மொழிவது சுகம்: புர்க்காவும் முகமும்

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எழுபதுகளிலும் சரி, எண்பதுகளிலும் சரி தனியுடமை நெருக்கடியை சந்திக்கிறபோதெல்லாம் சாமர்த்தியமாக மீண்டுவந்திருக்கிறது. மாவோவின் சீனமும், லெனினின் சோவியத் யூனியனும் தனியுடமைக் காலில் விழுந்தாயிற்று என்கிறபோது சொல்ல என்ன இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மாறாக பிரான்சு சர்க்கோசிக்கு மதாம் தாட்சர் குரு. ஆனால் தாட்சரைக் காட்டிலும் தந்திரசாலி என்று சொல்லவேண்டும். உள்ளாட்சிதேர்தல் வருகிறது. பொருளாதார நெருக்கடிகளிருந்து பிற மேற்கத்திய நாடுகளைப்போலவே பிரான்சு இன்னமும் மீளவில்லை.விலைவாசி உயர்வைக் கட்டுபடுத்துவதும், மக்களின் வாங்குந்திறனை அதிகரிக்கவேண்டியதும் அரசாங்கம் அக்கறைகொள்ளவேண்டிய முதன்மைச் சிக்கல்கள். அரசு எடுத்த நடவடிக்கைகளின் பலன்கள் தற்போதைக்கு பூஜ்யமென்ற நிலை. ஆக ஆட்சியாளர்கள் தமது சாதனைகளைச் சொல்லி உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறுவதென்பது நடவாதென்பதை உணர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் நாட்டின் பெருவாரியான பிரச்சினைகளுக்கு வெளிநாட்டினரே காரணமென்ற மனோபாவம் மேற்கத்திய நாடுகளில் அண்மைக் காலங்களில் குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திடமும், நடுத்தரவர்க்கத்திடமும் வளர்ந்து வருவதை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். வெளிநாட்டினர் குறிவைத்து சட்டங்கள், விவாதகளங்களென ஏற்படுத்தி பிரச்சினைகளை திசைதிருப்பவும் அதன் மூலம் மக்கள் ஆதரவை பெற நினைக்கிறார்கள். கடந்த இரண்டுமாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு குடிமகன் என்பவர் யார் என்ற விவாதத்தைப் அதிபர் தொடங்கிவைத்தார். இவ்விவாதகளம் பல நேரங்களில் இனவாதத்தை எதிரொலிக்கும் போக்கில் சிதைந்திருக்கிறது. எதிர்கட்சினர் மாத்திரமல்ல ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களில் சிலரும் அதை எதிர்த்திருந்தனர். இந்நிலையில் ‘புர்க்கா(பர்தா) அணிவதைத் தடைசெய்யவேண்டுமென்று ஒரு புதிய பூதத்தை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். பிரான்சை பொறுத்தவரை சுமார் இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் பெண்கள் புர்க்கா அணிவதாக ஒரு கணக்கு. ஏற்கனவே பள்ளிகள் கல்லூரிகளில் தலையில் துணியிட்டு மறைக்க அனுமதியில்லை. புர்க்கா விவகாரம் கட்சிபேதமின்றி பலரின் ஆதரவை பெற்றிருப்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். சென்றவருடம் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஒருவர் நாட்டில் புர்க்கா அணிவதை தொடர்ந்து அனுபதிப்பதா என்பதை ஆராய்வதற்காகப் பாராளுமன்ற குழுவொன்றினை உருவாக்க வேண்டுமென்றார், அனைத்து கட்சிகளையும் சார்ந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘அடிமைகளுமல்ல பரத்தைகளுமல்ல’ என்ற பெண்கள் அமைப்பும் அதற்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து அதிபர் சர்க்கோசி சுதந்திர சிந்தனைகொண்ட நாட்டில் பெண்களை அடிமைபடுத்துகிற புர்க்காவுக்கு இடமில்லைஎன அறிவித்து, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்து அதைத் தடை செய்வதற்கான வழிமுறைகளை கூறுமாறு பணிக்க அண்மையில் அவ்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, பாரளுமன்றத்தில் வைத்து விவாதிக்க இருக்கிறார்கள். அதன்படி அரசுஅலுவலகங்களில் புர்க்காஅணிந்த பெண்களுக்கு சேவைகள் மறுக்கப்படலாம், பொதுவிடங்களில் புர்க்காவுடன் வரும் பெண்களை பொலிஸார் முகத்திரையை அகற்றவேண்டுமென கேட்டுக்கொண்டால் அகற்றவேண்டும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் யோசனைகளுள்ளன. பிரான்சு நாட்டில் வசிக்கும் சில இமாம்கள் உட்பட இஸ்லாமிய அமைப்புகளில் ஒரு சிலவும் புர்க்காவைத் தடைசெய்வதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். புர்க்காவை கட்டாயமாக இஸ்லாம் வற்புறுத்துவதில்லை, இது ஆசிய நாடுகளில் கலாச்சாரத்தால் இடையில் வந்ததென்றும் சொல்கிறார்கள். உண்மையில் புர்க்கா ஒரு பிரச்சினையே அல்ல. எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினராக ஒரு கூட்டத்தின் விருப்பத்தைத் தடைசெய்வது தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்க்க உதவுமென வாதிடும் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். ஆளும் கட்சியின் தலைவர் ஒரு விவாதத்தின்போது, எல்லா தரப்பு மக்களையும் கொண்ட நாட்டில் மக்கள் சேர்ந்து வாழ்வதற்கு திரையிடாத முகங்கள் அவசியமென்றார். முகமற்ற எதிராளியுடன் பேசுவதற்கு தமக்குத் தயக்கமாக இருக்கிறதென்றார்.

குளோதியா ஷி•பரும், ஐஸ்வர்யா ராயும் சட்டென்று பிறரை வசீகரிக்க முகமே காரணம். பிணமென்றால்கூட தலை அவசியமாகிறது. இறுதி அஞ்சலி செய்ய முகம் தேவை. குற்றவழக்குகளில் நேரில் பார்த்த சாட்சிகளுக்கான வலு என்னவென்று நாம் அறியாததல்ல. மனிதருக்கு மாத்திரமல்ல விலங்கென்றாலும் முகம் தேவை. முகத்தை உயிரியல், மொழி, இனம், சமூகச்சூழல் எனவும் தீர்மானிக்கின்றன. எண் சாண் உடம்பிற்குத் தலையும் பிரதானம், முகமும் பிரதானம். எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலாகப் பெறப்படும் தலைவரைப் பார்க்கணும், நண்பரைப் பார்க்கணும், பிள்ளையைப் பார்க்கணும், உறவைப் பார்க்கணும்’ என்று பதிலை வைத்திருக்கிறோம். பகையைக் கூட, நாலுவார்த்தை நாக்கைப்பிடுங்கிக் கொள்வதுபோல கேட்கவேண்டுமென்றால் முகம் தேவைப்படுகிறது. முகம் கொடுத்து பேசாதபோது வருந்துகிறோம். இந்தப் பார்வையும் பார்த்தலும் நமது விருப்பத்தின்பாற்பட்டவை, ஒருவரை நேர்கொண்டு பார்க்க அல்லது ஏறிட்டுப் பார்க்க நமக்கு விருப்பம் இருக்கவேண்டும், தவிர நாம் பார்க்க விரும்பும் நபருக்கும் நம்மைப் பார்க்க விருப்பம் இருக்கவேண்டும், இல்லையெனில் சந்திப்புகளோ அதன் தொடர்ச்சியான பின் நிகழ்வுகளோ இல்லை. யோசித்துப் பார்க்கிறபோது உலகை இயக்குவது பார்வை என்றாகிறது.

ஓர் உரையாடலை முழுமை படுத்துவதுவதற்கு அல்லது உயிர்ப்பித்து தருவதற்கு உரையாடலை நிகழ்த்தும் மனித முகங்களின் தசைநார்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. அநேக தருணங்களில் சொற்களின் உபயோகத்தை பிறமையாகத் தீர்மானித்து தம்மை முன்னிலைப்படுத்துவதில் முகபாவங்கள் காட்டும் அக்கறை கவனத்திற்கொள்ள தக்கவை. முகத்தின் ஊடாக அதன் உரிமையாளர் தமது மனோபாவத்தை வெளிப்படுத்துகிறார். எதிர்காலத்தில் ரொபோக்கள் மனிதரிடத்தைக் ஆக்ரமிக்ககூடுமென்பதன் அடிப்படையில் நிறைய அறிவியல் புனைவுகள் எழுதபட்டபோதிலும் வறட்சியான ரொபோக்களுடனான உரையாடல்கள் அச்சுறுத்துகின்றன. ‘டியர் எட்டுமணிக்கு காதல் செய்யணும் கட்டிலுக்கு வந்துடுண்ணு’ சொன்னால் ஊடல்செய்யாமல் கட்டிலுக்கு ரொபோ வரலாம், ஆனால் கூடலுக்கு முக பாவங்கள் அவசியம்.

மனிதர் அங்கத்தில் பிற உறுப்புகளைக் காட்டிலும் முகத்தையே நம்மால் நினைவுக்குக் கொண்டுவரமுடிகிறது. Prosopagnosia என்ற முகமறதி நோய்க்காரர்களுக்கு முகங்கள் மறந்துபோவதுண்டாம். அவர்கள் முகத்திலுள்ள கண், மூக்கு வாய் ஆகியவற்றைத் தெளிவாகப் பார்க்க முடிந்தபோதிலும், முகத்திற்குரியவரை நினைவுக்குக் கொண்டுவர ஆவதில்லையாம். உறவினர்கள் நண்பர்கள் தேடிப்போய் மூன்றாம்பிறை கமலஹாசன்போல நினவூட்டுவதற்கான சேட்டைகளெல்லாம் செய்தாலும் எடுபடாதென்கிறார்கள். சிலருக்கு Selective Prosopagnosia வருவதுண்டு ‘எங்கேயோ பார்த்திருக்கேன், எங்கேண்ணுதான் தெரியலை’ என்பார்கள். புத்தகத்தை இரவல் வாங்கிச் செல்லும் கடன்காரர்களும் அதில் அடக்கம். நம்மிடம் கடன் பட்ட பெரிய மனிதர்களை மாத்திரமல்ல பிறரையும் பொதுவாக நினைவுக்குக் கொண்டுவர முகங்கள் உதவுகின்றன. முகமூடிக்கொள்ளையர்களின் பெருக்கத்திற்கும் அதுவே காரணமென நினைக்கிறேன். மனித முகங்களை ஞாபகபடுத்துவதென்பது முகத்திலுள்ள கண்கள், மூக்கு, காது, வாய் சார்ந்த முகவமைப்பை நினைவுகொள்வதில்லை, அம்முகம்சார்ந்த பாவங்களைத் தேடி அம்முகத்திற்குரியவரை அடையாளப்படுத்துவதாகும். முகங்களைத் தேடுவதென்பது இயல்பாய் நம்முள் நிகழ்வதென்கிறார்கள். பிறந்த குழந்தைகள்கூட பார்வையோடிணைந்த முகத்தைத்தான் தங்கள் முதற் தேடலாகக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆக. முகத்தை அடையாளப்படுத்துவதென்பது சுமுகமான மனித உறவுகளுக்கான தொடக்கம். நமக்கு ஏற்கனவே அறிமுகமான மனிதர்களின் முகபாவங்களை எளிதில் புரிந்துகொள்கிறோம், ஆனால் அந்நியர்களின் முகபாவங்களை விளங்கிக்கொள்வதிற் சங்கடங்கள் இருக்கின்றன. கிராமத்தில் ஒரு முறை சினேகிதன் வீட்டில் கட்டியிருந்த உழவு மாட்டொன்றை அதன் முகம் பாவத்தைப் புரிந்துகொள்ளாமல் எதிரே நிற்கவும் அது முட்டித்தள்ள விழுந்ததில் ஒருமாதம் கையிற் கட்டுடன் அலைந்துகொண்டிருந்தேன்.

முகபாவங்கள் பல செய்திகளை உள்ளடக்கியது. அம்புலன்களின் கேந்திரமாக முகமிருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம், பிறர் முகத்திலிருந்து நம்மை வாசிப்பது ஒருபக்கமெனில் நம்மைநாமே புரிந்துகொள்ளவும் முகம் ஒத்துழைக்கிறது. ஒவ்வொரு நாளும் உடுத்துகிறபோது நமது முகத்தைப்பார்க்கிறோமென்றாலும் வாரத்தில் ஐந்து நிமிடம் கண்ணாடியில் எனது முகத்துடன் நடத்தும் உரையாடல் என்னை புரிந்துகொள்ள உதவியிருக்கிறது. பாரபட்சமற்ற ஓர் உரையாடல், ஒரு நோயாளிக்கும் வைத்தியருக்குமான இடையிலான உரையாடல் போன்றது. எனது அபிப்ராயங்கள், எனது கருத்தியல்கள், செயல்பாடுகள், காழ்ப்புகள், ஆசைகள், சுயநலங்களென பலதையும் கடுமையாக அது விமர்சிக்கிறது. கண்ணாடியில் பார்க்கும் சொந்த முகத்தைத்தவிர என்னை அச்சுறுத்துகிற மற்றொரு முகம் மனைவியின் முகம். ஒரு மனிதனை நன்கு புரிந்துவைத்திருப்பவர்களாக மூவரைக் கருதலாம் ஒன்று: அந்த மனிதன்; இரண்டு: நீண்டகாலமாகப் பழகிய நண்பன். மூன்று: அவன் மனைவி. இம்மூவருக்கும் நமது பலமென்ன பலவீனமென்ன, உண்மையென்ன பொய்யென்ன என்பதிற் தெளிவாய் இருப்பவர்கள். அவர்கள் மனதிற் நாம் ஏற்படுத்தியுள்ள பிம்பத்தை நன்கறிந்தவர்கள். மேடையில் பாராட்டும், பூச்செண்டுகளும் அளிக்கப்படுகிறபோது மனைவியின் பார்வை என்ன சொல்கிறது என்பதும் முகத்தின் தசைநார்கள் அசைந்துகொடுத்து வெளிப்படுத்தும் பாவங்களும் முக்கியம். அக்கண்கள் தராசுபோன்றவை, நம்மை துல்லியமாக அளந்து வைத்திருப்பவை.

——————————————————–

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா