்த ஒர் உண்மைச் சம்பவம்: அவரது பெயர் பிலிப் பெர், ஆனால் ரோஜர் மர்த்தென் என்ற பொய்யான பெயரில் சார்த்துவாஸ் என்றதொரு சிறிய நகரத்திற்கு வருகிறார். ஊராட்சி தலைவரையும் இதர நிர்வாகிகளையும் சந்திக்கிறார். அங்கு அதிவேகச்சாலையொன்று பாதி வேலை முடிந்த நிலையில் ஐந்து செ.மீ அளவுள்ள வண்டினத்தின் அழிவுக்குக் காரணமாகிவிடுமென இயற்கை உபாசகர்கள் எதிர்க்க, கைவிடப்பட்டிருந்தது. தவிர ‘லெமான்ஸ்’ என்கிற நகரையும் ‘தூர் என்கிற’ நகரையும் இணைக்கிற அச்சாலையின் பணி முடியுமெனில் அப்பகுதி பொருளாதார ரீதியில் நன்மைகள் பெற ஏதுவாகுமென்கிற எதிர்பார்ப்புமிருந்தது. அப்பணியை மீண்டும் எடுத்துச் செய்யவிருக்கும் பொதுப்பணித் துறையின் அதிகாரி என்று சொல்லிக்கொண்டு ஒன்றியத்தின் தலைவரையும், பிற உறுப்பினர்களையும் பிலிப் பெர் ஏமாற்றுகிறார். ஊராட்சி தலைவரும், முக்கிய நிர்வாகிகளும் முழுக்க முழுக்க நம்புகிறார்கள், சாலைபோடுவதற்கான எந்திரங்களும், பொருட்களும் ஊராட்சியின் நிதிஆதாரத்தின் மூலம் பெறப்பட்டு வேலைகள் மும்முரமாக நடந்தன. வேலையற்றிருந்த அப்பகுதி மக்களுக்கு சாலைப்பணி அதற்கான வாய்ப்பினையும் நல்கியது. ஊராட்சி நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள்வரை அனைத்து தரப்பினரும் இம்மனிதரை தங்கள் பிரதேசத்தைக் காக்கவந்த இரட்சகராக கருதினார்கள். ஒட்டுமொத்த மக்களின் ஆதரவுடன் போடப்படுகிற சாலையென்பதால் பசுமைவாதிகளும் எதிர்த்துப் பலனில்லைலென்று ஒதுங்கிவிட்டார்கள். எல்லாம் நல்லபடியாக முடிந்தது. சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கவிருந்த நேரத்தில் முந்திக்கொண்டு சாலயை உபயோகித்த வாகனம் காவல்துறை வாகனம், வந்தார்கள். ஊராட்சிய தலைவரும் பிற நிர்வாகிகளும் வாயடைத்துநிற்க பிலிப் பெர் ஓர் எத்தன் என்று கூறி கைது செய்தார்கள், வழக்கு நடந்தது, முடிவில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

சவியெ ஜியானொலி(Xavier Gianolli), 1998 கான் திரைப்படவிழாவில் ‘Interview’ என்கிற குறும்படத்திற்காக தங்க ஓலை பரிசினை வென்றவர். எட்டாண்டுகளுக்குப் பிறகு 2006ல் வெளிவந்த ‘When I was a singer’ முழுநீளப்படமும் (Feature film) அமோக வரவேற்பினைப் பெற்றது. இந்நிலையில் பிலிப் பெர் என்ற மனிதரும் செயலும் அவருக்கு ஏதோ ஒருவித செய்தியை உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது. சிறையிலிருந்த பிலிப் பெரை இயக்குனர் முதன் முறையாகச் சந்தித்திருக்கிறார். இப்படியொரு காரியத்தை ஏன் செய்யவேண்டும், என்ன காரணமென இயக்குனர் கேட்ட கேள்விக்கு குற்றவாளியின் பதில், “முதன்முறையாக எனது வாழ்க்கையில், வேறொருவனாக இருந்தேன்” என்பதாகும். இவ்வுண்மைச் சம்பவத்தினைக்கொண்டு அண்மையில் ‘A l’Origine’- (கதையின்படி ‘தூண்டுகோல்’ என மொழிபெயர்க்கலாம்) என்ற முழுநீளப்படம் திரைக்கு வந்தது. பிரான்சுவா க்ளூஸே, இம்மானுவெல் தெவொ இவர்களோடு நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கின்ற ‘ழெரார் தெப்பார்தியெ’ படத்தில் இருக்கிறார். அதிவேகச்சாலைப் பணியினால் பயன்பெறும் நிறுவனங்கள் மேசைக்கடியில் நீட்டும் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாதற்குப் பதில் (குற்றவாளிகளெனில் காரியம் முடிந்ததும் அல்லது உண்மை வெளிப்பட்டதும் தலைமறைவாகவேண்டும், என்பது விதி), எதிர்கொள்ளவிருக்கிற ஆபத்தை உணர்ந்தும் கதை நாயகன் அங்கேயே தங்குகிறான், கிடைத்த பணத்தை உலகமயமாக்கல் என்ற கோட்ப்பாட்டின் விளைவாக அநாதையாகிப்போன மனிதர்களுக்கும் பிறருக்கும் உதவுகிறான்.

படத்தின் இயக்குனர் சவியே ழியான்னொலி இத்திரைப்படத்தின் ஊடாக தனியொருவனின் அகப்பாட்டை பகுப்பாய்வு செய்கிருக்கிறார். அறநெறி பிறழ்வுகளில் சிக்கிக்கொள்ளாத மனிதர்களென்று எவருமில்லை சூழல்கள் பொருந்துமானால் பிறழ்வதும், வாய்ப்ப்பு அமையுமானால் போதிக்கவும் செய்கிறான். எதிரெதிரான இவ்விரண்டு குணங்களும் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன. A l’Origine பட நாயகன் பிலிப் மில்லெர் எல்லா மனிதர்களையும் போலவே கபடதாரி. அவனுள் இருக்கும் இன்னொரு மனிதனாக சில கணங்களுக்கேனும் வாழவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது. அலுவலகத்தில் பென்சில் திருடுவதும், வருமானவரித்துறையை ஏய்ப்பதும், ஆயிரம் கோடி திட்டம் என்கிறபோது எனக்கோ கட்சிக்கோ நூறுகோடி கொடு எனப்பேரம்பேசுவதும் சம்பந்தப்பட்ட எந்த நபருக்கும் தண்டிக்கப்படவேண்டிய குற்றமல்ல. ஆனாலும் தனித்திருக்கிறபோது அவ்வப்போது இடித்துரைக்கும் அவனுளுள்ள இன்னொரு மனிதனூடாத் தமது அறநெறி பிறழ்வுக்குத் தண்டனை வழங்குகிறான், எந்தச் சமூத்தை ஏய்க்கிறானோ அதனிடமே இறைஞ்சுகிற ஒருவகையான மன்னிப்புக் கோரல் அது. அலுவலகத்திலிருந்து பென்சில் எடுத்துவந்த கையோடு அடுத்துவீட்டு நாயை செல்லமாகக் கொஞ்சுவது, வருமான வரி ஏய்ப்பு செய்வதற்குப் பரிகாரமாக திரைப்படத்தில் ‘இந்திய தேசத்திற்காக’ உயிரை விடுவது, கோடிகளை கையூட்டாக பெற்றுக்கொண்டதற்குப் பிராயச்சித்தமாக இலவசத் திட்டங்களை அறிவிப்பது, ஏன் இதுபோன்று எழுதிக்கொண்டிருப்பதுகூட அந்தவகையைச் சார்ந்தவைகளே. நாமெல்லோரும் இரு கோடுகளில் நம்பிக்கை உள்ளவர்கள், அடுத்த கோடுடன் ஒப்பிடுகிறபொழுது என்னுடைய கோடு சும்மா …ஜுஜுபி ஆக நான் குற்றவாளியல்ல. அலி சூமரே, நித்யானந்தா, பிலிப் பெர் இச்சமுகத்தின் பிரதிநிதிகள். மேலிருந்து குதித்தவர்கள்லல்ல. எல்லா மனிதர்களுக்குள்ளும் இருட்டு உள்ளது, ஓட்டைகள் இருக்கின்றன. நான்கு பேர் என்ற சமூகத்தின் பார்வைக்கு வருகிறபோது செய்த அல்லது செய்யும் குற்றங்களுக்கு நிவாரணம் தேடுகிறோம், அகத்திலுள்ள இருட்டுக்கு வெளிச்சம் வேண்டியிருக்கிறது

கொசுறு செய்தி: பிலிப் பெர் பொதுப்பணித் துறை அதிகாரியாக நடித்து போட்ட சாலையை வல்லுனர்கள் தரமான சாலையென்றே அறிவித்திருந்தனர். எனினும் தவறான நபரால் போடப்பட்ட சாலை என்ற காரணத்தினை முன் வைத்து அச்சாலையை முற்றாக அப்புறப்படுத்திவிட்டு, பொதுமக்களின் வற்புறுத்தலுக்கிணங்கி, மீண்டும் பல கோடிகளை செலவிட்டு பிரெஞ்சு அரசாங்கம் சாலை அமைத்து கொடுத்திருக்கிறது. இச்செயலுக்காக ஐந்தாண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, வெளியில் வந்த பிலிப் பெர், கடந்த வாரத்தில் சிந்தியா என்ற பெயர்கொண்ட சூறாவளியில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ வந்திருக்கிறேனென்று அரசாங்க வாகனத்தில் வந்திறங்க, இம்முறை அவரை அடையாளம் கண்டு உடனே கைது செய்திருக்கிறார்கள்.

—————————————————————————————-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா