விளம்பரம் தரும் வாழ்வு

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


இரண்டு நாளைக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றம், பஸ்களில் செய்யப்படும் விளம்பரம் குறித்து ஒரு தடையை விதித்திருக்கிறது. பஸ்களின் பின்புறம் இருக்கும் கண்ணாடி, பக்கவாட்டில் மேல்புறம் இருக்கும் கண்ணாடிகளில் விளம்பரம் செய்யப்படுகிறது. இதனால், பிற வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது, விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் பஸ்களின் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதனாலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று நீதிபதிகள் கருதியிருக்கின்றனர். அதனால், இத்தகைய விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

நீதிமன்றத்தின் அவமதிப்புக்கு நான் ஆளாக விரும்பவில்லை. அதனால், இந்தத் தீர்ப்பை நான் விமர்சிக்கப் போவதில்லை.

அவுட் ஆஃப் ஹோம் மீடியா (Out Of Home media – OOH media) என்பது சமீப ஆண்டுகளில் உருவான புதிய விளம்பர துறை. பெரிய பெரிய வணிக வளாகங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் நிறுத்தங்கள், ஷாப்பிங் மால்கள், இன்னபிற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விளம்பரம் செய்வதற்கு உருவாகியுள்ள வாய்ப்பையே ஓஓஹெச் மூலம் பயன்படுத்துகின்றனர். இதைப் போன்ற இடங்களில் எல்சிடி ஸ்கிரீன்களை நிறுவி, அதில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளைக் காட்டுவதோடு, விளம்பரத்தையும் சேர்த்துக் காட்டி வருகின்றனர். இந்தியாவில் இந்தத் துறை விரைவாக வளர்ந்து வருகிறது.

இதனால், பலருக்கும் வருவாய் பெருகியிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருள்களை ஓரளவுக்கு குறைவான கட்டணத்தில் விளம்பரம் செய்ய இந்த முறையைப் பின்பற்றி வருகின்றன. விளம்பர நிறுவனங்கள் எத்தனை இடங்களில் இந்த ஸ்கிரீன்களைப் பொருத்துகின்றனவோ, அவ்வளவு தூரம் அதற்கான வருவாயும் பெருகும். கடைக்காரர்களுக்கும் இதில் வருவாய் உண்டு. இடம் அவர்களுடையதுதானே.

இதேபோல், சிறிய முதலீட்டில், செலவில் அதிகபட்ச கவரேஜ், அதிகபட்ச ரீச் கிடைக்கக்கூடிய விளம்பர உத்திகளை பலரும் உருவாக்கி வருகிறார்கள். வழக்கமான பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களை விட, புதிய முறை விளம்பரங்கள் நல்ல பலனை அளிக்கின்றன. இதில் வேஸ்டேஜ் குறைவு. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது பேட்டையில் விளம்பரம் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட வயதுடையோரிடம் போய் சேரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு இந்த விளம்பர முறை உகந்தது. பல்வேறு காபி ஷாப்கள், பப்புகள் போன்ற இடங்களிலும் இத்தகைய ஸ்கிரீன்களை நான் பார்க்கிறேன். அங்கே காட்டப்படும் விளம்பரங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

இதன் தொடர்ச்சிதான் பஸ்களில் விளம்பரம். எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனம், கேரள பஸ்களில் டிஜிட்டஸ் ஸ்கிரீன்களை நிறுவி வந்தது. பஸ்ஸின் உள்ளே, ஓட்டுநருக்குப் பின்புறம் மேலே இருக்கும் இடம் ஒரு முக்கிய இடம். அதேபோல், பஸ்ஸின் சீட்களுக்கு மேலே இரண்டு பக்கமும் விளம்பரம் செய்ய உகந்த இடங்கள். பின்புற கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடி ஆகியவை இன்னும் பார்வைக்குத் தோதான இடங்கள். சொல்லப்போனால், அரசுக்கு வருவாய் ஏற்படுத்தித் தரும் இடங்கள். பல நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் பல பஸ்களில் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூரில், மலேசியாவில், இத்தகைய விளம்பரங்கள் 2000ஆம் ஆண்டுகளில் இருந்தே இருக்கிறது.

இதே அளவுக்கு விளம்பரங்களுக்கான இடத்தைக் கண்டுபிடிப்பதில் நம்ம ஊர் ஆள்கள் புத்திசாலிகள். பல ஆண்டுகள், தினத்தந்தியின் விளம்பரம், அதைக் கட்டி எடுத்துப் போகும் சைக்கிளின் முன் பார்க்கு கீழே அடிக்கப்பட்டிருக்கும். இது ஆதித்தனாரின் கண்டுபிடிப்பாக, முன்முயற்சியாக இருந்தால், நான் ஆச்சரியப்பட மாட்டேன். இன்னும் பல கிராமங்களில், இத்தகைய சைக்கிள்களைப் பார்க்கிறேன்.

நவீன வாழ்வில் அடுக்குமாடி குடியிருப்புகள் தோன்றியபின், இரண்டு முக்கிய பிரச்னைகள் தோன்றின. ஒன்று, குடியிருப்புகளின் வாசலில் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பலரும் வாகனங்களை நிறுத்தத் தொடங்கினர். வீடுவீடாக பொருள்களை விற்க வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்தன. இரண்டையும் கட்டுப்படுத்த, ஒவ்வொரு அடுக்கக வாசலிலும் ‘நோ பார்க்கிங்’ பலகையையும், ‘விற்பனையாளர்கள் உள்ளே வரக்கூடாது’ என்ற பலகையையும் எழுதி வைக்க வேண்டி வந்தது. இதில் ஓர் விளம்பர வாய்ப்பு இருப்பதை யாரோ ஒரு புத்திசாலி கண்டுபிடித்தார். அவ்வளவுதான்.

அடுத்த நாள் காலையில் இருந்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நோ பார்க்கிங் இரும்புத் தகடு தொங்கத் தொடங்கியது. கூடவே வீட்டா – ஈஸியா இங்கிலீஷ் பேசுங்க, பூர்விகா மொபைல் ஸ்டோர், சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட்… இரும்புத் தகட்டில் முக்கால் பாகத்துக்கும் மேல் விளம்பரம். கீழே ஒரே ஒரு வரி, நோ பார்க்கிங். இது எவ்வளவு தூரம் மோசமானது என்றால், ஒரே கேட்டில் நான்கு ஐந்து ஆறு இரும்புத் தகடுகள் தொங்கத் தொடங்கின. எல்லாமே இங்கே வாகனத்தை நிற்காதே, ஓடிப்போ என்று பலவித வண்ணங்களில் கத்தத் தொடங்கிவிட்டன.

இன்னொரு புத்திசாலி இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்தார். அது சென்னை எங்கும் பரவியிருக்கும் நடமாடும் இஸ்திரி போடும் கடைகள். மூன்று பக்கங்களும் பெயிண்ட் அடித்து, தங்கள் விளம்பரத்தைச் செய்யலாம் என்று யாருக்கோ தோன்றியிருக்கிறது. ஒரு ஓரத்தில், அந்தந்த இஸ்திரி கடைகளின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். முதன் முதலில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது, அஜந்தா சுகந்த சுபாரி பாக்கு நிறுவனம். இப்போது, இதே வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இருப்பது, சன் டைரக்ட் டிடிஎச் சேவை.

இன்றைய வாழ்க்கையில் விளம்பரம் என்பது தவிர்க்கவே முடியாத ஒருவித சேவை. விளம்பரதாரர்களுக்கு எப்படியேனும் மக்களைப் போய் சேரவேண்டும். பயனர்களுக்கு எப்படியேனும் தகவல்கள் கிடைக்கவேண்டும். பல சமயங்களில் இதுபோன்ற விளம்பரங்களில் இருந்துதான் முக்கிய சேவைகளை, அவர்களின் தொலைபேசி எண்களை, முகவரிகளை எல்லாம் நான் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். உதாரணமாக பொருள்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பும் மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸின் தகவல்களை இப்படிப்பட்ட விளம்பரங்களில் இருந்து பெற்றிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒருவர் தம் ஸ்கூலில் பிள்ளைகளுக்கு உற்சாகம் தரும் மேஜிக் ஷோ வைக்கவேண்டும் என்றார். உடனே, ஜேம்ஸ் 98000… என்று ஒரு எண்ணை எடுத்துப் போட்டேன். ஜேம்ஸ் சென்னையில் ஒரு சின்ன இடம் கூட பாக்கிவைக்காமல், கருப்பு மசியால் தன் பெயரையும் எண்ணையும் மட்டும் எழ�!
��தி
யே புகழ்பெற்றிருக்கிறார்.

நம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஒரு சின்ன வாசலைத் திறந்து வைத்தால், அதில் ஒவ்வொருவராக உள்ளே நுழைய நமக்குத் தெரியாது. முட்டி மோதி, அடித்துப் பிடித்துக்கொண்டு, கதவையே உடைத்துக்கொண்டு, துவம்சம் செய்துவிட்டு உள்ளே போகத்தான் முற்படுவோம். மக்கள்தொகை அதிகம் உள்ள, வாய்ப்புகள் குறைவாக உள்ள ஜனநாயக நாட்டின் பிரச்னை இது. முன்பு, சென்னையில் ஹோர்டிங்குகள் வைக்க சென்னை கார்ப்பரேஷன் அனுமதி வழங்கியபோது, ஊரையே ஹோர்டிங்குகளால் மறைத்த புண்ணியவான்கள் நாம். ஒரு சுபயோக சுபதினத்தில் உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் அதற்கு மங்கலம் பாடியது. இப்போது பஸ் விளம்பரங்களுக்கு உயர்நீதி மன்றம் மங்கலம் பாடியிருக்கிறது.

இதில் விளம்பர நிறுவனங்கள் நஷ்டமடையப் போகின்றன என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த வகை விளம்பரங்களைச் செய்துதரும் கடைசிமட்ட வேலைக்காரர்கள் நிலை கவலைக்குரியது. அவர்கள் இப்போது முற்றிலும் வேலை இழந்துவிடுவார்கள். ஹோர்டிங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதை மட்டுமே செய்துவந்த டிஜிட்டல் பேனர் நிறுவனங்களும் அவர் தம் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஒருவிதக் கட்டுப்பாட்டோ இந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். பேராசை பெருநஷ்டம் என்பது மீண்டும் ஒருமுறையும் நிரூபணமாகிறது.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்