மொழிவது சுகம்: மகன் தந்தைக்காற்றும் உதவி

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


உண்மையான படைப்பென்பது பல ரகசியங்களை உள்ளடக்கியதென்ற அல்பெர் கமுய் 1960ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஒரு மோட்டார் வாகன விபத்தில் இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.

நோபல் பரிசு 1901லிருந்து வழங்கப்பட்டுவருகிறது. தொடங்கிய ஆண்டே இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினைப்பெற்றவர் ஒரு பிரெஞ்சு கவிஞர் பெயர் சுல்லி ப்ருய்தோம்(Sully Prudhomme). 2008ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்ற லெ கிளேஸியோ (Le Clezio)அவ்வரிசையில் சமீபத்தில் சேர்ந்துகொண்ட பிரெஞ்சு படைப்பாளி. நாடு என்று பார்க்கிறபொழுது, உலக அளவில் பிரான்சு நோபல் பரிசுபெற்ற படைப்பாளிகளை அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறது. பரிசினை மறுத்த சார்த்துருவையும் சேர்த்து இதுவரை பிரெஞ்சு படைப்பாளிகள் பதினான்குபேர் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை வென்றிருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியென நீளுகின்றவரிசையில் இரவீந்திரநாத் தாகூரின் புண்ணியத்தில் இந்தியாவுமுண்டு.

பரிசுகள் படைப்பாளிகளை அளக்க உதவாதென்றபோதிலும், பரிசுகள் தரும் முகவரியையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. நோபெல்பரிசு வழி அல்லாத பிற எதார்த்தங்களும் பிரெஞ்சு படைப்புலகிற்கு அனுசரணையாக உள்ளன. ஆதிக்கச் சக்தியின் எதிர்ப்புக் குரலாக இலக்கியத்தை கட்டமைத்த பெருமைக்குரியவர்கள் மாத்திரமல்ல, மரபுகளை மீறுவதற்கும் அவர்கள் தயங்கியதில்லை. இருண்மையை உதறி உணர்வு சுவையென்ற படிநிலைகளைக் கடந்து இலக்கியத்தினை வெகுதூரத்திற்கு அவர்கள் அழைத்துவந்திருக்கிறார்கள். உண்மை, புதுமை, நுணுக்கம், உயிர்ப்பு, பாய்ச்சல், வீச்சென்று மொழியின் பரப்பை ஆழமாக உழுது பண்படுத்தியவர்கள். வீரியமிக்க விளைச்சல் மண்ணெண்பதால் தரமான படைப்பாளிகள் பலரை உலகுக்கும் தந்திருக்கிறார்கள். அவ்வரிசையில் நம் அல்பெர் கமுய்யும் வருகிறார். பிரெஞ்சு படைப்புலகம் மாத்திரமல்ல, பிற நாடுகளைச் சேர்ந்த படைப்புலகமும் அல்பெர் கமுய் வசம் தங்களுக்குள்ள அபிமானத்தை தெரிவித்துக்கொண்டனவென்பதை இதழ்களும் ஊடகச் செய்திகளும் தெரிவிக்கின்றன.

இந்திய விருதுகள்போலன்றி நோபல் பரிசு படைப்பாளிகளையும், பிறதுறை வல்லுனர்களையும் உரியவயதில் அங்கீகரிக்கிறது. அல்பெர்கமுய் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்றபோது வயது நாற்பத்து நான்கு. எழுத்திலிருந்து ஓய்வு பெற்ற அல்லது பெறும் வயதல்ல- ஒருவேளை அவரை மரணம் நெருங்குகிறது என்பதை நோபல் பரிசுக்குழுவினர் அறிந்திருந்தார்களோ என்னவோ, முந்திக்கொண்டார்கள். கமுய்யின் இலக்கியச் சாதனைகள்: மூன்று நாவல்கள், ஐந்து கட்டுரை தொகுப்புகள், நான்கு நாடகங்கள், சிறுகதைகள். அல்பெர் கமுய் சமூகத்தின்பால் அக்கறைகொண்ட நாவலாசிரியர், நாடக ஆசிரியர், மெய்யியலாளர், பத்திரிகையாளர். இடதுசாரி சிந்தனையாளரென்ற வகையில் அவரது விருப்பங்கள் கொள்கை சார்ந்தனவாக இருந்தன, எனினும் பிரச்சினைகளை அளக்கிறபொழுது பாரபட்சமற்று தம்மனதிற்கு நேர்மையானவராக நடந்துகொண்டிருக்கிறார். இக்குணம் பலரை எரிச்சல்கொள்ள வைத்திருக்கிறது. ஆட்சியாளர்கள், எழுத்தாள நண்பர்கள், இனவாதம், கிறித்துவம் என அனைத்தையும் விமரிசிக்கும் போக்கு அவருக்குப் பிடித்திருந்தது. அல்பெர் கமுய் தத்துவவாதியா? நாவலாசிரியரா? என்ற விவாதமும் இறந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்கிறது. வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருந்த அந்நியன் மூலம் தமிழிலக்கியத்திற்கு அவரது அறிமுகம் வாய்த்தது. பிரெஞ்சு காலனியாகவிருந்த அல்ஜீரியாவில் பிறந்து வளர்ந்த கமுய்கூட ஓர் அந்நியராகத்தான் சொந்த நாட்டில் காலெடுத்துவைத்தார். அவரது நாவல்களில் எனக்குபிடித்தது வீழ்ச்சி (la Chute -The Fall-1956). இருப்பியல்வாதிகளை கேலிசெய்யும் வகையில் இந்நாவலுக்கு கமுய் ‘அலறல்'(Le Cri) என முதலில் பெயர் வைத்திருக்கிறார். அதாவது சமூகத்திற்கும், இருப்பியல்வாதிகளுக்கும் எதிரான ‘அலறல்’ என்று பொருள்தரும் வகையில். கடைசியில் ‘வீழ்ச்சி’ என்ற பெயரிலேயே வெளிவந்தது. ‘கொள்ளை நோய்க்கு’ இணையாக விற்பனையில் சாதனை படைத்த நாவல். ழான்-பாப்திஸ்த் கிளமான்ஸ் கதை நாயகன். ஆறு அத்தியாயங்கள். இரத்தக்கண்ணீரில் வரும் கதை நாயகனை நினைவிருக்கிறதா. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதிகொள்வதென்பதேது’ சிதம்பரம் ஜெயராமன் குரல் பின்னணியில் ஒலிக்க…. ராதா, ‘…… எனக்கு நிம்மதியேது’ என கரகரத்த குரலில் சர்வ அலட்சியத்துடன் தமது வருத்தத்தை வெளிக்கொணர்வார். ‘வீழ்ச்சி’ நாயகனும் அப்படியொரு குற்றத்திற்காக நிம்மதியின்றி தவிப்பவர். விரக்தியின் உச்சத்தில் தள்ளாடுபவர். செய்தக்குற்றம் நீரில் மூழ்கிய பெண்ணொருத்தியின் அலறலுக்கு செவி சாய்க்காதது. அவள் நீரில் மூழ்கப் பார்த்திருந்து மனதைத் கல்லாக்கிக்கொண்டு ஒதுங்கி நடந்தது.

சமீபத்தில் பிரான்சு நாட்டு அதிபர் நிக்கோலா சர்க்கோசி பாரீசிலுள்ள புனித ழெனெவியேவ் தேவாலய பாந்த்தெயோனுக்கு(Pantheon)1 காலத்தின் அரித்தலுக்குத் தப்பிய அல்பெர் கமுய்யின் எலும்புகளையும் கொண்டுவரவேண்டுமென்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அல்பெர் கமுய்யின் ஐம்பதாவது நினைவுதினத்தை அரசுவிழாவாக ஏற்பாடுசெய்ய நினைத்து அவரது மகள் காத்ரீனை அதிபர்மாளிகைக்கு அழைத்திருந்தார்கள். அதிபர் தமது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். பாரீஸில் புகழ்பெற்ற இவ்வாலயத்தில் 72க்குமேற்பட்ட பிரபலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்: ரூஸ்ஸோ, ஸோலா, மால்ரோ என்ற அவ்வரிசை பெரியது. இது தவிர பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் வாசகங்களையும் சுவர்களில் பொறித்துள்ளனர். அதிபர் சர்க்கோஸி விருப்பப்படலாமேயொழிய, Pantheonக்கென்றுள்ள குழு அதனை ஏற்பதா நிராகரிப்பதாவென்று முடிவு செய்யவேண்டும், ஏற்கனவே பல பிரபலங்களின் உடல்கள் அவ்வாறு குழுவினரால் நிராகரிக்கபட்டுள்ளன. தமது தந்தையின் எஞ்சியவைகளை தேசிய நினைவிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளைக் கண்டு அல்பெர் கமுய் மகளுக்கு கூடுதலாக மகிழ்ச்சி. வறியதொரு குடும்பத்தில் பிறந்த தனது தந்தைக்கு நாடு செலுத்தவிருக்கும் மிகப்பெரிய அஞ்சலியென அவர் நினைக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு அளித்தபேட்டியில் அதை புரிந்துகொள்ள முடிந்தது.

அல்பெர் கமுய்யின் மகனும் காதரீனின் சகோதரனுமான ழான் கமுய் அதிபர் சர்க்கோசியின் விருப்பத்தை நிராகரிக்கிறார். அதிபரின் விருப்பத்தை மறுக்க அவருக்குக் காரணங்களிருக்கின்றன. அதிபர் மாளிகை பலமுறை தூதுவிட்டது, இரண்டுமுறை அதிபரின் செயலர்கள் நேரில் சந்தித்து மகனிடம் சமாதானம் பேசினார்கள். இணங்கவில்லை, ‘அப்பா லூர்மரைனில்(Lourmarin- அல்பெர் கமுய் உடலடக்கம் செய்யபட்டுள்ள சிறுகிராமம்) அமைதியாக உறங்குகிறார் அவரைத் தொந்தரவு செய்யவேண்டாமென்கிறார். அதிபர் சர்க்கோசியின் அல்பெர் கமுய் மீதான திடீர்ப்பாசத்தை எழுத்தாளரின் பிள்ளை சந்தர்ப்பவாதமென்கிறார். பிரான்சு நாட்டில் அல்பெர் கமுய் பேரில் நூற்றுக்கணக்கான வீதிகள் இருக்கின்றன, ஆனால் நெய்லி என்ற நகரில் அப்படியொரு வீதியொன்றும் இல்லையே என்கிறார். நெய்லி அதிபர் சர்க்கோசி இருபது ஆண்டுகாலம் மேயராக இருந்த நகரம். அதாவது அல்பெர் கமுய் மகனுக்கு அதிபர் சர்க்கோசி கற்பூர வாசனையை அறியாதவர். இவ்வாதத்தை பொதுவாகப் பலரும் ஏற்பதில்லையென்றபோதும் அல்பெர் கமுய்யின் மகன், அதிபரிடம் எழுப்பும் அடுத்த இரண்டு கேள்விகள் நியாயமானவை என்கின்றனர்:

முதலாவது:

அப்பா விரும்பி வாசித்த மூன்று நாவல்களுள் ‘கிளேவ்ஸ் இளவரசி’யும் ஒன்றென்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

‘கிளேவ்ஸ் இளவரசியை’யெல்லாம் படித்து நேரத்தை வீணாக்கவேண்டமென கல்விநிறுவனமொன்றில் அதிபர் சர்க்கோசி மாணவர்களுக்கு ஆற்றிய உரை சமீபத்தில் பெருஞ்சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது

இரண்டாவது:

அப்பா மதங்களைக் குறித்து வைத்திருந்த அபிப்ராயங்கள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?

அல்பெர் கமுய் இடதுசாரி சிந்தனையாளர், கிறித்துவத்தை பலமுறை கண்டித்திருக்கிறார். எனவே அவரது உடலை தேவாலயத்துக்குள் கொண்டு சேர்ப்பதில் மகனுக்கு உடன்பாடில்லை.

—————————————————————————
1. http://en.wikipedia.org/wiki/Panth%C3%A9on,_Paris

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா